Showing posts with label தமிழ் மொழி. Show all posts
Showing posts with label தமிழ் மொழி. Show all posts

Thursday, July 29, 2010

மொழிப் பிரச்சினை

இந்த வலைப்பதிவில் தமிழில் எழுதுவது relaxing ஆக இருக்கிறது. சில சமயம் ஆங்கிலத்தில் எழுதுவது ஒரு பணி போலத் தோன்றும்.உணர்ச்சிபூர்வமான விஷயங்களை எழுதும்போது சில சமயம் சரியான வார்த்தை கிடைக்காது அப்படி கிடைத்தாலும் மொத்த உணர்வையும் சரியாக வெளிப்படுத்துவதாகத் தோன்றாது. அதென்னமோ 'those idiots' என்றுசொல்வதை விட 'அந்த அறிவு கெட்ட ஜென்மங்கள்' என்று சொல்லும்போது கோபம் இன்னும் சரியாக வெளிப்படுகிறது இல்லையா? ஆங்கில வார்த்தை ஆனாலும் பேசும்போது அழுத்திச் சொல்லி ஒரு சொல்லின் வீரியத்தை அதிகரிக்கலாம். ஆனால் எழுதும்போது அது கொஞ்சம் சாதுவாகி விடுகிறது. அதே போலத்தான் "I was enraged" என்பதை விட 'கொதிச்சுப் போயிட்டேன்" என்பதில் சரியாக உணர்வு வெளிப்படுவது போல இருக்கிறது. ஒரு வேளை என்னுடைய emotional self develop ஆகும் வயதில் நான் தமிழ் சூழலில் வளர்ந்ததினால் இருக்கலாமோ என்னவோ. அதே போல் யோசிக்கும் திறன் வளர்ந்த பருவத்தில் ஆங்கிலமே அதிகமாய் கேட்டும் படித்தும் இருந்ததினால் இன்றும் அறிவு பூர்வமான விஷயங்களை ஆங்கிலத்தில் சொல்வது எளிதாக இருக்கிறது.

ஒரு நாள் நான் என் தோழிகளுடன் படம் பார்ப்பதற்கு ஒரு mall க்கு சென்றிருந்தேன். அங்கே வந்திருந்த காலேஜ் கூட்டம் எல்லாம் ஆங்கிலத்தில்தான் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது என் தோழி சொன்னாள் 'இன்றைய நகர்புற இளைஞர்களுக்கு அவரவர் தாய் மொழியே தெரிவதில்லை. தெரிந்தாலும் அவர்கள் அதை பேசுவதை இழிவாக நினைக்கிறார்கள்", இன்னொரு தோழி சொன்னாள் " ஐயே இதெல்லாம் சும்மா வெளிவேஷம். எதிர்பாராமல் கன்னத்தில் ஒரு அறை விட்டுப் பார் "ஐயோ அப்பா என்றுதான் கத்தும்"
அப்போது பார்த்து ஒரு பெண் ஏதோ தடுக்கி கீழே விழப்போனது. ஆனால் அதன் வாயிலிருந்து "ஐயோ, அம்மா' என்றெல்லாம் வரவில்லை. 'ouch' என்றுதான் சொல்லிற்று. உடனே நான் என் தோழியைக் கேட்டேன் "இப்போது என்ன சொல்கிறாய்?" என்று. அதற்கு அவள் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது. அவள் சொன்னாள்: " பார். இவர்களெல்லாம் மேலை நாகரீகத்தில் மூழ்கிப் போய் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் திறனைக் கூட இழந்து விட்டார்கள். எல்லாவற்றிலும் ஒரு செயற்கைப் பூச்சு இருக்கிறது. இதனால்தான்
இவர்கள் நிஜமான உணர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வரும் கணங்களில் உடைந்து போய் விடுகிறார்கள். அப்புறம் மனவியல் மருத்துவர்களைத் தேடிப் போகிறார்கள்" என்று.

இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு இன்னும் புரியவில்லை. ஆனால் கலாச்சார பூர்வமாக நம்முடைய உணர்வுகளை முழுமையாக ஒரு அந்நிய மொழியில் வெளிப்படுத்த முடியுமா என்பது எனக்கு ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. நாம் சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படுபவர்கள். எல்லாவற்றிலும் ஒரு தீவிரம் - தீக்குளிக்கும் அளவிற்கும் போகத் தயங்காதவர்கள். ஆங்கிலேயர்கள் உணர்சிகளை மிகவும் மிதமாக வெளிப்படுத்தும் தங்களது 'stiff upper lip' பற்றி பெருமை கொள்பவர்கள். அப்படிப்பட்டவர்களின் மொழியில் நமது ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா என்பதுதான் எனது சந்தேகம். இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால் 'எந்த நாடானால் என்ன. கடைசியில் எல்லோரும் மனிதர்கள். எந்த ஊரானாலும், எந்தக் கலாசாரம் ஆனாலும் உணர்வுகள் என்பவை மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவானவைதானே. ஆழ்ந்த உணர்சிகளை வெளிப்படுத்த எந்த மொழியிலும் வகை இருக்கத்தானே செய்யும்" என்று.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?