Friday, June 25, 2010

உசுரே போகுதே

கடந்த சில நாட்களாக அடிக்கடி காதில் விழும் பாடல் ராவணன் படத்திலிருந்து
'உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே' என்ற பாடல். நான் முன்பே சொன்ன மாதிரி கேட்டுக் கேட்டு இப்போது அந்த பாட்டு ரொம்பவும் பிடித்து போய் விட்டது. எனக்கு எப்போதுமே
இதுபோன்ற நாட்டுப் புற பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது இவைகளை அன்றாட வழக்குப் பேச்சில் விவரிக்கும் பாடல்கள் மனதைத் தொடுவதில் ஆச்சரியம் இல்லை. நாட்டுப்புறப் பாடல்களில் நம்முடைய உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் சிரமப்பட்டு அழகுபடுத்தாமல், அப்படியே அப்பட்டமாக சொல்லுவதால் என்னால் அவை விவரிக்கும் விஷயங்களை உணர முடிகிறது. காதலன் காதலியிடம் பேசும்போது அப்படித்தானே பேசுவான்? இல்லை மிகவும் கஷ்டப்பட்டு பயங்கரக் கவித்துவமாய் 'மின்னலை பிடித்துத் தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி' என்று சொன்னால் கேட்பதற்கு அழகாக இருந்தாலும் செயற்கையாக இல்லையோ? வைரமுத்துவே அவரது காதலியிடம் பேசும்போது இப்படிப் பேசுவாரா என்ன? போதாக்குறைக்கு சினிமாக் காதலன் அபாரமான கற்பனையுடன்
'கோபுரமே உன்னை சாய்த்துக்கொண்டு உன் கூந்தலில் மீன் பிடிப்பேன்' என்றெல்லாம் பாடும்போது என் போன்ற ஞானசூன்யங்களுக்கு அது
'கூந்தலில் பேன் பிடிப்பேன்' என்பது போலத் தோன்றும். நமக்கு இந்த காதல் கத்திரிக்காய் இந்தஅனுபவம் எல்லாம் கொஞ்சம் கிடையாதா அதுதான் கஷ்டம்.
எப்பவும் போல எங்கயோ ஆரம்பித்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன்.

அந்த 'உசுரே போகுதே' பாட்டு கேட்கும்போது சில மணி நேரமே பார்த்த பெண்ணின் மீது எப்படி இப்படி காதல் வரும் என்று தோன்றியது. இல்லை அவள் அழகு அப்படி அவரைக் கொல்லுகிறது என்கிறாரா?( ஆங்கிலத்தில் Breath-taking என்பார்களே?)
ஆழ்ந்த காதல் உணர்வைப் பற்றி பேசும்போதெல்லாம் ஏன் கவிஞர் சாவைபற்றி பேசுகிறார் என்பது எனக்குப் புரிவதே இல்லை.
உதாரணமாக 'காதலன்' படத்தில் வரும் 'என்னவளே' பாடலில் வரும் வரிகள்:
இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி-
- நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் 'சந்தன தென்றல்' பாட்டிலிருந்து
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா


'பாம்பே' படத்தில் 'உயிரே உயிரே' பாடலில்:
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

'உயிரே' படத்திலிருந்து 'என் உயிர்பாடலில்:
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே
வந்து சேர்ந்துவிடு என்னை சேர விடு
இல்லை சாக விடு

ஏன் ஏன் ஏன் இப்படி?
காதலுக்காக வயதுப்பிள்ளைகள் தற்கொலை பண்ணிக் கொள்ளும்போதெல்லாம் யோசித்திருக்கிறேன் - வாழ்க்கையில் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது இதற்குள் விரும்பிய ஒரு பெண்ணோ பையனோ கிடைக்கவில்லை என்பதற்காக வாழ்வையே தியாகம் செய்யும் அளவிற்கு அது எப்படிப்பட்ட காதல் என்று. காதல் என்பது வாழ்கையின் ஒரு அத்யாயம்தானே அதுவே வாழ்கையா என்று.
பெரும்பாலும் ஆண்கள் பாடும் பாடல்களில்தான் இந்த மாதிரியான ஒரு செண்டிமெண்ட் அடிக்கடி வருகிறது. காதல்வசப்ப்படும்போது ஆண்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிரார்களா இல்லை வாழ்வு/சாவு என்ற இரண்டு சாத்தியம்தான் உண்டு என்று சொல்லி தான் காதலிக்கும் பெண்ணை blackmail செய்கிறார்களோ?

இந்தப் பாடல்களை எல்லாம் நிஜக்காதல் அல்ல சினிமாவுக்காக மிகைப்படுத்தப்பட்ட உணர்வுகள் என்று இந்த பிள்ளைகளுக்கு எப்படி புரிய வைப்பது?
சினிமாதான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்ல வரவில்லை. ஆனால்ஒரு பெண்ணோ பையனோ நம்மைக் காதலிக்கும்போது நம் ஒவ்வொருவருக்கும் நாமும் ஒரு ஹீரோ போன்ற உணர்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த பாடல்கள் எல்லாம் நம்மை பாதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று சொல்கிறேன்.
நமக்குப் பிடித்தவரோடு வாழ்க்கை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பது எல்லோரும் எதிர்பார்க்ககூடிய நியாமான ஆசைதான். இதையும் மிக அழகாக சொல்வார் கவிஞர் ' மின்சாரக் கனவு' படத்தில் ஒரு பாடலில் :
பெண்ணே பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அடஉலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற
பெண்ணோடு

உடன் சேர்ந்து உலகை ரசிக்க காதலியே மனைவி ஆவது பெரிய வரம்தான். ஆனால் கிடைக்காது போனால் வாழ்க்கை முடிந்து போக வேண்டாமே? ஆறு பில்லியன் மனிதர்களில் இன்னொருத்தி அதே போல் இல்லாமலா போவாள்?

வாழ்வு என்பது ஒரு பிரசாதம் போல அதை இன்னொருவருக்காக அழித்துக்கொள்வது என்பது வாழ்வையே அவமதிப்பது போலாகும். நாம் வாழ்வை அர்த்தமுள்ளதக்குவது நாம் கையில் இருக்க வேண்டும். அதை இன்னொருவரால்தான் அர்த்தப்படுத்தமுடியும் என்று நினைப்பது மடத்தனம். இதனால்தானோ என்னமோ எனக்கு " விண்ணைத்தாண்டி வருவாயா' படம் பிடித்திருந்தது. அவனும்தான் அலைந்துகொண்டிருந்தான்:
வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
சாவுக்கும் பக்கம் நின்றேன்
என்று.
அப்படி விழுந்து விழுந்து காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றாலும் செத்துப்போகாமல் வாழ்ந்து அதில் வெற்றியும் பெற்று காட்டுகிறானே அதானால்அந்தப் படம் எனக்குப் பிடித்தது.

சரி இப்பொழுது போய் இன்னொரு தரம் கேட்கிறேன் 'உசுரே போகுதே' பாடலை.

Tuesday, June 22, 2010

Raavan - என் மதிப்பீட்டில்

போன போஸ்டில் raaavan படம் பார்ப்பதற்காக நான் பட்ட பாடைப் பற்றிப் படித்த சில பேர் Raavan பட விமர்சனம் எழுதும்படி கேட்டிருகிறார்கள். பொதுவாக நான் பட விமர்சனங்கள் செய்வதில்லை. முக்கிய காரணம் எனக்கு சினிமா என்னும் கலைவடிவத்தைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாது. நான் சினிமா பார்ப்பது ஒரு பாமர ரசிகையாய். சில சமயம் ரொம்பவே அபத்தமான படத்தைப் பார்த்தால் நக்கலாக அதைப் பற்றி எழுதத் தோன்றும். மணி ரத்னம போன்றவர்கள் படம் 50% மட்டத்திற்குக் கீழே போகத்தான் வாய்ப்பே கிடையாதே?

நானும் பலரது விமரிசனகளைப் படித்தேன். முக்கியமான குற்றச்சாட்டு கதையே இல்லையே என்பது. ஓரு crime அதற்கு ஒரு motive பின்னர் ஒரு அருமையான chase பிறகு ஒரு denouement - இதற்கு நடுவில் முக்கிய கதாப்பாத்திரங்களிடம் உண்டாகும் மாற்றங்கள். எல்லாமே அளவாகத்தான் சொல்லி இருக்கிறார். "தசரத மகாராஜாக்கு மூன்று பெண்டாட்டிகள்' எனறு ஆரம்பித்து நீளமாக கதை வேண்டும் என்கிறார்களா என்ன? மணி ரத்னத்துக்கு அப்படிப் பேச வராது என்பது தெரிந்த செய்திதானே. அதே போல் அவர் யாருடைய நடத்தையையும் justify செய்யவோ condemn செய்யவோ முயற்சிக்கவும் இல்லை. இதுதான் நடந்தது எனறு சொல்லிவிட்டு 'யார் நல்லவன் யார் நல்லவன் இல்லை என்பதை நீங்களே தீர்மானம் செய்யுங்கள் எனறு விட்டு விடுகிறார். படத்தின் ராகினியைப் போலவே நாமும் யோசனையுடன் வெளியே வருகிறோம்.

இதெல்லாம் நடக்கும் களம் ஒரு அழகான காட்டுப்பகுதி. அதை எத்தனை அழகாக நமக்குக் காட்ட முடியுமோ அதனை அழகாக சந்தோஷ் சிவனும் மணிகண்டனும் காண்பித்திருக்கிறார்கள். இதிலேயே நாம் கொடுத்த பைசா வசூல். மற்றதெல்லாம் இலவச இணைப்பு தான்.

நடிப்புக்கு வருவோம் - காட்டில் வளர்ந்தவன், படிப்பில்லாதவன் என்றால் சில mannerisms தேவையா என்ன? அபிஷேக் பச்சனை காட்டுவாசியாககாட்டுவது கொஞ்சம் கஷ்டம். அந்த முகத்தில் ஆத்திரமும் கோபமும் பார்க்கும்போது நமக்கு ஏதோ ஒரு குழந்தை தலையிலும் கன்னத்திலும் அடித்துக்கொண்டு கோபப்படுவது போலத்தான் இருக்கிறது. யதார்த்தமான காட்டான் தோற்றம் வரவில்லை. பீரா முற்றிலும் காட்டான் இல்லை, சமுதாயத்தின் அநியாயங்கள், ஏற்ற தாழ்வுகளை எதிர்த்து போராளி ஆனவன் என்றால் இந்த பக் பக் பக் mannerism எல்லாம் எதற்காக? அனால் பாவம் முயன்றிருக்கிறார். அவருக்கு சரிப்படாத கதாபாத்திரம் அதனால் முயற்சிக்கேற்ற பலன் இல்லை.
ஐஸ்வர்யா- அழகோ அழகு. சரீரத்தை கஷ்டப்படுதிக்கொண்டு நடித்திருக்கிறார் - மலை ஏறி, தண்ணீரில் குதித்து, மழையில் நனைந்து - பாவம் நல்ல துணி கூட இல்லை. ஆனால் கிழிசல் கந்தலில் கூட படு அழகாக இருக்கிறார். (குடுத்து வைத்த ஜன்மம்) சில சமயம் அதிகமாகக் கத்துகிறார் - ஆனால் kidnap செய்து காட்டில் சிறை வைக்கப் பட்ட பெண என்பதினால் கொஞ்சம் கத்தினால் தப்பில்லை. என்னமோ அவருடைய அழகுதான் மனதில் நிற்கிறதே தவிர ராகினி என்ற அந்தப் பாத்திரத்தின் மன உறுதியும், தைரியமும் , fierce spirit டும் நன்றாக வெளிப்பட்டதா என்பதை யோசிக்க வேண்டி இருக்கிறது.
விக்ரம் - ம்ம்ம், அழகாக இருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றி இருக்கிறார். நடிப்பு எனறு பெரிதாக ஒன்றும் இந்த பாத்திரத்துக்கு வாய்ப்பு இல்லை.
கோவிந்தா: மனதில் நிற்கிறார். ஆனால் எதற்கு அந்த குரங்கு சேஷ்டைகள்? அவை இல்லாமலே ஹனுமான் பாத்திரத்தை வடிவமைத்திருக்கலாம். இன்னும் கௌரவமாக இருந்திருக்கும்.
ரவி கிஷேன்:பாத்திரத்துக்கு மிகவும் சரியான நடை, பாவம், பேச்சு, நடனம் எல்லாமே. படத்திலேயே மிகச் சிறந்த performance.
பிரியா மணி: சின்ன வேஷம் . கச்சிதமாக செய்திருக்கிறார்.

இசை: ஓஹோ எனறு ஒன்றும் இல்லை. ஆனால் ரஹ்மானின் இசை கேட்க கேட்க நமக்கு பிடித்துப் போய் விடும். இன்னும் சில வருடங்களுக்கு இந்தப் பாட்டெல்லாம் காதில் கேட்டுக் கொண்டேதான் இருக்கும். பிடித்துப் போய் விடும். எந்தப் பாட்டும் படத்தின் போக்கை விட்டு விலகாமல் ஒட்டி இருப்பது நன்றாக இருந்தது.

காஸ்ட்யும்: சவ்யசாச்சி - எனக்கு இவரைப் பிடிக்கும். மற்ற designers போல் நடைமுறைக்கு ஒத்துவராத உடைகளை இவர் கற்பனை செய்வதில்லை. ஐஸ்வர்யா முதலில் தோன்றும்போது ஒரு மஞ்சள் டிரஸ் போட்டு வருகிறாரே அது ரொம்ப நன்றாக இருந்தது. அப்புறம் காட்டில் அவருக்குக் கொடுக்கப்பட்ட புடவை.அதற்கு சம்பந்தமே இல்லாத ரவிக்கை. அதுவும். ஆமாம், குத்துவிளக்குக்கு பொட்டு வைக்க வேண்டுமா என்ன? எதைப் போட்டாலும் அழகாக இருக்கிறார் ஐஸ்வர்யா. அவருக்கு நம்ம தெருக்கோடி Tailor தெய்த்தது கூட சூப்பர் ஆக இருக்கும். (ஆனால் சவ்யசாச்சிக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்: இப்போதெல்லாம் புடவைக்கு மேட்ச் ஆக ரவிக்கை கிடைக்கவில்லை என்றால் ஏதோ ஒன்றை போட்டுக் கொண்டு சவ்யசாச்சி பாணி எனறு சொல்லி விட முடிகிறது. )
விக்ரமுக்குதான் கொஞ்சம் அதிகமாக மாடல் லுக் கொடுத்து விட்டாரோ எனறு தோன்றுகிறது. நமக்குத் தெரிந்த போலீஸ்காரர்கள் எல்லாம் தொந்தியும் தொப்பையும் இருக்கிறார்களா அது வேறே.
மற்றபடி ஓகே.

ஒரு வேளை இந்த இராவணன் விஷயத்தைக் கலக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு criticism இருந்திருக்காதோ என்னமோ? சந்தர்ப்ப சூழ்நிலையால் சட்டத்தை மீறுபவனிடமும் நல்லகுணங்கள் இருக்கலாம். சட்டத்தை காக்கும் கடமை வீரர்களிடமும் சாதாரண மனிதத்துவம், சில குறைபாடுகள் இருக்கலாம். யாரும் மொத்தமான் மகாத்மா அல்லது மொத்தமான துராத்மா அல்ல - எல்லோருமே கலவைதான் எனறு பீரு, ராகினி, தேவ் என்ற சாதாரண மனிதர்களின் கதையாகவே விட்டிருந்தால் இத்தனை எதிர்பார்ப்புகள் இருந்திருக்காதோ என்னமோ. அதனால் நிராசையும் இருந்திருக்காது.
எனக்கு ஒரே ஓரு பாயிண்ட் டில் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது - அதான் அந்த அக்னிப்ரவேசம் விஷயத்தில் மணியுடைய Take என்ன வாக இருக்கும் எனறு. அதை கரெக்ட் ஆக சொதப்பி விட்டார் மனிதர்.
மத்தபடி ஓகே. போய் பாருங்கள். பைசா வசூல்தான். அப்புறம் நாமும் கும்பலோடு சேர்ந்து படத்தை திட்டலாம் பாருங்கள்.

Friday, June 18, 2010

சினிமா படுத்தும் பாடு

நான் சின்னவளாக இருந்தப்போ சினிமாவுக்குப் போவது என்பது வருடத்தில் என்றைக்கோ ஒரு நாள் நடக்கும் விஷயம். டிக்கெட் விலை 60 பைசாவிலிருந்து 2:50 ருபாய் வரைக்கும்தான் என்றாலும் எல்லா படங்களுக்கும் போக முடியாது. மொதல்லே 2:50 ரூபாய் என்பதே பெரிய தொகை. பத்து இட்லி ஒரு ரூபாய்க்குக் கிடைத்த காலம் அது - ஒரு கூஜா சாம்பாரும் சட்னியும் சேர்த்து. 4 பேர்ஒரு படம் பார்க்க 10 ருபாய். செலவு அதிகம் என்பது ஒரு பக்கம். தவிர படங்கள் பார்த்து சின்னவர்கள் எல்லாம் கெட்டுப் போகக் கூடாது என்பதிலும் வீட்டுப் பெரியவர்களுக்குக் கவலை. ( அவர்கள் பாஷையிலே சொல்லவேண்டுமென்றால் 'சினிமா பாத்து காதல் கீதல்னு கெட்டுப்போயிட்டாக்க?' அவர்களைப் பொறுத்த வரையில் காதல் என்பது ரொம்ப கெட்ட விஷயம்.)
அதனாலே எதாவது ஒரு படம் உயர்வாக பேசப்பட்டாலோ அல்லது சரித்திரம் அல்லது புராணம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலோ அனுமதி கிடைக்கும். யாராவது பெரியவர்கள் அழைத்துக்கொண்டு போவார்கள். இன்டர்வலில் Popcorn ஐஸ் கிரீம் இதெல்லாம் கிடையாது. சில தியேட்டர்களில் காபி, டீ , கூல் ட்ரிங்க்ஸ், பிஸ்கட் கிடைக்கும் . ஆனால் அதெல்லாம் வாங்க மாட்டார்கள். 'வெளியில் கண்டதையும் சாப்பிட்டால் உடம்பு கெட்டுபோகும்' என்று சொல்லி விடுவார்கள். சில சமயம் வீட்டிலிருந்தே ஏதேனும் தின்பதற்கு பாக் செய்து கொண்டு போவது உண்டு. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது என்பதால் குள்ளமாக சின்னவராக இருக்கும் சிறுவர் சிறுமியரை 5 வயது என்று சொல்லச் சொல்வார்கள். 'எங்க வீட்டு பிள்ளை' படம் வந்த போது எனக்கு 7 வயது . சிதம்பரத்தில் ஒரு கல்யாணத்துக்கு அப்பா அழைத்துச் சென்றிருந்தார். கல்யாணத்துக்கு வந்திருந்த வாலிபக் கூட்டம் நைட் ஷோ படம் பார்க்க தீர்மானித்து என்னையும் அழைத்துச் சென்றது. நான் குள்ளமாக இருந்ததால் எனக்கு 5 வயது என்று சொல்லி விட்டார்கள். எனக்கோ பாதியில் யாரானும் வந்து வெளியே போக சொல்லி விடுவார்களோ எனறு பயம். நல்ல வேளை அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.

முதலிலேயே ரிசர்வ் செய்வது போன்று மெனக்கிடும் வேலை எல்லாம் கிடையாது. படம் கொஞ்சம் பழசானதும் கூட்டம் குறைவாக இருக்கும். அப்போது காட்சி நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகச் சென்று queue விலே நின்று டிக்கெட் வாங்குவோம். அநேகமாக கிடைத்து விடும். சில சமயம் திரைக்கு ரொம்ப பக்கமாக இருக்கும். அவ்வளவுதான்.
அப்போதெல்லாம் black டிக்கெட் என்றுஒன்று உண்டு. ஒவ்வொரு ஆட்டத்துக்கு (ஆட்டம்னா ஷோ) முன்பும் queue வில் நின்று இத்தனை டிக்கெட் வாங்கிவிடுவார்கள். அப்புறம் அவற்றை டிக்கெட் கௌண்டர் மூடியானதும் அதிக விலைக்கு விற்பார்கள். சில பேருக்கு இதே தொழில். இதில் பேரம் எல்லாம் நடக்கும். இரண்டரை ருபாய் டிக்கெட்சில சமயம் பத்து ருபாய் வரைக்கும் போகும். அதுவும் படம் வெளிவந்த முதல்நாள் என்றால் கேட்கவே வேண்டாம். அவ்வளவு கலை ஆர்வம் உள்ள மக்களும் உண்டு. இந்த மாதிரி எல்லாம் வாங்கும் அளவுக்கும் எங்களுக்கெல்லாம் ஆர்வமும் இல்லை, பணமும் இல்லை.

பத்தாவது வகுப்பு வந்த பின் ஸ்கூல் கடைசி நாள் அன்று வகுப்பு தோழிகளுடன் சேர்ந்து ஒரு படம் போகும் வழக்கம் ஆரம்பித்தது. இது ஒரு பெரிய பிக்னிக் மாதிரி எங்களுக்கு. அப்போது மாத்திரம் ஒரு நாள் முன்னதாகவே போய் வேண்டுமான எண்ணிக்கையில் டிக்கெட் வாங்கிவிடுவோம். அப்புறம் எல்லோரும் ஸ்கூலில் கூடி அங்கிருந்து ஒன்றாக 12 b பஸ்ஸில் கமலா தியேட்டர் போனது , பஸ்ஸில் ஜோக் அடித்து சிரித்துக் கொண்டே பயணம் செய்தது இதெல்லாம் வாழ்கையில் மறக்க முடியாத நாட்கள். இது காலேஜ் முடியும் வரையும் தொடர்ந்தது.

அப்புறம் கல்யாணம் ஆகி பெங்களூருக்கு வந்தபின் திரும்பவும் சினிமா பார்ப்பது அபூர்வமாகிப் போனது. எனக்கோ கருத்துள்ள படங்களுக்குப் போய் கண்ணீர் விட்டால்தான் கொடுத்த காசுக்கான மதிப்பு கிடைத்தது என்ற அபிப்ராயம். கணவருக்கோ சண்டை, action , james Bond மாதிரி படங்கள் பார்க்கத்தான் பிடிக்கும். எனவே குடும்பத்தில் கலவரம் வேண்டாம் என்று படம் போவதையே நிறுத்தி விட்டோம். தொலைக்காட்சியும் வந்து விட்டது. பையனுக்கும் கிரிக்கெட்டில் மாத்திரம்தான் ஆர்வம். தாத்தாவும் பேரனும் தொலைகாட்சியில் கிரிக்கெட் பார்பார்கள். எனக்குத் தாலி கட்டிய மனிதர் செய்திகள் பார்த்து புல்லரித்துப் போவார். நான் சனி ஞாயிறில் மதியம் வரும் award winning படங்களைப் பார்த்துக் கண்ணீர் விடுவேன். இந்த காலகட்டத்தில் தியேட்டருக்கு போய் சினிமா பார்க்கும் அளவு ஆர்வம் இல்லை.

இப்போது இந்த multiplex எல்லாம் வந்தபிறகு திரும்பவும் தியேட்டரில் சினிமா பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். வழக்கமாய் படம் எல்லாம் வந்து 3 வாரம் ஆன பின், பேப்பர், blog எல்லாவற்றிலும் விமர்சனம் எல்லாம் படித்து, ஏற்கனவே பார்த்தவர்களின் அபிப்ராயத்தையும் கேட்டு அப்புறம் சாவகாசமாய் ஏதாவதொரு காலை ஆட்டத்துக்கு தோழிகளுடன் போய் வருவேன். அனால் இந்த Raavan கதை சற்று வித்தியாசம் ஆனது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தை பற்றிய செய்திகளை படித்ததில் இதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. போதாததற்கு இளம் நண்பன் ஒருவன் (பிரவீன் - கையை தூக்கு! இதோ இவன்தான்) இந்த படத்தின் பாடல்கள், செய்திகள் என்று ஈ மெயிலில் அனுப்பி கடந்த ஒரு மாதமாய் எதிர்பார்ப்பை அதிகரிக்கப்போக தமிழ், ஹிந்தி இரண்டு வடிவங்களையும் பார்க்க வேண்டும் என்று மாட்டுப்பெண்ணும் நானும் தீர்மானித்தோம். இதற்கு நடுவே கர்நாடகத்தில் படத்தை வெளியிடப் போவதில்லை என்று முதலிலும், பிறகு சில அரங்கங்களில் மாத்திரம்தான் இந்த படத்தை வெளியிடுகிறார்கள் என்றும் வரிசையாக செய்திகள். இன்று காலை வரை எந்தெந்த தியேட்டர்களில் படம் வெளி ஆகிறது என்று சரியாகத் தெரியவில்லை.

நானும் காலையிலிருந்து இன்டர்நெட் மூலமாய் டிக்கெட் புக் செய்யலாம் என்று பார்த்தால் வெளிவரப்போவதாகச் சொன்ன இரண்டு தியேட்டர்களிலும் இந்த படத்துக்கான காட்சிகளைப் பற்றிய விவரமே இல்லை. பத்து மணி வாக்கில் PVR இல் GOLD கிளாஸ் இல் ஷோ உண்டு டிக்கெட் ஆயிரம் ருபாய் என்று காண்பித்தது. நொந்து போய் விட்டேன். 'சரி இந்த வாரம் நாம் இதை பார்க்கப் போவதில்லை அகிலாவிடம் சொல்லி விடலாம்' என்று தீர்மானித்தேன். பாவம் பிரவீன் வேறே எங்களோடு போகிறேன் என்று சொல்லி இன்றைக்குப் போகாமல் உட்கார்ந்துகொண்டிருந்தான். 'சரி இந்தபடம் நமக்கு பொசிப்பு இல்லை. பின்னால் எப்போவாவது 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று தீர்மானித்தேன். 'சீ சீ இந்த பழம் புளிக்கும்' என்பது போல சில விமர்சனங்களில் படம் அவ்வளவு ஒண்ணும் பிரமாதமாய் இல்லை என்பதையும் பார்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.

அப்புறம் மெதுவாய் 1 மணி வாக்கில் திரும்ப தியேட்டர் website போனால் நாளை advance booking க்கான வாசல் திறந்தது. சரி டிக்கெட் இருக்கா பாப்போம் என்று போனால் மொத்த ஹாலும் காலி. இன்னும் யாருமே புக் பண்ணலை. 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பார்களே அது சரிதான் என்று நினைத்துக் கொண்டு டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்தேன். என் பேரு, கோத்ரம் எல்லாம் கேட்டு விட்டு ' எத்தனை டிக்கெட் வேணும்?' என்று கேட்டது. பிறகு 'சீட் தேர்வு செய்து கொள்ளவும்' என்று சொல்லி அனுமதி கொடுத்ததா, எனக்கு மொத்த ஹாலையும் காலியாகப் பார்த்ததில் சந்தோஷம் கரைகொள்ளவில்லை. கடைசிவரிசை என்று நினைத்துக் கொண்டு N வரிசையில் 3 நல்ல சீட் தேர்வு செய்தேன். பணம் எல்லாம் செலுத்தி விட்டு வெளியே வந்து படு குஷி ஆக அகிலாவுக்கும் பிரவீனுக்கும் மெயில் மெசேஜ் எல்லாம் போட்டு விட்டு படுத்தேன். பாதி தூக்கத்திலே ஏதோ நினைவு வந்தது. ராஜநீதி போனப்போ கடைசீலேர்ந்து ரெண்டாவது வரிசையில் பார்த்தோமே அது B Row இல்லையோ? அப்போ N எப்படி கடைசீயாக இருக்கமுடியும் என்று. ஆரம்பித்தது திரும்பவும் மனதிலே குடைச்சல். திரும்ப கம்ப்யூட்டர்,திரும்ப தியட்டர் வெப்சைட். போய் பார்த்தால் பெரிசா சிவப்பு கலர் லே ஸ்க்ரீன் அப்டீன்னு பட்டன் இருந்தது. அதுக்கு முதல் Row N Row! முதலில் புக் செய்த போது இது என் கண்ணில் படவே இல்லை - சத்தியமா சொல்றேன். போதுமா என் சமத்து? தேடித் தேடி முதல் Row அதுவும் ஒரு டிக்கெட் 275 ருபாய் குடுத்து! வாழ்க்கை வெறுத்துப் போச்சு.

அப்புறம் என்ன ஆச்சு என்று கேக்கறீங்களா ? இன்னும் 3 டிக்கெட் புக் பண்ணிட்டு மொதல் மூணையும் நாளைக்கு தியேட்டர்லே யாருக்காவது விக்கலாம்னு தீர்மானம் பண்ணினோம். அப்போதான் அந்த பழைய காலத்து black டிக்கெட் சமாசாரம் எல்லாம் நெனவுக்கு வந்துது. சந்தர்ப்பவசத்திலே தொழிலே மாறிப் போச்சு பார்த்தீர்களா, எல்லாம் நேரம்தான்.

Latest update: யாரோ friends கிட்டே கேட்டார்களாம் அகிலாவும் பிரவீனும். முதல் Row வானாலும் பரவா இல்லை வாங்கிக்கறோம் என்றார்களாம் அந்த அப்பாவிகள்.
எந்தரோ மகானுபாவுலு வால் அந்தரிக்கு நா வந்தனகளு.


அப்புறம் இன்னொரு சமாசாரம்:
Gold classலே டிக்கெட் விலை 1000 ருபாய் என்று விற்கிறார்களே - அவ்வளவு பணம் குடுத்து யாரேனும் ஒரு படத்தை போய் பார்ப்பார்களோ?
வேண்டுமானால் இந்த தலைப்பில் ஒரு பட்டி மன்றம் வைக்கலாமே முனைவர்
ஞானசம்பந்தம் தலைமையிலே:
"ஆயிரம் ருபாய் கொடுத்து படம் பார்ப்பதற்குக் காரணம் அளவு கடந்த சினிமா ஆர்வமா அல்லது தாங்க முடியாத பணப்புழக்கமா?" என்று.
என்ன சொல்றீங்க?

Thursday, June 17, 2010

பக்தி பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

எங்க வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் சொந்தக்காரர் ஒரு சாமியார் பிரபலத்தின் பரம பக்தர். இந்த சாமியார் அண்மையில் பல வீடியோ படங்களில் கதாநாயகர். ஜெயிலிலிருந்து சில நாட்கள் முன்புதான் வெளியே வந்தார். இவருடைய லீலைகள் எல்லாம் அம்பலத்துக்கு வரும் முன்பு இந்த பக்தர் அவ்வபோது இவரது புத்தகங்களை எனக்குக் கொடுத்துப் படிக்க சொல்வார். ஒரு நாள் இவர் வீட்டுக்கு இந்த சாமியாரின் செருப்புகள் வந்தன. அதை வந்து பார்த்து வணங்கி ஆசி பெறும்படி அழைப்பும் விடுத்தார். சாமியாருடைய செருப்புக்கே இந்த மதிப்பு என்றால் சாமியாருக்கு எவ்வளவு இருக்கும் பார்த்துக் கொள்ளுங்களேன்.

எனக்கோ காவி கலரை பார்த்தாலே கொஞ்சம் அல்லர்ஜி. எனக்கும் என்னுடைய கடவுளுக்கும் இருக்கும் பந்தத்தில் மூன்றாம் நபருக்கு வேலை இல்லை என்பது எனது கொள்கை. இந்த ஸ்லோகம் பஜனை இதை எல்லாம் கூட நான் வெகுவாக கையாள்வதில்லை. எல்லாம் நேர் சம்பாஷணைதான். சில சமயம் ஆங்கிலம் சில சமயம் தமிழ் பல சமயம் ரெண்டும் கலந்த ஒரு கூட்டு. எதானும் நல்லது நடக்கும்போது தேங்க்ஸ் சொல்கிறேனோ இல்லையோ எதானும் தப்பா போச்சு என்றால் அன்னிக்கு சுவாமிக்கு அர்ச்சனைதான். And என்னோட கடவுளும் ok with it னுதான் நெனைக்கறேன். இது வரைக்கும் என் கண்ணை எல்லாம் ஒண்ணும் குத்திவிட வில்லையே.
So இந்த பக்கத்துக்கு வீடு மனுஷனோட தொல்லை தாங்காமல் அவரை பார்த்தால் ஓடும் அளவுக்கு ஆயிடுத்து.

நான் காலேஜ் படிக்கும்போது இந்த மாதிரிதான் ஒரு கும்பல் உண்டு. இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரியாது. லஞ்ச் பிரேக்கின் போது யாராவது தனியே உட்கார்ந்திருந்தால் போதும் அவர்களை 'டபக்' என்று பிடித்து விடுவார்கள். அப்புறம்' உங்கள் இந்து கடவுள்கள் எல்லாம் பொய். ஏசுதான் உண்மையான வழி' அப்படி இப்படி என்று சொல்ல ஆரம்பிப்பார்கள். நானோ முழுக்க முழுக்க ராமகிருஷ்ண மடம் நிர்வகிக்கும் பள்ளியில் படித்தவள். வளர்ந்ததும் இந்துமத சூழலில். ஏசுவும் சிவன் விஷ்ணு இவர்களைப்போல் இன்னொரு கடவுள் என்ற வரைக்கும்தான் தெரியும். முதல்நாள் இந்த மாதிரி ஒரு பெண் என்னிடம் பேச ஆரம்பித்ததும் எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. 'ஓஹோ அப்படியா? என்று பொதுவாக சொல்லி வைத்தேன். அதோடு அவள் போய் விடுவாள் என்று நினைத்தேன். அவளானால் 'நீ இந்த மாதிரி பொய் கடவுளை எல்லாம் நம்பினால் நரகத்துக்கு போவாய். அதனால் உடனே ஏசுவின் வழிக்கு மாறு' என்றதும் எனக்கு கிலி பிடித்து போயிற்று. நரகம் என்பது பற்றி பயங்கரமான விஷயங்கள் கேள்விப் பட்டிருக்கிறேன். அங்கே ஒரு பெரிய கொப்பரையில் கொதிக்கும் எண்ணையில் நம்மைப் போட்டு வறுப்பார்கள் ;இது போல் பல சித்திரவதைகளுக்கு நம்மை உட்படுத்துவார்கள் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். அங்கே போனால் கஷ்டமாச்சே என்று யோசனை ஆயிற்று. வீட்டில் வந்து அம்மா, அண்ணா இவர்களிடம் மெதுவாக இதைப் பற்றி சொன்னேன். வேண்டுமானால் சுவாமி அறையில் ஒரு ஏசு படமும் வைத்து விடலாமா , எதற்கு வீண் வம்பு என்று சொன்னேன். அவர்களானால் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்புறம்தான் மதமாற்றம் செய்வதுதான் இது போன்ற கும்பலின் வேலை. அதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள் என்று விளக்கினார்கள். அடுத்த முறை அந்த பெண் என்னிடம் பேச வந்தபோது "எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் நரகத்துக்குதான் போகிறார்களாம். அதனால் நானும் அங்கேயே போகலாம் என்றிருக்கிறேன்' என்று சொல்லி அனுப்பி விட்டேன். இந்த மாதிரி மற்றவர்களை நரகத்துக்குப் போகாமல் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அலைபவர்கள் அநேகம் பேர். நிஜமாகவே சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதற்கென்று ஒரு வாகனம் இவர்களிடம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்கள் எல்லாம் நம்மை முதலில் ஏறிக்கொள்ள விடுவார்களா என்ன? எல்லோரையும் பின்னாடி தள்ளிவிட்டு தாங்கள் முதலில் ஏறிக்கொள்வார்கள்.

முதலில் சொன்னேனே என் பக்கத்துக்கு வீட்டுகாரர் அவரைப் பார்த்தாலே ஓடி ஒளிந்து கொண்டிருந்தேனா? அப்புறம் இந்த மாதிரி அந்த சாமியாரைப் பற்றிய நிஜங்கள் எல்லாம் வெளியே வந்ததும் ஒரு நாள் நானே வலுவில் போய் அவரை நிறுத்திப் பேசினேன். எல்லாம் குறும்புதான் வேறென்ன?
'என்ன இப்படி எல்லாம் செய்தி வெளி வருகிறதே?' என்று கேட்டேன்.
உடனே அவர் 'இல்லை அவருடைய மகிமையைக் கண்டு பொறாமை கொண்டுள்ள சிலர் கிளப்பி விட்டிருக்கும் புரளி இதெல்லாம். அவருடைய சக்தியால் இதையெல்லாம் முறியடித்து விடுவார் பாருங்கள்' என்றார்.
தினமும் அவருடைய காரில் இந்த சாமியாரின் பெருமை பாடும் பஜனைகளை அலற விட்டுக் கொண்டுதான் காரைக் கழுவுவார். பிறகு தன கார் கண்ணாடியில் அவருடைய படம் ஒன்றை எல்லோருக்கும் தெரியும்படியாக வைத்துக் கொண்டு இந்தப் பாடல்களைப் போட்டுக் கொண்டு ஓட்டலுக்குச் சென்று காலை உணவருந்தி வருவார். இந்த வீடியோ எல்லாம் நிஜம் என்று போலீஸ் தரப்பில் நிரூபித்த பின்பும் இவர் அவரை மகான் பதவியிலிருந்து விலக்குவதாக் இல்லை.
அந்த சாமியாரே தான் மகான் இல்லை என்று சத்தியம் செய்தாலும் இவர் ஒப்புக் கொள்ள மாட்டார் போலிருக்கிறது.

இதுதான் சிலருடைய பிரச்சினை. அல்லது இது ஒரு விதமான மனோரீதியான கோளாறாகவும் இருக்கலாமோ என்னமோ. ஒரு விஷயத்தில் நம்பிக்கை வைத்து விட்டு அது தப்பு என்று தெளிவாக நிரூபணம் ஆன பின்பும் அதை விட்டு வெளிவர முடியாமல் இருப்பது. சிலருக்கு வாழ்வில் பிடிப்பு இது போன்ற ஏதேனும் ஒரு நம்பிக்கையின் மூலம்தான் கிடைக்கிறது போலிருக்கிறது. அதனால்தான் காவி உடை தரித்தவர்களுக்கு இத்தனை செல்வாக்கோ? ஒரு சிநேகிதி சொல்கிறாள்: 'நமக்கு சரியான மார்க்கத்தைக் காட்டுவதற்கு ஒரு குரு தேவை. நாம் அதற்குத் தயாராக இருக்கும் போது நம்முடைய சரியான குரு நம் முன் தோன்றுவார்' என்று.
எனக்கென்னவோ இதில் எல்லாம் நம்பிக்கை வரவில்லை. கடவுளுக்கும் நமக்கும் நடுவே இது போன்ற புரோக்கர், ஏஜென்ட் எல்லாம் தேவையா என்ன?

Tuesday, June 15, 2010

வடிவு

சில நாட்களில் நம் கடந்த காலத்திலிருந்து ஒரு சம்பவமோ அல்லது ஒரு நபரைப் பற்றிய நினைவோ திரும்பத் திரும்ப மனக்கண்ணில் வந்து போகும். சில சமயம் அதற்கான காரணம் நமக்குத் தெரியும் - ஒரு பாடலின் வரிகளோ அல்லது அவர்களின் பெயரைக் கேட்பதோ இதற்கான தூண்டுதலாக இருக்கும். சில சமயம் காரணமே தெரியாமல் இந்த flash backs மனதில் வந்து போகும். அது போலத்தான் இன்று காலையிலிருந்து எனக்கு வடிவைப் பற்றிய ஞாபகம்.

எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும்போது என்னுடைய அப்பா சொந்த வீடு வாங்கினார். நான் கல்யாணம் ஆகி செல்லும் வரை அந்த வீடுதான் என்னுடைய வாழ்கையின் background setting. இதற்கு முன்பு நாங்கள் வாடகைக்கு இருந்த வீடு கொஞ்சம் பக்கமாகவே இருந்ததினால் முதல் சில நாட்கள் பழைய நண்பர்களுடன் விளையாட அங்கேயே போய் விடுவேன். அடுத்த சில நாட்களில் புது வீட்டுக்குப் பக்கத்திலும் நண்பர்கள் பழக்கமானார்கள். இங்கே எனக்கு முதலாக பரிச்சயம் ஆனது வடிவுதான். வடிவு என்னை விட ஓரிரண்டு வயது பெரியவள் ஆனாலும் பார்ப்பதற்கு என்னை விட சின்னவள்போல் இருக்கும். அவர்களுக்கு எங்கள் தெருவிலேயே ரெண்டு பெரிய வீடுகள் உண்டு. ஒன்று எங்களுக்கு நேர் எதிர் வீடு. இன்னொன்று அதிலிருந்து ரெண்டாவது வீடு. இதில்தான் அவர்கள் இருந்தார்கள். எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு காலி ஆக இருந்தது. அதில் ஓரு பெரிய தோட்டம். வீடும் பெரிது. அதனால் இதுதான் எங்களது விளையாட்டு மைதானம். எங்கள் தெருவிலேயே பள்ளிக்கு போகும் வயதில் பத்து அல்லது பதினைந்து பேர் இருந்தோம். அடுத்த தெருவில் இருந்தும் சிலர் கிரிக்கெட் ஆடுவதற்கு வருவார்கள்.

ஓரு நாள் என் வீட்டு வாசலில் கதவைப் பிடித்துக்கொண்டு அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த போதுதான் அந்தப் பெண்ணை கவனித்தேன். என் வயதுதான் இருக்கும், எந்த விளையாட்டிலும் சேர்ந்து கொள்ளாமல் அவர்கள் வீட்டுச் சுவரின் உட்புறமாக இருந்த திண்ணை மேல் நடந்து கொண்டு அவளும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் இந்த நாடகம் நடந்த பின் அங்கிருந்தே "உன் பெயர் என்ன?' என்றாள். இதற்குத்தானே நானும் காத்துக்கொண்டிருந்தேன் . அடுத்த ரெண்டாவது நிமிடம் நானும் அவளோடு அந்த திண்ணை மேல். அவள்தான் வடிவு. இந்த பெயரே எனக்குப் புதிதாக இருந்தது. இது வரை இது போன்ற பெயரையே நான் கேட்டதில்லை. அவள் Holy angels' convent இல் ஐந்தாவது படிக்கிறாள் என்றும் தெரிந்து கொண்டேன். என்னை விட பெரியவள் ஆனாலும் என்னை விட ஒல்லியாக இருந்தாள் . மற்றவர்களுடன் விளையாடலாமா என்றேன். 'இல்லை எனக்கு ஓடினால் மயக்கம் வரும். மூச்சு வாங்கும். அதனால் நான் இந்த விளையாட்டெல்லாம் விளையாட மாட்டேன்' என்றாள். எனக்குப் புரியவே இல்லை. நானோ மரம் ஏறுவது, சுவர் ஏறி குதிப்பது, பம்பரம் ஆடுவது என்று எல்லாம் ஆடுவேன். ஏன் இவள் இப்படி சொல்கிறாள் என்று அம்மாவிடம் வந்து கேட்டேன். அம்மா சொன்னாள்: பெண் பிள்ளைகள் பொதுவாக இது போன்ற விளையாட்டிலெல்லாம் சேர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் வீட்டில் அது போல வளர்க்கிறார்கள் போல என்று. அத்தோடு நிறுத்தாமல் என்னையும் திட்டினாள்: 'நீதான் இப்படி ஆண் பிள்ளைகளுக்கு சமமாக குதிக்கிறாய்' என்று.
அடுத்த சில நாட்களில் அவளை தினமும் பார்ப்பது வழக்கமானது. சில சமயம் நான் மற்றவர்களுடன் ஆடப் போய் விடுவேன். இவள் திண்ணையில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பாள். சில சமயம் இவளுடன் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிப்பேன். வடிவுக்கு மூன்று அக்காமார் ஒரு அண்ணன். அக்கா எல்லாம் வீட்டுக்கு வெளியே கூட வர மாட்டார்கள். காலேஜ் போகும்போதும் குனிந்த தலை நிமிராமல் போய் வருவார்கள். இடுப்பு வரை ரவிக்கை, சேலையின் ஒற்றைத் தலைப்பை சுற்றி இடுப்பில் சொருகி இருப்பார்கள். கையும் பாதமும் மாத்திரம்தான் தெரியும். அவ்வளவு அடக்கம். ஏன் வடிவு விளையாடுவதில்லை என்றபோது அம்மா சொன்னது சரிதான் என்று நினைத்துக் கொள்வேன். அவளுடைய அம்மா முகம் முழுதும் மஞ்சள் பூசி இருப்பார்கள். காலையில் வெகு நேரம் பூஜை அறையில் இருப்பார்கள். அண்ணன் பழனி வடிவை விட ரெண்டு வயது பெரியவன். எங்களுடன் விளையாட வருவான். அவனுடைய பெற்றோர் கூட அவனை "தம்பி' என்றுதான் கூப்பிடுவார்கள். அவளுடைய அப்பா என்னிடம் மிகப் பிரியமாகப் பேசுவார்.

சில மாதங்களிலேயே அவளை என்னுடைய Best friend என்னும் அளவுக்கு நெருங்கிப் பழகி விட்டோம். யாரையும் பற்றிக் குற்றம் சொல்ல மாட்டாள். யாருடனும் சண்டை போட மாட்டாள். யாரும் அவளை எதுவும் சொல்ல மாட்டார்கள். இதற்கு முன்னாள் இருந்த தெருவில் கான்வென்ட் ஸ்கூல் போகும் பெண்களிடம் ஒரு superior attitude இருப்பதாகத் தோன்றும். இங்கிலீஷ் பேசத் தெரியாதவர்களைப் பற்றி ஒரு மட்டமான நினைப்பு. தாங்கள் என்னமோ ஓட்டைக் கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இங்கே வந்தவர்கள் போல. அனால் வடிவிடம் அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. மொத்தத்தில் ரொம்ப செல்லமான பெண்.

ஒரு ஆறு மாதம் ஆனா பின் அவளைப் பார்ப்பது அரிதானது. எப்போவாவதுதான் விளையாட வருவாள். எதிர் வீட்டையும் அவர்கள் ஓரு government ஆபீசுக்கு வாடகைக்குக் கொடுத்து விட்டார்கள். அவள் வீட்டுக்குப் போனால் 'அவளுக்கு உடம்பு சுகம் இல்லை. நாளைக்கு விளையாடலாம்' என்று அவளுடைய அக்கா அல்லது அப்பா சொல்லி விடுவார்கள். இப்படி சில நாட்கள் போன பின் ஒரு நாள் காலை வடிவு இறந்து போய் விட்டாள் என்று சொன்னார்கள். எனக்குப் புரியவே இல்லை. இது எப்படி சாத்தியம். வயதான்வர்கள்தானே இறந்து போவார்கள். அந்த வயதில் எனக்குத் தெரிந்து சிறியவர்கள் யாருமே இறந்து போனதில்லை. அவள் எப்படி இறந்து போனாள் என்று அம்மாவிடம் கேட்டேன் . 'ஏதானும் வியாதியாக இருக்கும்" என்றாள். எனக்கு வியாதி என்றால் என்ன அதனால் ஏன் இறந்து போக வேண்டும் என்றும் புரியவில்லை. மேலே கேட்டால் திட்டுவாளோ என்று பயம்.

சில சாயங்கால வேளைகளில் வடிவை பார்க்க வேண்டும் என்று தோன்றும். இனிமேல் பார்க்கவே முடியாது என்று நினைக்கும் போது அழுகையாக வரும். சாதல் என்பதைப் பற்றி நான் முதலில் தெரிந்து கொண்டது வடிவின் இறப்பிலிருந்துதான். அதனாலா இல்லை வடிவின் நல்ல குணங்கள் காரணமா தெரியவில்லை - அவளை நான் மறக்கவே இல்லை. இன்றும் கண்ணை மூடினால் ஒல்லியான அந்தச் சின்னப்பெண் என் கண் முன்னே தெரிகிறாள். வெகு நாட்கள் வரை வடிவு என்றால் ஒரு சோகமான உணர்வுதான் வரும். சில வருடங்கள் முன்னால் இலங்கை சென்ற போதுதான் தெரிந்து கொண்டேன் வடிவு என்றால் அழகு என்று அர்த்தம் என்று.

Monday, June 14, 2010

Iyer கல்யாணம் and இலை சாப்பாடு

இன்னிக்கு ஐயர் பிள்ளையின் திருமணம். 'ஐயர்' என்றதும் புரோஹிதர் என்று எண்ணி விடவேண்டாம். மாப்பிள்ளை பையனுடைய தந்தையின் பெயரே ஐயர்தான். பாலக்காட்டிலிருந்து மும்பையில் செட்டில் ஆன குடும்பங்கள்லே இது சகஜமான குடும்பப்பெயர். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயராக இருந்தாலும் தமிழ்நாட்டில் இந்த சமூகத்தை சார்ந்தவர்கள் இதை அவர்களுடைய குடும்பப்பெயர் போல சொல்வதில்லை. சென்னையில் 'ஐயர் வூட்டு பொண்ணு' அப்டீன்னு சொன்னால் அது பொதுவாக பிராமணர் வீட்டு பெண்ணை குறிக்கும்- ஐயங்கார் பெண்களையும் சேர்த்து. தமிழ் வலைப்பதிவை படிப்பவர்களுக்கு இதெல்லாம் சொல்லணுமா என்று நீங்கள் கேட்கலாம். சில சமயம் இன்றைய தமிழ் படங்களில் பிராமணர் பாஷை மற்றும் பழக்க வழக்கங்களை சித்தரிப்பதை பார்த்தால் சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
சரி இதைப்பத்தி இன்னொரு நாள் பேசுவோம். இப்போ சொல்ல வந்த விஷயத்துக்குப்போவோம்.

ஐயர் பிள்ளை இன்டர்நெட் மூலம் ஒரிய பெண்ணுடன் நட்பாகி பிறகு இருவரும் கல்யாணம் செய்து கொள்ள தீர்மானிக்க, அந்த கல்யாணத்துக்குதான் இன்று காலை நாங்கள் போய் இருந்தோம். Chetan Bhagat எழுதி இருக்கும் 'Two states ' புத்தகத்தில் வருவது போன்ற நறநரப்புகள் எதுவும் இருந்ததா என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு இரு குடும்பத்தினரும் காணப்பட்டனர். இத்தனைக்கும் கல்யாணம் முழுக்க முழுக்க தமிழ் பிராமணர் முறைப்படிதான் நடந்து கொண்டிருந்தது. சுத்தமாக புரியா விட்டாலும் பெண் வீட்டை சேர்ந்தவர்கள் பூரணமாக ஒத்துழைத்துக்கொண்டிருந்தார்கள். பாவம் கல்யாண பெண்ணே கொஞ்சம் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை மாதிரிதான் உட்கார்ந்திருந்தது. நல்ல வேளை அதற்கு ஒன்பது கஜம் புடவையை சுற்றி விட்டு கஷ்டப்படுத்தவில்லை. பிள்ளையின் அம்மா - அதான் மிசெஸ் ஐயர் - மாத்திரம் மடிசாரில் இருந்தாள்.

முஹுர்த்தம் ஒன்பதுலேர்ந்து பத்தரை. இந்த மாதிரி முஹுர்த்த நேரத்தில் ஒரு கஷ்டம் என்ன என்றால் சாப்பாட்டுக்கு ரெண்டும கட்டானான வேளை. ஒன்பது மணிக்குள் போய் டிபன் சாப்பிட்டு விட்டு முஹுர்த்தம் முடிந்து கிளம்பலாம் என்றால் சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்ற அன்புத் துன்புறுத்தல். சாப்பிட்ட டிபனே இன்னும் ஜீரணம் ஆயிருக்காது. திரும்ப சாப்பிட வேண்டும் என்றால் குறைந்தது ரெண்டு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். இல்லை முஹுர்த்த நேரத்துக்குப் போய் விட்டு சாப்பிட்டு வரலாம் என்றால் பத்தரைக்கெல்லாம் சாப்பாடு தயாராக இருக்காது. அதற்காக பனிரெண்டு மணி வரை உட்கார்ந்திருக்க வேண்டும். சாப்பிடாமல் வந்தாலும் மரியாதைக் குறைவாக இருக்கும்.

பத்து மணிக்கு போய் மங்களாட்சதை போட்டு விட்டு உட்கார்ந்திருந்தோம் வந்திருந்தவர்கள் உடுத்தி இருந்த பட்டு புடவைகளைப் பார்த்துக்கொண்டு. பதினொன்றரை மணிக்கு பிள்ளை வீட்டை சேர்ந்த மனிதர் வந்து சொன்னார் 'சாப்பாட்டு இலை போட்டாயிற்று' என்று. சரி என்று போய் பந்தியில் உட்கார்ந்தோம். அவியல் பால் பாயசம் மெனுதான் என்று கண்டிப்பாகத் தெரியும் - பாலக்காட்டு கல்யாணம் ஆச்சே. பொண்ணு வேண்டுமென்றால் வேறு ஊரிலிருந்து எடுப்போம் ஆனால் சாப்பாட்டு விஷயம் மட்டும் No compromises.
( பாம்பின் கால் பாம்பறியும் மாதிரி ஐயரின் நாக்கு ஐயர் அறியும்!)

இந்த இலை சாப்பாடை காண்ட்ராக்டில் விட்டுவிட்டாலே சொதப்பல்தான். இல்லை சாப்பாடு என்பது நிதானமாக குடும்பத்தினர் சேர்ந்து உட்கார்ந்து வேண்டுமானவற்றை கேட்டு விசாரித்து பரிமாறி ருசித்து சாப்பிடும் விஷயம். இதை standardize செய்வது கொஞ்சம் கொஞ்சம் கஷ்டமான விஷயம். சிலர் இலையில் முதலில் பரிமாறிய ஒரு ஸ்பூன் பொரியலே குப்பைக்கு போகும். சிலர் ஒரே வாயிலே அதைக் காலி செய்துவிட்டு தொட்டுக்க ஒன்றும் இல்லை என்று உட்கார்ந்திருப்பார்கள். இதற்காகத்தான் முதலில் மெனுவில் இருக்கும் எல்லா பதார்த்தங்களையும் எல்லாம் ஒரு சாம்பிள் மாதிரி பரிமாறிவிட்டு பிறகு சாம்பார் சாதம் சாப்பிட ஆரம்பிச்சதும் இன்னொரு தரம் கேட்டுக்கொண்டு வருவார்கள். அப்பொழுது யாருக்கு எது பிடிக்குமோ அதைக் போட்டுக்கொள்ளலாம். காண்ட்ராக்டில் கொடுக்கும்போது அவர்கள் கறி கூட்டு இவற்றை எல்லாம் இரண்டாவது முறை கேட்பதே இல்லை. முதலில் போட சாம்பிள் ஒரு ஸ்பூனுடன் நிறுத்திவிடுகிறார்கள். எகாநோமி மேஷெர் மாதிரி. ரெண்டாவது அவர்கள் நாம் சாப்பிட நேரமே கொடுப்பதில்லை. கறி எல்லாம் பரிமாறி, சாதம் போட்டு, சாம்பார் ஊற்றிய உடனேயே , ரசத்துக்கு சாதம் வேண்டுமா என்று கேட்டுக்கொண்டு இன்னொருவன். கூடவே ஒருவன் ரச வாளியுடன். . இதுபோல் அவர்கள் அவசரத்துக்கு நாம் அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டி இருக்கிறது. 'ஆச்சா ஆச்சா' என்று ரேஸ் மாதிரி. இந்த பதற்றத்துக்கு நடுவே ரசம் ஓடி வந்து பட்டுப் புடவையில் பட்டுவிடுமோ என்று வேறே டென்ஷன். இந்தக் கூத்திலே இலை அப்பளம் எல்லாம் பறக்கக் கூடாது என்று முனஜக்ராதையாக பேனை வேறே அணைத்து விடுவார்கள். நல்ல summer லே சுட சுட சாப்பாடு , கச கசன்னு பட்டுப் புடவை and no fan. இதை விட கொடுமை என்ன இருக்க முடியும்! அதுவும் பத்திரிகை வெச்சுக் கூப்பிட்டு செய்யும் கொடுமை!
இந்த கல்யாணத்தில் பரவா இல்லை - இரண்டாவது தரம் சைடு டிஷ் எல்லாம் கேட்டுப் பரிமாறினார்கள். ஆனால் மற்ற எல்லா விஷயங்களிலும் guilty as charged above. இந்த இரண்டாம் தரம் கேட்பதும் பின்னாடி வந்த பந்திகளில் கேட்க வேண்டும். . நாங்கள்தான் முதல் பந்திக்கே ஆஜர் ஆச்சே. so stock பற்றிய கவலை இருந்திருக்காது.

இவ்வளவு வியாக்கியானம் இப்போது பண்ணினாலும் - அவியல், ஓலன், எரிசேரி, பால் பாயசம் என்று ஒரு கை பார்த்துவிட்டுதான் வந்தேன். எங்களுக்கு எதிர் வரிசையில் ஒரு பஞ்சாபி மாமியும் மாமாவும் பார்க்கவே பாவமாக இருந்தது. முதலில் இலையில் பரிமாரியதையே சாப்பிடுவதற்கு திண்டாடிக் கொண்டிருந்தார்கள். அதற்கு நடுவே இந்த servers வேறே - ரைஸ் for ரசம்? மோர் ரைஸ்? ? அவியல்? பாயசம்? என்று ஒரே பிடுங்கல். அவியல், பால் பாயசம் என்றால் என்னவென்று அவர்களுக்கு கையேடு போட்டுக் கொடுக்க வேண்டும் போலிருந்தது. இந்த வடக்கத்தியர் பலரும் ' we like south Indian food' என்பார்கள் ஆனால் அவர்களுக்குத் தெரிந்த south Indian food இட்லியும் தோசாவும் தான் . கொண்டு வந்ததை எல்லாம் 'வேண்டாம் வேண்டாம்' என்று மறுத்து விட்டு குருவி போல இலையை கொத்திக்கொண்டிருந்தார்கள். சுற்றும் முற்றும் நாங்கள் எல்லோரும் இலைக்கும் வாய்க்கும் போட்டி போட்டுக் கொண்டிருந்ததை பார்த்து அசந்து போய் விட்டார்கள். பாவம் வீட்டிலே போயி இரண்டோ மூணோ பராத்தா பண்ணி சாபிடுவார்களாக இருக்கும்.

எனக்கு ஒரிசா சம்மந்திகளை நினைத்தால்தான் பாவமாக இருந்தது. அவர்கள் எங்கே போய் சாப்பிடுவது? ஒருக்கால் இங்கே கொறித்து விட்டு ஒரிசாவில் ரிசெப்ஷேனின் போது பதில் கொடுப்பார்களோ என்னமோ - ஈசாப் கதையில் வரும் கொக்கை போல.

Thursday, June 10, 2010

முதல் புள்ளி

ஆங்கிலத்தில் ஒரு வலைப்பதிவை சில வருடங்களாகவே எழுதி வருகிறேன். ஆனால் அவ்வப்போது தமிழில் எழுதினால் சில விஷயங்களை இன்னும் தெளிவாகச் சொல்ல முடியும் என்று தோன்றும். 'சரி முயற்சி செய்துதான் பார்ப்போமே' என்ற அசட்டு தைர்யத்தின் விளைவுதான் இந்த வலைப்பதிவு. ஆரம்பமே கொஞ்சம் கோணல்தான். பெயரை பாருங்களேன் - அதென்ன எண்ணப்பதிவுகள்? எண்ண ஓட்டங்கள், அல்லது எண்ணங்கள் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதெல்லாம் ஏற்கனவே பிறருக்கு சொந்தமாகி விட்டதால் நமக்கு மிஞ்சியது எண்ணப்பதிவுகள்தான். எண்ணங்கள் மாத்திரம் பதிவு செய்வது அல்ல எனது உத்தேசம். சில சமயம் உணர்வுகளும் வெளிப்படும். சில சமயம் நினைவலைகளும் சலசலக்கும்.
எந்தக்கோலம் என்று இன்னும் தெளிவாய் தெரியவில்லை. ஆனால் முதல் புள்ளி வெச்சாச்சு . பார்ப்போமே கோலம் எங்கே போயி முடிகிறது என்று.

விரைவில் வருகிறேன் அடுத்த புள்ளியோடு.