Monday, October 22, 2012

நானும் கச்சேரிக்குப் போகிறேன்

எங்கள் ஊர் பக்கப்   பேச்சில்  ஒரு வசனம் உபயோகப்படுத்துவார்கள்: 'எங்கள்  அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் " என்று சொல்வார்கள்.'   கச்சேரி என்பது இந்தி கச்சேரி அதாவது கோர்ட்டு. பந்தாவாக வக்கீல் எல்லாம் கச்சேரிக்குப் போய் வேலை செய்து வருகையில் எடுபிடியாய் அவர்கள்  கூடப் போய் வருவார்களே அது போல் பெயருக்கு ஒரு உத்தியோகம் செய்பவர்களைப் பற்றிக் கிண்டலான பிரயோகம்  இது.  தஞ்சாவூர்  கிண்டல் பேச்சுதான்  பிரசித்தம் ஆச்சே.

இதைப்பற்றி இப்போ என்ன என்கிறிர்களா? அங்கேதான் விஷயமே இருக்கு. இன்றைக்கு  நானும் கச்சேரிக்குப் போகிறேன் என்று ஒரு சமத்தான வேலை செய்தேன். இது வேறே விதமான் கச்சேரி - பாட்டுக்கச்சேரி. பயப்பட வேண்டாம், கேட்கத்தான்.
இதற்கு முன்பு நான் கச்சேரிக்குப் போகும்  அழகை உங்களுக்கு விவரமாய் சொல்லவேண்டும்

இங்கே பெங்களூரில் காயன சமாஜத்தில் கடந்த வருடம் மெம்பர் ஆனேன். அதிலிருந்து முடிந்த வரையில் கச்சேரிகளைத்  தவற  விடுவதில்லை. அதுதவிர வேறு சபாக்களின் கச்சேரிகளும்  இந்த ஆடிட்டோர்யத்தில் நடக்கும். பெரும்பாலும் இவற்றுக்கு டிக்கெட் எதுவும் கிடையாது. கொஞ்சம் சீக்கிரமே போனால் சீட் கிடைக்கும். இல்லை என்றாலும் நீள விராந்தாவில் சேர்கள் போட்டுக் கொடுப்பார்கள். பாடகரைப் பார்க்க முடியாது. ஆனால் சுகமாக கேட்டுவிட்டு வரலாம். அப்பப்போ பின்னணிக்கு பெங்களூர் பஸ் ஹாரனும் சேர்ந்து ஒரு ப்யூஷன் எபெக்ட் கிடைக்கும்.

இதெல்லாம் எளிதாய் தோன்றுகிறதா? ஒரே ஒரு கஷ்டம் என்னவென்றால் சபா  இருக்கும் இடம்.  இந்த சபா 1905ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது மொத்த பெங்களூரையும் நடையிலேயே 2 மணி நேரத்தில் சுற்றிவந்து விடலாம். நல்ல ஷஹரான  இடத்தில் சபாவை ஆரம்பித்திருக்கின்றனர். இன்றைய பெங்களூரில்இந்த இடத்துக்கு காரில் போனால்  ஒரு மைல்  துரத்தில் நிறுத்திவிட்டு நடக்கவேண்டும். அத்தனை போக்குவரத்துள்ள இடம் இது. பிரதானமான மார்க்கெட்டுக்கு போகும் சாலை இது.  சபா வாசலில் இருக்கும் பார்க்கிங்கில்  சபா  ப்ரெஸி டென்ட், செக்ரட்டரி, இதர கமிட்டி உறுப்பினர்களுடைய  வாகனங்களை  நிறுத்தத்தான் இடம் உண்டு, எங்கள் வீ டு இருக்கும்இடத்திலிருந்து சபா 8- 9` கி மீதான்  என்பதால் முதல் கச்சேரிக்கு ஒரு ஆட்டோவில் போகத் தீர்மானித்தேன்.   அங்கங்கே மெட்ரோ ரெயிலுக்காக கட்டுமான வேலை நடந்துகொண்டிருப்பதில் அங்கும் இங்கும் சுற்றி ( எனக்கு தலை சுற்றி) அரை மணி நேரமாச்சு போவதற்கு . மீட்டர்  110 ரூபாய் காண்பித்தது. இந்த அநீதிக்குத்  துணை போகக் கூடாது என்று அடுத்த கச்சேரியிலிருந்து பஸ் ரூட்களை கண்டு பிடித்து நேரத்தே கிளம்பி பஸ்சில் போக ஆரம்பித்தேன்.

6 மணிக்கே கச்சேரிகள்  ஆரம்பிக்கும். 4 மணிக்குள் இரவுக்கான  சமையல் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ( திரும்பி வந்த உடனேயே  பசிக்குமே. நடுவில் வீ ட்டில் பிறர் சாப்பிட வேண்டுமே) நாய்களுக்கும்  உணவு கொடுத்துவிட்டு, 4. 30 க்குள் தயாராகி வீட்டை விட்டு வெளியேறுவேன். கையில் ஒரு பை. அதில் பர்ஸ், அப்புறம் சில்லரை பர்ஸ் தனியே ( இந்த ஊ ரில் பஸ் கண்டக்டர்களிடம் சில்லறையே இருக்காது ), ஒரு தண்ணி பாட்டில், கர்சீ ப், ஒரு சின்ன விசிறி , அவசரப்பசிக்கு  4 பிஸ்கட், கண்ணாடி, ஒரு புத்தகம், ஒரு குடை, செல்போன் இத்தனையும். வீ ட்டிலிருந்து பஸ் நிறுத்தம் 10 நிமிட நடை, அந்த முனையிலும் சபாவுக்கு 6-8 நிமிடம் நடக்கணும். இதனால் செருப்பெல்லாம் சரிப்படாது என்று காலில் வாக்கிங் ஷூ. நல்ல பிரிண்டட் சில்க் புடவை ( என்ன இருந்தாலும் கச்சேரிக்குப் போவதற்கு ஒரு பத்ததி உண்டில்லையா?) , காலில்  ஷூ, கையில் மேற்சொன்ன அத்தனையும் அடங்கிய ஒரு பெரிய பை இதுதான்  நான் கச்சேரிக்குப் போகும் கோலம்.

இதே கோலத்தில்தான் இன்றும் கிளம்பினேன். போன வாரம் சபாவுக்குப் போன போது கிடைத்த ஒரு கச்சேரி நோடீஸில் 22ம் தேதியிலிருந்து 25 ம்  தேதி வரையிலான கச்சேரிகள் பற்றிய விபரமும், எல்லோருக்கும் அனுமதி உண்டு என்றும் பார்த்தேன். முதல்  கச்சேரி 22ம்  தேதி டி . எம் கிருஷ்ணா . இன்றைக்கு.  நாளைக்கு சரஸ்வதி பூஜை. வீட்டிலும் நிறைய வேலைகள் இருந்தன. ஆனாலும் விட மனசு வரவில்லை. சரி ரெண்டு மணி நேரமாவது கேட்டுவிட்டு வந்துவிடலாம் என்று மேற்படி ஆயத்தங்கள் எல்லாம் செய்துகொண்டு சரியாய் 6 மணிக்கு சபா வாசலில் போய் நின்றேன். வாசலில் கார்கள் அவ்வளவு இல்லை. தசரா இல்லையா. அதான் கூட்டம்  கம்மி என்று  கொஞ்சம் சந்தோஷத்துடன் உள்ளே போனேன். விறாந்தாவில் சுவாமி சிலைகளுக்கு முன் விளக்கெல்லாம் ஏற்றி பூ போடு வைத்திருந்தார்கள். அப்புறம் நீளவாக்கில் மேஜைகள் போட்டு  கமிட்டி உறுப்பினர்கள் எல்லாம் ஏதோ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆயுத  பூஜை போட்டுவிட்டு நல்ல டிபன் போலிருந்தது. உள்ளே கால் வைத்தவள்  'ஒ சாரி' என்று வெளியே வந்தேன்.

பின்னாலே சபா  ஊழியர் ஒருத்தர் 'ஏனு மேடம்' என்று கேட்டுக்கொண்டு வந்தார்.  'கிருஷ்ணா  கச்சேரி...' என்று ஆரம்பித்தேன். 'அது அடுத்த மாசம்னா .. . 28 அக்டோபர் லேர்ந்து நம்ம சபா வருஷாந்திர இசை மாநாடு. அப்புறம் அடுத்த மாசம் அந்த ப்ரோக்ராம். ' என்றார்.

அசடு வழிந்தேன். தலையிலும் அடித்துக்கொண்டேன். சரி வந்ததற்கு பாத்ரூம் போய் விட்டுப் போகலாம் என்று பின்பக்கம் போக கால் வைத்தேன். 'அந்தப்பக்கமும் பூட்டி இருக்கு' என்றார் ஒரு கமிட்டி மெம்பர். என்னைப் பார்த்தால் அவருக்குக் கொஞ்சம் சந்தேகமாய் இருந்தது போல. அவரைச் சொல்லிக் குற்றமில்லை.

இப்படியாகத்தானே நானும் இன்றைக்குக் கச்சேரிக்குப் போய் வந்தது.

ஆனால் அங்கே இருக்கும்  அழகான 4 கோவில்களில் நுழைந்து நிம்மதியாய் தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இன்றைக்கு ஒவ்வொன்றிலும் பிரமாதமான் அலங்காரம். 33 வருடங்களாய் பெங்களூரில் இருந்தும் பார்க்காத கோவில்கள்.
அசட்டுத்தனமும இப்படி நல்லபடியாய் முடிந்தது.

Monday, April 25, 2011

பாம்புக்கதைகள்

பாம்பு என்றால் எனக்கு ரொம்ப பயம். இதில் என்ன புதுமை - எல்லோருக்கும்தான் பயம் என்கிறீர்களா? பலருக்கும் பாம்பைப் பார்த்தால்தானே பயம்? எனக்கு பாம்பு என்று எழுதிக் காட்டினாலே பயம். ஐந்து வயது இருக்கும் - அமாவாசை அன்று அம்மா சுவாமிக்கு முன் பாம்புக்கோலம் போட்டு தேங்காய் உடைத்து வைத்திருந்தாள். அந்தத் தேங்காயை தின்னப் பார்த்தபோது ‘ம்ஹ்ம். தேங்காயை தின்னக்கூடாது. பாம்பு கடித்துவிடும்’ என்று சொன்ன நினைவு. நைவேத்யத்துக்கு முன் தின்னக் கூடாது என்றாளா , என்ன சொன்னாள் என்பது சரியாய் நினைவில்லை. மனதில் அந்த வயதில் பதிந்தது அமாவாசை அன்று தேங்காய் தின்றால் பாம்பு கடித்துவிடும் என்ற தகவல். பின்னொரு அமாவாசை அன்று அதை மறந்து போய் தேங்காயைத் தின்று பல நாட்களுக்கு பயந்து நடுங்கியதும் நினைவிருக்கிறது. அந்த சமயத்தில்தான் இந்த பயமும் ஆரம்பித்ததோ என்னவோ. சமீப காலம் வரை பாம்பு என்று சொல்லக் கூட மாட்டேன் - ‘அது’ என்று தான் சொல்வேன்.
என் பயத்துக்குத் தகுந்தாற்போல சரியாய் ஒரு இடத்தில் எங்களது க்வார்டெர்ஸ் அமைந்தது. முதலில் வனாந்திரமாய் இருந்த இடத்தில் அரசாங்கம் தாராளமாய் 100 ஏக்கர் நிலம் ஒதுக்க அங்கேயே அலுவலகம் க்வார்டெர்ஸ் எல்லாம் கட்டிவிட்டார்கள். அப்புறம் என்ன, அவ்வப்போது ஊர்வன ஜந்துக்கள் எல்லாம் சுதந்திரமாய் தோட்டத்தில் ஊர, நாங்கள் நடுங்கிக்கொண்டே நடமாடுவோம். இந்தச் செடி வளர்த்தால் வராது அந்தக் கொடி போட்டால் வராது என்றார்கள். எல்லாம் செய்தும் சில நாட்கள் நன்றாய் உடம்பை நீட்டி முன் வெராந்தாவில் மத்தியான வெய்யிலில் ஒன்று பெரிதாய் படுத்திருக்கும். எனக்குக் குலை நடுங்கும்.
சுப்பிரமணிய ஸ்வாமிக்கு (முருகனுங்க, அரசியல்வாதி இல்லை) ஒவ்வொரு கிருத்திகை அன்றும் தேங்காய் உடைத்தால் கண்ணிலேயே படாது என்று என் சித்தி சொல்ல அதை செய்தேன். செய்த வரைக்கும் கண்ணில் படவில்லை என்பது நிஜம்தான்.
அப்புறம் சொந்த வீட்டுக்கு மாறியபின் இதைச் செய்ய விட்டுப்போய் நின்றே போச்சு. ஒருநாள் பார்த்தால் கிட்டத்தட்ட பதினைந்து அடிக்கு ஒன்று தோட்டத்தில். ஒரு அரைமணி படுத்துவிட்டு அப்புறம் நிதானமாய் பலாமரத்தில் ஏறிக் காலியாய் இருக்கும் பக்கத்து மனையில் போய் சுவாதீனமாய் படுத்துக்கொண்டது. இன்னொரு நாள் கம்ப்யூடெரிலிருந்து தலையை தூக்கி ஏதொ யோசனையுடன் ஜன்னலைப்பார்த்தால் அந்தப்பக்கம் மண்தொட்டியில் வைத்திருந்த செடியின் மேலெ ஒன்று தலையைத் தூக்கி நாக்கை நீட்டுகிறது. அரண்டு போய் ஜன்னலை அவசரமாய் சாத்தி கர்ட்டனை இழுத்துவிட்டு உள்ளெ போய் விட்டேன்.

இந்த அழகில் ஒரு நண்பர் ஒரு கதையை அனுப்பி அதைத் தமிழில் மொழி பெயர்க்கச்சொன்னார். ’ஓ செய்கிறேனே’ என்று ஆர்வத்துடன் கதையைப் படித்தால் கதை முழுக்கப் பாம்புகள். ஆனால் அருமையான கதை. ஒவ்வொரு வர்ணனையும், சம்பவமும் சித்திரம் போல வார்த்தைகளால் வரைந்து அருமையான நடை.
கதை இங்கே - படித்துப் பாருங்கள்:
http://www.vondanmcintyre.com/McIntyre-MistGrassSand.

என் மொழிபெயர்ப்பு (முதல் பகுதி) இங்கே

அதோடு எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தை வைத்து ஒரு சிறுகதையும் இங்கே. இந்தப் பிள்ளையின் தந்தையும் தாயும் நான் வேலை செய்த வங்கியில் கணக்கு வைத்திருந்தார்கள். இந்த வாண்டுப்பையன் - நாலு வயது இருக்கும் . வங்கிக்கும் வருவான். ஒருநாள் அவனுடைய தந்தை இந்த சம்பவத்தை சொல்ல அன்றிலிருந்து அந்தப் பையனைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் நடுக்கம்தான். அவன் பையில் என்னத்தைப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறானோ என்று. என்ன விஷயம் என்கிறீர்களா? படித்துவிட்டு சொல்லுங்கள்.

Sunday, April 10, 2011

ப்ரெசென்ட் சார்

கொஞ்ச நாட்களாய் காணாமல் போன காரணம் வேறொன்றுமில்லை இந்த வருடம் பெங்களூரில் அசாத்திய வெய்யில். எனக்கும் வயதாகிறதா தாங்கவில்லை.
ஸ்விட்ஜெர்லாந்து, ந்யு யார்க்கு இங்கே இருந்தெல்லாம் ‘ஐயோ இங்கே இன்னும் பனி கொட்டுகிறது” என்று எழுதி என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறென்.

அப்புறம் இந்த 52.11 வயதில் முதல்முறையாய் ஒரு பத்திரிக்கையில் நான் எழுதிய கதையை பிரசுரித்திருக்கிறார்கள். படிச்சு அபிப்பிராயம் சொன்னீங்கன்னா ஊக்கமாய் இருக்கும். எப்படி திருத்திக்கலாம்னும் ஐடியா சொன்னா நன்னா இருக்கும்.
உங்கள் மறுவினையை எதிர்பார்க்கும்,
உஷா

Sunday, February 6, 2011

இந்திய ரயில் பயணிகளின் கவனத்துக்கு

என்னிடம் இந்திய ரெயில்வேசுக்கு ஏதோ பிணக்கு என நினைக்கிறேன். முன்னமேயே எனது சில கசப்பான அனுபவங்களைப் பற்றி இங்கு எழுதி இருக்கிறேன். ஒரொரு முறை பயணிக்க வேண்டிய நிர்ப்பந்த்தம் வருகையிலும் எனக்கும் கணவருக்கும் இதைப் பற்றி ஒரு வாக்குவாதம் நடக்கும்.
வை: விமானத்தில் தொந்தரவு இல்லாமல் போகலாம்.
நான்: ட்ரெயினில் ஏ.சி கோச்சில் போனாலும் தொந்தரவு இல்லாமல் போகலாம். விமானம் என்றால் பயண நேரத்துக்கு 4 மணி நேரம் முன்னால் புறப்பட வேண்டி இருக்கிறது ஒரு மணீநேர பிரயாணத்துக்கு . இங்கே இரவு ரயிலில் ஏறிப்படுத்துவிட்டால் ஊர். டிக்கெட் செலவும் பத்தில் ஒரு பங்குதான்.
வை: தூக்கம் சரியாய் இருக்காது. பாத்ரூம் நன்றாய் இருக்காது. யாரானும் தவறாய் நடப்பார்கள். பெட்டி திருடு போகும். விமானத்தில் அதெல்லாம் இருக்காதே.
நான்: ஏன் உங்கள் வாயில் நல்ல வார்த்தையே வராதா. ட்ரெயினில் போகும் எல்லோருக்கும் இதெல்லாம் ஆகிறதா என்ன? ஏதொ ஒன்றிரண்டு தரம் ஆவதயே நினைத்து பயந்து கொண்டிருந்தால் வெளியே கிளம்புவதே கஷ்டம். விமான சௌகர்யம் எல்லாம் எதற்கெடுத்தாலும் பழகிப்போனால் அப்புறம் கஷ்டம் ஆகிவிடும். கொஞ்சம் உடம்பை வருத்தப் பழக வேண்டும்.
வைத்தியநாதன் ஒப்புக்கொள்ள மாட்டார். நானும் விட்டுக் கொடுக்காமல் கண்களில் நம்பிக்கை நட்சத்திரத்தை வைத்துக் கொண்டு ”நம் ரெயில்வே ஒண்ணும் அத்தனை மோசம் இல்லை’ என சொல்லிக் கொண்டு ட்ரெயினில் போவேன்.

என் நம்பிக்கையைத் தகர்ப்பதே குறிக்கோள் என்பதுபோல ஏதானும் எனக்குத்தான் நடக்கும். ஒரு முறை சென்னையிலிருந்து வரும் இரவு ரயிலில் செகண்ட் க்ளாஸ் கோச்சில் என் பெர்த்தில் யாரோ ஒருவன் படுத்துக்கொண்டு அரக்கோணம் வரையில் இறங்கமாட்டேன் எனப் படுத்தல். அதிலிருந்து ஏ சி கோச்தான். இன்னொருமுறை சைட் பெர்த்தில் இருந்த என் வயதுப் பெண்மணியை ஒரு இளைஞன் தடவிப் பார்க்க, அந்தப் பெண்மணி சொன்னாள் அவன் குறி வைத்தது சிறு வயதான என் மருமகளைத்தான் இருக்கும். தவறுதலாய் அடுத்த பெர்த்தில் இருந்த அவளைத் தொட்டு விட்டான் என்று. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு. ஆனாலும் அதற்குப் பிறகு விழித்துக் கொண்டே பயணம் செய்தோம்.

இந்தத்தரம்.

என் சம்மந்தி வீட்டில் அவர்களது முதல் பேத்திக்கு ஆயுஷ்யஹோமம் கோயமுத்தூரில். குழந்தையைப் பார்க்கும் ஆர்வத்தில் சந்தோஷமாய் கிளம்பிப் போனேன். இரண்டு நாளைக்குத் துணிமணிகள். பரிசுப்பொருட்கள். இவ்வளவுதானே. விமானத்தில் அனுமதிக்கும் கைப்பெட்டி அளவில் ஒரு ட்ராலி பேட்டியே போதுமாய் இருந்தது. எனக்குப் பாதையோடு இருக்கும் சைட் பெர்த்தில் மேல் பெர்த். கிழே காலி. யாரும் வரவில்லை என்றால் அங்கே போய் படுத்துவிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில் வேக வேகமாய் ஒரு பெண்மணியும் இளைஞனும் ஏறி வந்தனர். ஆர் ஏ சி என நினைக்கிறென். சீட்டுக்கு கீழே பெட்டியை என் பெட்டிக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு பிள்ளை கிழே இறங்கும் முன் ட்ரெயினே நகர ஆரம்பித்துவிட்டது. மணி பத்தரை. தூங்கும் முன் அவள் யாரிடமொ போனில் பேசியது கேட்டது:’காலையில் 4 மணிக்கே ஸ்டேஷன் வருமாம். 3 30கு அலாரம் வைத்து என்னை கொஞ்சம் கூப்பிடுகிராயா?’
3 15மணி இருக்கும் . நான் ஒரு முறை கிழே இறங்கிப் போன போது அந்தப் பெண்மணி பெர்த்தில்இருந்தாள். நான் செருப்புத் தேடும்போது கொஞ்சமாய் தலையைத்திருப்பி பார்த்தாள் - ரொம்ப ஜாக்கிரதை, சமர்த்து போலிருக்கிறது என எண்ணிக் கொண்டேன்.
மறுபடி எனக்கு விழிப்பு வந்த போது கிழே காலி - ஐந்து மணி.
ட்ரெயின் அப்புறம் ஆடி அசைந்துஅரை மணி தாமதமாய் கோயமுத்தூர் போயிற்று. அதற்குள் என் உறவினர் 3 முறை போன் போட்டு 'எங்கே இருக்கிறீர்கள்?' என்றெல்லாம் விசாரித்து 'டாக்சி வெளியே காத்திருக்கிறது' என்று சொல்லி இருந்தார். ஒரு வழியாய் ஸ்டேஷன் வந்ததும் இறங்கிப் பெட்டியை எடுத்த போது ‘அட அகிலாவுடைய அமெரிகன் டூரிஸ்டெரையா எடுத்துவந்தேன்’ என யோசித்துக் க்கொண்டெ வெளியே வந்து விட்டேன்.
(நான் எடுத்துப்போன பேட்டி நீல எகொலாக் ஆனால் எனக்கு இப்போதெல்லாம் காலையில் மூளை அவ்வளவு சுறுசுறுப்பாய் இருப்பதில்லை. ஆழ்வார்பேட்டை ஆண்டவர் சொன்ன மாதிரி இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலக்கம்தானடா)
ட்ரெயின் தாமதமானதில் டேக்ஸி ட்ரைவெருக்குக் கொஞ்சம் கோபம் போலத்தெரிந்தது. கொஞ்சம் சிடு சிடு வென்றிருந்தார்.

ஏற்கனவே தாமதம்.விசேஷ நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. வேகமாய் போய் குளித்து தயாராக வேண்டுமே. விடு விடு வென்று டேக்ஸியில் ஏறி வீடு வந்தேன். குழந்தையைக் கொஞ்ச ஆசையாய் இருந்தது ஆனால் அது புதிய முகத்தை பார்த்ததும் சிணுங்கியது. 'சரி வாங்கி வந்த பொம்மையை வைத்து நைஸ் செய்யலாம்' என்று பெட்டியைத்திறந்தால் 6 டி ஷர்ட்டு, நைலான் புடவைஒரு ஆலிவ் ஆயில் புட்டி.அட்ரெஸ் எதுவும் இல்லை.
(இங்கே ஒரு BGM - சிவமணியின் ட்ரம்ஸ் அல்லது எம்பாரின் வயலின்உங்கள் விருப்பத்துக்கேற்ப போடுக்கொள்ளுங்கள் )

உடனே எனது சம்மந்தி ஸ்டேஷன் மாஸ்டருக்கு போனில் பேசி விபரம் சொல்ல அவர் ' யாரானும் உங்கள் பெட்டியுடன் வந்தால் கூப்பிடுகிறொம்’ என்று வைத்துவிட்டார். உடனே வா கம்ப்ளைன்ட் எழுதிக்கொடு என்று சொல்லவில்லை. எங்களுக்கும் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை.

சரி அடுத்தது நடபப்தைப் பார்ப்போம் என்று குளித்து, அகிலாவுடைய ரவிக்கை, புடவை எதோ அங்கு இருந்ததைசுற்றிக்கொண்டு மண்டபத்துக்குப் போயாச்சு. . அதற்குள் விஷயம் பரவி எல்லோரும் ஒருவர் ஒருவராய்
‘அடடா எப்படி ஆச்சு.? do you think it was deliberate or was it a genuine mistake?'
‘’ஒங்க பொட்டி கெடச்சுதா?’’
அதுலெ வேல்யூயபில்ஸ் ஜ்வெல்ஸ் ஒன்னும் வெக்கலியே?
’கெடைச்சுடும் கவலைப்படாதிங்கோ’ என்றெல்லாம்.
அக்ஷதை போட்டு ஆசிர்வாதம் செய்தாயிற்று. ஹோமம் ஆரம்பித்தது. நைசாய் நழுவிப்போய் ஸ்டேஷனில் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்து அப்படியே அந்த பாசெஞ்செரின் விபரம் எதானும் தெரிந்தால் வாங்கி வரலாம் என்று கிளம்பப் பார்த்தேனா, வழியில் சம்மந்தி பிடித்து விட்டார். ’தனியாய் எங்கே போவேள். ஹோமம் முடிஞ்சுடட்டும். யாரையானும் ஒங்க கூட அனுப்பறென். இன்னம் 1 மணி நேரத்திலே ஆயிடும்.’
அவர் சொல்வதும் நியாயமாய்ப் பட்டது. எனக்கும் ஊர் தெரியாது. சரி என்று உள்ளே வந்து உட்கார்ந்தேன். ஒரு மணி நேரம் ஆச்சு. வாத்யார்கள் நிதானமாய் ஹோமம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
சம்மந்தி மாமி என்னை பலருக்கும் அறிமுகம் செய்தி வைத்துக் கொண்டிருந்தாள்: ;
”அகிலா மாமியார். பாவம் காத்தாலெ ட்ரெயின்லெ இவா பொட்டி காணமெ போச்சு.’ உடனே அவர்கள் அவர்களுக்கு நடந்த ஒரு அனுபவத்தை சொல்லுவார்கள். மொத்தத்தில் நாலில் மூன்று பேருக்கு ரெயிலில் பெட்டி தொலைத்த அனுபவம் இருக்கிறது போலிருக்கிறது.
எனக்கோ நேரம் ஆக ஆக மனதுக்குள் குடைச்சல். மெதுவாய் சென்னைக்குப் போன் போட்டுத் தங்கையை போனில் கூப்பிட்டு IRCTC tkt booking சைட்டில் போய் எதானும் ஹெல்ப்லைன் இருக்கிறதா பார் எப்படியானும் அந்த பெர்த்தில் இருந்த ஆளின் விபரம் கிடைக்குமா பார் என்றேன்.
அரை மணியில் அவ்ள் கூப்பிட்டாள். தேடுவதற்கு அவர்களுக்கு pNR number அல்லது passenger name வேண்டுமாம். ஸ்டேஷனில் போய் வாங்கி வா என்றாள்.
சரி எப்படியும் ஹோமம் முடியும் முன் கிளம்ப முடியாது. நேரம் ஆனது ஆச்சு. ஒரு வழியாய் எல்லாம் முடிந்தபின்னரே போவதுதான் மரியாதை என்று பொறுமையாய் காத்திருந்தேன்.
காத்திருக்கும் நேரத்தில் மாமாவை பிடிப்போம் அவருக்கு ரெயில்வேஸில் யாரானும் தெரிந்தால் போனிலேயே இந்த விபரம் வாங்கித்தருவாரா பார்க்கலாம் என்று என் அம்மாவின் சகோதரரை போனில் கூப்பிட்டேன்.. அவர் கோயமுத்தூரில் ஒரு ரிடயர்மெண்ட் காலனியில் 15 வருடங்களாய் வசிக்கிறார். அவரது காலனியில் பலரும் அரசாங்கத்தில் உயர்பதவியில் இருந்து ரிடயர் ஆகி, பெண் பிள்ளை எல்லாம் வெளிநாட்டில் இருப்பதால் இது போன்ற காலனியில் வசிக்கிறர்கள். சமைக்க வேண்டாம். தினப்படி லாஜிஸ்டிக்ஸ் பற்றி கவலைப்பட வேண்டாம்.
மாமாவிடம் விபரம் சொன்னேன். அவர் ’இரு ஒரு ரெடயர்ட் ரெயில்வே சீஃப் எஞ்சினியர் எதிர் வீட்டில் இருக்கிறார் அவரிடம் பேசி திரும்பக் கூப்பிடுகிறென்’ என்று சொல்லி விபரம் எல்லா வாங்கிக் கொண்டார்.
மறுபடியும் ஒரு மணி நேரம் ‘கிடைத்ததா? கிடைத்ததா?’ என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
இதற்கு நடுவே பலவிதமான அட்வைஸ்:
‘நீங்க ஒரு செயின் போட்டு பெட்டியை கட்டிடணும்” ( இது சரிதான். இனிமேல் ரயிலில் போவதென்றால் முதலில் எடுத்து வைக்க வேண்டியது ஒரு செயின்தான்.)
‘ஒரு எஃப் ஐ ஆர் லாட்ஜ் பண்ணிடுங்கோ” ( இதுவும் சரிதான். முதலிலேயே நான் இதை செய்திருக்க வேண்டும்)
"பெட்டியை ஸ்டேஷன் மாஸ்டரிடம் குடுத்துடாதீங்கோ அப்புறம் அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் ஹோல்ட் போயிடும்." ( இது தவறு என்று பிறகு புரிந்தது. நான் இந்த ஸ்டேஷன் கம்ப்ளெயின்ட் கொடுத்து பெட்டியை கொடுத்திருந்தால் எனக்குநன்மையாய் இருந்திருக்கும்.)
இதெல்லாம் பட்டால்தானே தெரிகிறது!
நல்ல் வேளை ஒரு மணி நேரத்தில் மாமாவிடமிருந்து போன் - அந்த அசட்டின் முழு ஜாதகமும் கையில். பெயர், வஃப் ஆஃப், அட்ரெஸ், மொபைல் நம்பர், வீட்டு போன் நம்பர்எல்லாம்.
அவர்களுக்கு போன் பேசி அவர்கள் திருப்பூர் ரெயில்வே போலீஸ்காரனுடன் உட்கார்ந்திருப்பது வரை கண்டுபிடித்துவிட்டார் ரிடயர்ட் சீஃப் எஞ்சினியர்.
ஆஹா பெட்டி கிடைத்தே விட்டது என்ற சந்தோஷத்தில் அவர் கொடுத்த நம்பருக்கு போன் செய்தேன்.
'என்ன இப்படி இன்னொருவர் பெட்டியை எடுத்துப் போய் விட்டீர்களே ?' என நிதானமாய்தான் ஆரம்பித்தேன்.
உடனே அந்த மனிதர் என் மேல் பாய்ந்தார் ' என்ன சொல்றீங்க மேடம், தாராபுரத்துலே வீட்டுக்கு போனதும் தவறு தெரிந்து இங்கே திருப்பூர் ரயில்வே போலிஸ் ஸ்டேஷனுக்குவந்துட்டோம். எங்க மேலே தப்பு சொல்றீங்க?'
இது என் பெட்டியை எடுத்துப்போன பெண்மணியின் கணவர்.
பின்பு போனை அந்த ரயில்வே போலிஸ்காரரிடம் கொடுத்தார்: அவர் என்னிடம் " சரி மேடம், உங்க பேட்டியில் என்ன சாமான் எல்லாம் இருந்தது சொல்லுங்க?' என்றார். நான் சேப்டி பின் வரையில் விபரம் சொன்னதும், 'ஆமாம் உங்க பெட்டிதான். நீங்க என்ன பண்றீங்க...இங்க திருப்பூர் ஸ்டேஷனுக்கு வந்து அவங்க பெட்டிய கொடுத்துட்டு உங்க பெட்டிய வாங்கிட்டு போய்டுங்க" என்றார்.
அப்போது மணி மதியம் 2. மறுநாள் காலை 8 மணிக்கு நான் ஏர்போர்டுக்கு கிளம்ப வேண்டும். திருப்பூருக்கு டேக்ஸியில் போக வேண்டும் என்றால் மொத்தம் 5 மணி நேர பயணம் 2000 ருபாய் டேக்ஸி செலவு.
இது வரைக்கும் மனிதர்கள் ஒரு 'ஸாரி' கூட சொல்லவில்லை. என்ன மாதிரி மனிதர்கள் பார்த்தீர்களா.
'என்ன இது தவறு உங்களிடம். என்னைப் போய் அங்கு வர சொல்கிறீர்களே. இது நியாயமா? என்றதற்கு 'என்ன சும்மா தவறு தவறு அப்ப்டிண்றீங்க. நிங்களும்தான் தவறு பண்ணிருக்கீங்க?' என்றார் அந்த பெண்ணின் கணவர்.
!!!
(ஒரு வேளை அவர் மனைவி இருந்த கோச்சில் பிரயாணம் செய்ததே தவறோ? பின்னர் புரிந்தது நான் அவர்கள் பெட்டியை எடுத்து வந்தது தவறு என்று. )

கொஞ்சம் வாக்குவாதத்திற்குப் பிறகு முதலில் 'சரி கோயமுத்தூர் ஸ்டேஷனில் கொண்டு வந்து கொடுக்கிறோம் ' என்றவர்கள் பத்து நிமிடத்துக்குப் பின் போன் செய்து 'அதெல்லாம் வர முடியாது. நங்கள் இங்கு ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டோம். நீங்களும் அங்கே ஸ்டேஷனில் கொடுத்து விடுங்கள். எங்களால் அங்கெல்லாம் வர முடியாது' என்று விட்டார்கள்.
'சரி நானே வருகிறேன். டேக்ஸி செலவை ஷேர் செய்து கொள்ளுங்கள்' என்றதற்கு ' நீங்கள் ப்ளேனில் வருவீர்கள் அதற்கெல்லாம் நாங்கள் கொடுக்க முடியாது' என்று போனை வைத்து விட்டு பிறகு எனது காலை எல்லாம் கட் செய்து விட்டனர்.
கடைசியில் யாரையோ அனுப்பி பல கஷ்டங்களுடன் பெட்டிக் கையில் வந்த போது மணி நள்ளிரவு 12. பெட்டியை எடுத்துப் போன பெண்மணிக்கு வீட்டிலிருந்தபடியே சௌகர்யமாய் அவர்கள் பெட்டி கிடைத்தது. எல்லாத் திண்டாட்டமும் எனக்குத்தான்.
தெரியாத ஊரில் மாற்றுத் துணி கூட சரியாய் இல்லாமல், நாள் முழுவதும் பெட்டியைத் தேடி அலைந்து, பின்னால பணமும் செலவழித்து, மனதால் கஷ்டப்பட்டு திரும்ப வந்தால் போதும் என வந்து சேர்ந்தேன்.

இந்த அனுபவத்தில் கற்றதும் பெற்றதும்:
1. இறங்கும் முன் பெட்டியை சரி பார்த்து நம்முடையது இல்லை என்றால் உடனே கம்ப்ளயின்ட் செய்ய வேண்டும்.
2. நம் பெட்டிகளை செயின் போட்டுக் கட்டி விடுவது நல்லது.திருடிப்போனால்தான் என்றில்லை இப்படி மாற்றி எடுத்துபோனாலும் நமக்குத்தான் திண்டாட்டம். மனிதர்களில் நியாயமானவர்கள் மிகக் குறைந்து போய் விட்டார்கள்.
3.நியாயம் நம் பக்கம் இருந்து ஒரு பயனும் இல்லை. போலீசுக்கும் ரெயில்வேசுக்கும் நியாயத்தைப் பற்றிய கவலை இல்லை. ப்ரோசீஜர்தான் முக்கியம்.
4. இதில் சரியான ப்ரோசீஜர் என்ன என்பதை யாரும் நமக்குச் சொல்ல மாட்டார்கள். நாமே தெரிந்து வைத்துக் கொள்ளுவது நல்லது. ( அதற்குத்தான் இவ்வளவு விபரமும் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.)

எல்லாவற்றுக்கும் மேல் கற்றுக்கொண்ட வாழ்க்கைப்பாடம்:
இன்னொருவருடைய இக்கட்டான நிலைமையை நமக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ளுவது புத்திசாலித்தனம்.
In today's time it is not enough to be right and good, it is necessary to be smart.

Sunday, January 2, 2011

சொல்வனம்

பில்லி காலின்ஸ் என்று ஒரு அமெரிக்க கவிஞர். எனக்கு மிகவும் பிடித்த கவிஞர். இவர் கவிதைகள் மிகவும் எளிமையானவை. மிகச் சாதாரணமான ஒரு விஷயத்தை மிக அழ்காக சொல்வதுதானே கவிதையின் சிறப்பு? உதாரணமாய் மறதியைப் பற்றி ஒரு கவிதை. அதில் எப்படி மெது மெதுவாய் ஒவ்வொரு விஷயமாய் மறந்து போகிறது என்று நகைச்சுவையுடன் சொல்லிகொண்டே வருகிறவர் சடாரென்று ஒரு வரியில் மிக அழகான ஒரு சிந்தனையை வைக்கிறார் பாருங்கள்:

No wonder the moon in the window seems to have drifted
out of a love poem that you used to know by heart.


ஜன்னல் வழியே ஆகாயத்தில் கண்ணால் காணும் நிலவு, நாம் பாடம் செய்த ஒரு காதல் கவிதையிலிருந்து விலகி வெளிவந்தது போலத் தோன்றுகிறதாம்.
மறதியில் நமக்கு நிஜத்துக்கும் நினைவுக்கும் இருக்கும் இடைவெளி கூட மங்கிப் போகிறது என்பதை அழகாய் சொல்லும் வரி. காதல் கவிதை மறந்து போய் அந்தக் கவிதையுடன் சேர்ந்து உணர்ந்த நிலவு மட்டும் கண்ணெதிரே. அந்தக் கவிதையில் இருக்கவேண்டிய இது இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம்.
என்னைப் போல இந்த நிலையை அடைந்தவர்களுக்கு இது இன்னும் நன்றாகப் புரியும்.
சொல்வனம் என்றொரு இணையப் பத்திரிகை. நண்பர் ஒருவரும் அவரது நண்பர்களும் சில வருடங்களாய் நடத்தி வருகிறார்கள். நல்ல கட்டுரைகள், கதைகள் மற்றும் பல தரமான பகுதிகள். முடிந்தால் சென்று படித்து வரவும். விருப்பம் இருந்தால் நீஙகளும் எழுதலாம். அப்புறம் இந்த இதழில் பில்லி காலின்ஸின் மூன்று கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.
படித்து உங்கள் எதிர்வினைகளைப் பதிவு செய்யலாமே?


பி. கு: மறந்தே போனேன் பாருங்கள். என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, December 17, 2010

எங்க வீட்டு கல்யாணம்

சில வருடங்களுக்கு முன் டுபுக்கு என்ற வலைப்பதிவாளர் ஒரு கல்யாணத்தில் தான் கேட்ட சில சுவையான சம்பாஷணைகளைப் பதிவு செய்திருந்தார். அதை நான் மிகவும் ரசித்துப் படித்தேன். ஏன் என்றால் இது போன்ற நிகழ்வுகள் நம் கல்யாணங்கள் எல்லாவற்றிலும் பொதுவான ஒன்று - நம் எல்லோர் வீட்டிலும் இது போல ஒரு மாமா , சித்தி, அல்லது அத்திம்பேர் இருப்பார். அவரை யாரானும் சிறிசுகள் கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். இல்லை விவரமான பெரிசுகள் என்றால் அவர்கள் சிறிசுகளை கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். கல்யாணத்துக்குக் களை கூட்டுவதே இது போன்ற விஷயங்கள்தான். மற்றபடி காசி யாத்திரை, ஊஞ்சல், பச்சைப்படி என்று அதெல்லாம் புரோஹிதர் இயக்கத்தில் அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும். இவை எல்லாம் வீடியோவில் பிடிக்கப்பட்டு பத்திரப்பட்டுவிடும்; ஆனால் இந்த உபகதைகள் சிலருக்கு மட்டுமே தெரிந்து நாளடைவில் தொலைந்து போய் விடும்.

இந்தக் கல்யாணத்தில் அப்படி நான் கவனித்த சில சுவையான விஷயங்கள்:
Scene1
பிள்ளையின் மாமா மனைவியிடம்: ஏண்டி பாத்ரூம் உள்ளே போயிருக்கேன். கதவை போட்டுண்டு வந்துட்டே? இத்தனை நாழி கதவை தட்டிண்டிருந்தேன்.
மாமி: ஐயையோ சாரின்னா நான் கவனிக்கலை.
மாமா: ஆமாம் நான் இல்லைன்னு நீ என்னிக்காவது கவனிச்சாதானே?
( வடக்கே கல்யாணத்திலே மாப்பிள்ளையோட செருப்பைதான் ஒளிச்சு வெப்பா. இங்கே மாப்பிள்ளைக்கு மாமாவையே ஒளிச்சு வைக்கறா போலிருக்கு!!)

Scene2
ஒரு அத்தை பெண் (ஒ அ பெ): பொண்ணுக்கு என்ன பண்றா? புள்ளை ஆத்துலே ஏதானும் demand உண்டா?
இன்னொருத்தி: ஒண்ணுமே வேண்டாமாம். சேவை நாழி மாத்ரம் கேட்டாளாம். பிள்ளைக்கு சேவை ரொம்ப பிடிக்குமாம்.
ஒ அ பெ : போச்சுடா. சேவை யார் பிழியறது. ஒரு 5 பவுன் கூட வேணா போட்டுடலாம்.

Scene3
தங்கை என்னிடம்: கார் சாவியை எங்கே வெச்சு தொலைச்சே?
நான்: உன் பைலேதான் போட்டிருப்பேன் சரியா பாரு.
தங்கை: காணுமே.
ஒரு சித்தப்பா பெண்: என்ன காணும்?
தங்கை: என் கார் சாவி. இவ எங்கயோ வெச்சுத் தொலைச்சுட்டா.
அடுத்த 10 நிமிடத்தில் நான் போன இடமெல்லாம்:
'சாவி கெடைச்சுதா?'
"எங்கே தொலைச்சே?'
"வேறே என்ன காணும்?'
'நீ கொஞ்சம் நிதானமா இருக்கணும். ஆனாலும் பரபரப்பு.'
நேரம்தான்.
போதாக்குறைக்கு செருப்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு 8-10 வயது நண்டு சொல்கிறது:
"பெரியம்மாவுக்கு இதே வேலையா போச்சு. எதையானும் தொலைக்கிறது. அப்புறம் அதை தேடறது."
தேவையா?

Scene4:
பெண்ணின் அம்மா: பச்சப்படி எல்லாம் சுத்தி ஆச்சு. வாத்யார் எங்கே? அவர்தான் எப்படி உள்ளே கூப்டுண்டு போகணும்னு வந்து சொல்லணும்.
தங்கை: அவர் என்கிட்டே சொல்லிட்டு போனார்: "நீங்க ஊஞ்சல் பச்சப்படி முடிச்சு மேடைக்கு பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிண்டு வந்துடுங்கோ. நான் கொஞ்சம் சாப்டுட்டு வரேன். எனக்கு low sugar ஆயிடும்" அப்படீன்னு சொல்லிட்டு போனார்.
(இது எப்படி இருக்கு!இந்த நாள்லே யாரையும் நம்ப முடியலை சார்!!)

Scene5:
வீட்டு பெரிசு ஒண்ணு: ஏண்டி உஷா, தாலி கட்டினதும் ஜூஸ் ஒண்ணு கொடுப்பாளே. ஒண்ணும் காணுமே.
நான்: அதோ பாருங்கோ அந்த மூலைலே நின்னுண்டு ஒருத்தன் குடுத்திண்டிருக்கான். வாங்கோ
அங்கே போனால் ஜூஸ் ஓவர்.
பெரிசு: நாக்கெல்லாம் வறண்டு போச்சு கொஞ்சம் தாராளமா கலக்கப்படாதோ. arrangements போறாது.
நான்: ஷூ வாய மூடுங்கோ, நாம்தான் பொண் ஆத்துக்காரா. யாரை போய் குத்தம் சொல்றது?
இந்த பெருசுங்க தொல்லை ஆனாலும் தாங்கலைபா.

Scene6:
காலையிலிருந்து பாண்டில் அலைந்து கொண்டிருந்த சித்தி பையனிடம் நான்: ஏன் வேஷ்டி எடுத்துண்டு வரலியா?
சித்தி பிள்ளை: எனக்கு இவா வேஷ்டி வெச்சு குடுப்பானு நான் எடுத்துண்டு வரலை. இவா எனக்கு வேஷ்டியே குடுக்கலை.
போச்சுடா. வாயை மூடிண்டு இருந்திருக்கணும்.


நாங்கள் நான்கு பேர் உறவினர்களுக்கு பக்ஷணம் கொடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு தூரத்து மாமி என்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். நானும் பக்ஷணம் கொடுத்து அனுப்பினேன். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் என் மன்னியிடம் பக்ஷணம் வாங்கிக் கொண்டிருக்கிறாள். பின்னால் கேட்டால் எங்கள் நாலு பேரிடமும் ஒரொரு பாக்கெட் வங்கிக் கொண்டு போயிருக்கிறாள். சம்பந்திகளை விட அதிகமாய் சீர் பக்ஷணம் அவள் வீட்டிற்குதான் போயிருக்கும் போலிருக்கு. அதான் நல்ல பெரிய பையாக கொண்டு வந்திருந்தாள். இனிமேல் வாசலில் இதற்கெல்லாம் செக்யூரிட்டி செக் போடவேண்டும் போல் இருக்கிறது.

நான் கலந்துகொண்ட கல்யாணத்தில் சில விஷயங்கள் ஆச்சரியம் அளித்தன. பெண்ணுக்கு ஒரு கிலோ அளவு வெள்ளி சாமான் வாங்கி இருந்தாலும் கல்யாண கலாட்டாவில் தொலைந்து போய்விடும் என்ற பயத்தில் எதையும் லாக்கெரில் இருந்து எடுக்கவே இல்லையாம். விரதம் எல்லாம் சத்திரத்தில் கொடுத்த பித்தளை பாத்திரங்களிலேயே செய்தார்கள். சில நேரங்களில் பேப்பர் கப்பில் கூட எண்ணை, குங்குமம் சந்தனம் எல்லாம் வைத்திருந்தார்கள். எனக்குக் கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட வெள்ளிபாதிரங்கள் உபயோகப்பட்ட ஒரே நாள் என் கல்யாணம் அன்றுதான். இப்போதெல்லாம் அதற்கும் உபயோகப்படவில்லை.

விரதத்திலிருந்து கட்டுசாதம் வரை நான் சாப்பிட்ட விருந்துகளின் எண்ணிக்கை 7. நடுவே நலங்கின்போது வேறே ஏதோ சமோசா, ஸ்வீட் என்று கொடுத்தார்கள். நல்லவேளை அது ஒன்று மட்டும் நான் தொடவில்லை. இப்போது 4 நாட்களாய் 'எத்தை தின்றால் பித்தம் தீரும்' என்ற நிலைமையில் இருக்கிறேன்.

சாப்பாட்டு ஹாலில் ஒரு uncle ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டார் - "எனக்காக ஒரே ஒரு இட்லி. இன்னும் ஒரு தோசை. முறுகலாய்' எனறு. அவரை வேறே நாலைந்து பேர் புகழ்ந்து தள்ளி விட்டார்கள் - 'இப்போதெல்லாம் பாருங்கோ. கல்யாண வீட்டில் பந்தி விசாரிப்பே இருக்கறதில்லை. வந்தியா, சாப்டியா எனறு ஆகி விட்டது. உங்களை மாதிரி யார் இப்படி கேட்கிறார்கள்' எனறு. அவ்ளவுதான் மனுஷர் அடுத்த பந்தியில் இன்னும் ஒரு படி மேலே போய் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். அவரைக் கொண்டு சமையலறை மூலையில் cacophonix மாதிரி கட்டிப் போட்டு விடலாமா என்ற ஒரு யோசனை கூட எனக்கு வந்தது. மனுஷன் சோறு போட்டே கொன்று விடுவார். அடுத்த கல்யாணத்தில் அவரை பார்த்தால் பட்டினி கிடப்பது உத்தமம்.

பெண் வீட்டில் பூஜை அறையில் ஒரு அடுக்கில் இரண்டு தேங்காய்களை ஊற வைத்திருந்தார்கள். என்ன விஷயம் எனறு விசாரித்தால் அப்படி போட்டு வைத்தால் மழை வராது என்றார்கள். கல்யாணத்துக்கு 5 நாள் முன் வரையில் புயலும் பெருமழையும் அடித்ததில் அரண்டு போய் இது போல் செய்திருக்கிறார்கள்.
இப்போது தெரிகிறது சென்னையில் பாதி சமயம் ஏன் மழை வருவதில்லை எனறு.

மற்றபடி எல்லாம் சௌக்கியம். உங்கள் சௌக்யத்துக்கு கமெண்ட் போடவும்.

Sunday, November 21, 2010

தாங்க முடியலைங்க..

உங்கள் வீட்டுப் பெண்ணுக்கோ பிள்ளைக்கோ திருமணம் என்று வைத்துக்கொள்ளுங்கள். யாரையாவது அழைப்பதற்கு நேரில் போக வேண்டும் என்றால் எந்த நேரத்தில் போவீர்கள்? உங்களுக்கு சௌகர்யமான நேரத்திலா அல்லது அவர்களுக்கு சௌகர்யமான நேரத்திலா?
ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது - பத்து மணி இதற்கு உகந்த வேளையா?
எங்கள் வீட்டில் எல்லாம் ஞாயிறு காலையில் நான்கு தினசரிகள் வரும். ஒவ்வொன்றாய் கொஞ்சம் மேய்ந்து விட்டு , அடிகாஸ் ஹோடேலோ அல்லது s.l.v. யிலிருந்தோ இட்லி அ தோசை வரவழைத்து மெதுவாக சாப்பிட்டு விட்டு, இன்டர்நெட்டில் மெயில் எல்லாம் பார்த்து, உறவினர்/ நண்பர்கள் யாரானும் சாட்டில் இருந்தால் கொஞ்சம் வம்பளந்து விட்டு பத்து மணி வாக்கில்தான் குளியலைப் பற்றிய யோசனையே வரும். சரி என்று தலை முழுக்க எண்ணை தடவி பாக்கி இருப்பதை முகத்தில் தடவி குளிக்க போகலாம் என்று எழுந்தால் வாசலில் பெல். எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியும் ஞாயிறு அன்று பனிரெண்டு மணிக்கு மேல்தான் வருவாள். சரி வேறே வழி இல்லை என்று எண்ணையில் தோய்த்தெடுத்த பஜ்ஜி போல ஹவுஸ் கோட்டுடன் வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்தால் இரண்டு மூன்று பேர். யாரென்று கூட தெரியவில்லை. ஏதானும் தேர்தல் வருகிறதோ , ஓட்டு கேட்க வந்திருக்கிறார்களோ அல்லது சென்செஸ் பேர்வழிகளா என்று பார்த்தால் 'பிள்ளை கல்யாணம்' என்று ஆரம்பித்தார்கள். அந்த காலத்து நண்பர்கள், பார்த்து பதினைந்து வருடம் ஆகி இருக்கும். அடையாளம் கண்டு பிடிக்கவே முழுதாய் ஒரு நிமிடம் ஆயிற்று. இத்தனை நாள் கழித்து பார்க்கிறோம், நானோ இந்த கோலத்தில். மானமே போச்சு. சரி உட்கார வைத்து விட்டு கொஞ்சம் டீசென்ட் ஆக உடை உடுத்தி வரலாம் என்று பார்த்தால் 'இல்லை உட்கார நேரமில்லை. நிறைய வீடு போக வேண்டும்' என்கிறார்கள். அங்கெல்லாம் போய் விட்டு இங்கே வரக்கூடாதோ! குளிக்கப் போன கணவரோ நிதானமாய் நிம்மதியாய் ஷவரில் வெந்நீரை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். Ignoring the elephant in the room என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல ஒரு conversation. எண்ணை சட்டி போல நான் இருந்த கோலம் அவர்களுக்கும் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். எனக்கோ 'பூமி பிளக்காதா உள்ளே போய் விட மாட்டோமா' என்ற நிலை. ஆனால் மேலே என்னமோ சாதாரணமாய் ' பெண் என்ன செய்கிறாள்? பிள்ளை எங்கே இருக்கிறான்? ' என்பது போல ஒரு சம்பாஷணை.
ஒரு வழியாய் அரை மணி நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.

முன்பெல்லாம் குறிப்பிட்ட நாட்களில் அல்லது நேரங்களில் சில காரியங்களை செய்யலாம் என்ற நியதிகள் , கட்டுப்பாடுகள் உண்டு. சில சமயம் அவை புரியாமல் இருக்கும். செவ்வாய்கிழமை செய்தால் என்ன, அமாவாசை அன்று போனால் என்ன என்று தோன்றும். நானே பல சமயம் இவற்றை எல்லாம் அபத்தம் என்று ஒதுக்கி இருக்கிறேன். நேற்றுதான் புரிந்தது எதற்காக இவை எல்லாம் ஆரம்பித்திருக்கலாம் என்று. இது போல் சில நியதிகள் இருந்தால் நமக்கும் நிச்சயமாய்த் தெரியும் இன்னின்ன நாட்களில் அ நேரங்களில் யாரும் வர மாட்டார்கள் என்று. அப்போது நாம் பாட்டுக்கு நிதானமாய் நம் அலுவல்களை முடித்துக் கொள்ளலாம். இன்றைய தேதியில் எல்லோரிடமும் தொலைபேசி இருக்கிறது. வரும் முன்பாக ஒரு கால் அடிக்க முடியாதா? குறைந்த பக்ஷமாய் நமக்கு முன் சென்ற வீட்டிலிருந்து கிளம்பும் போதாவது கூப்பிட்டு சொல்லலாமே. நாலைந்து பேர் இருக்கும் வீடு என்றால் பிரச்சினை இல்லை. யாரானும் ஒருவர் இருப்பார்கள். அவர்களை பேசிக்கொண்டிருக்கச் சொல்லி விட்டு நாம் தயாராகி வரலாம். எங்கள் வீடு போன்ற இடங்களில்தான் பிரச்சினை.
நான் ஒன்றும் இந்த social etiquette பற்றி மிகவும் கவலைப் படுபவள் இல்லை என்றாலும் விருந்தினர் முன்பு இருக்கவேண்டிய கோலத்துக்கு ஒரு எல்லை உண்டல்லவா. நமக்கே கூச்சமாய் இருக்கும் நிலையில் எப்படி ? சொல்வார்களே திரௌபதி சபைக்கு வந்த நிலையை பற்றி - கிட்டத்தட்ட அப்படிதான் எனக்கும். கிருஷ்ணன் வந்து ஒரு கண்ணியமான ஆடையை போர்த்த மாட்டாரா என்பது போல.

ஏற்கனவே இத்தனை எரிச்சலில் இருந்தேனா. இது போதாதென்று அவர்கள் பத்திரிக்கையைக் கொடுத்து கூடவே ஒரு சின்ன டப்பாவையும் கொடுத்தார்கள். என்னவென்று பிரித்துப் பார்த்தால் ஒரு சின்ன குங்கும கிண்ணம். உள்ளே ஒரு பொடி குங்குமம் கூட இல்லை. இது என்ன கூத்து? கல்யாணத்தில் மணமக்களுக்கு நாம்தான் ஆசீர்வாதமாய் பணமோ பொருளோ கொடுப்போம். அழைக்கப்பட்டவர்களுக்கு என்ன பரிசுப்பொருள்? வருவதற்கு ஊக்கப் பரிசா? இதையே முஹூர்த்தம் ஆன பின் தாம்பூலப் பையில் கொடுத்திருந்தால் கூட இத்தனை விசித்திரமாக இருந்திருக்காது. அதென்ன அழைப்புடன் ஒரு gift? முன்பெல்லாம் கல்யாணத்துக்கு அழைத்து வண்டி சத்தம் என்று ரயில் டிக்கெட்டுக்கான பணத்தையும் கொடுப்பார்களாம். அது போலவா இது?

என்னமோ போங்கள் மொத்தத்தில் ஒண்ணும் புரியவில்லை. இனிமேல் வாசலில் விசிடிங் hours ஒரு போர்டு போட்டு விட்டு மற்ற நேரத்தில் வருபவர்களுக்கு போஸ்ட் பாக்ஸ் தவிர ஒரு பெட்டியும் வைக்கலாம் என்று இருக்கிறேன் - இது போல பரிசுப் பொருட்களைப் போட்டு விட்டு செல்வதற்கு. அப்புறம் இது போல் பத்திரிக்கையோட gift கொடுத்த கல்யாணத்துக்கு போக முடியாவிட்டால் அப்படியே அவர்கள் கிளம்பும்போது அவர்கள் கையிலேயே கொஞ்சம் அட்சதையோடு gift கொடுத்தால் கோபித்துக் கொள்வார்களா என்ன? ச்சே ச்சே அதெல்லாம் கோவிக்க மாட்டாங்க. அவங்க ஆரம்பிச்சு வெச்சதைதானே நாமளும் பண்ணபோறோம், என்ன சொல்றீங்க... அவங்களுக்கு சௌகர்யமாய் வழக்கங்களை மாற்றிக் கொண்டிருப்பதைப்போல நாமும் கொஞ்சம் மாற்றினால் புரிந்து கொள்ள மாட்டார்களா என்ன?

ரொம்ப மண்டை காஞ்சு இருந்தேன். நேத்து தலைக்குப் போட்ட எண்ணை கூட பிரயோஜனப் படலை. அதான் உங்களிடம் சொல்லி கொஞ்சம் ஆறுதல் தேடலாமேன்னு. மனசுக்கு ஆறுதலாய் ஏதானும் சொல்லிட்டுப் போங்க.

Tuesday, November 2, 2010

தீப ஒளித் திருநாள்

என்ன உங்கள் வீட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலா ? தமிழக முதலமைச்சரின் ஆசியோடு நடக்கும் ஒரு தொலைக்காட்சியில் இதை தீப ஒளித் திருநாள் என்று சொல்கிறார்கள். கேட்க அழகாக இருக்கிறது ஏனென்றால் பலரும் தீபாவலி என்று வலிக்கும்படி சொல்வதை தவிர்க்கலாமே. இப்போதெல்லாம் பண்டிகைக் கொண்டாட்டம் என்றாலே புத்தாடை , விசேஷமான தின்பண்டங்கள் அப்புறம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திலும் காலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் அதிலும் முக்கால்வாசி சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்சிகள்தான். இதில் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் , இல்லை இரண்டு பெரிய சந்தேகங்கள். இப்படி நாள் முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டால் வீட்டில் எப்போது சமையல் எல்லாம் நடக்கும்? இல்லை சமையல் அறையிலேயே தொலைக்காட்சி வைத்திருப்பார்களோ? அப்புறம் இப்படி சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டே இருந்தால் கோவிலுக்குப் போவது, அக்கம்பக்க நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வாழ்த்தி வருவது அல்லது குடும்பமாய் உட்கார்ந்து விருந்து சாப்பிடுவது இதெல்லாம் எப்படி நடக்கும்? இவற்றுக்க்காகத்தான் மிக நீண்ட விளம்பர இடைவேளைகள் கொடுக்கிறார்கள் போல இருக்கிறது.
இந்த விசேஷ தினங்களில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சி பட்டிமன்றம். இதை நிதானமாய் மத்தியானமாய் காண்பிக்கக் கூடாதா? காலையில் 10 30 மணிக்குள் அவசரமாய் முடித்து விடுவார்கள். நான் சமையல் வேலை எல்லாம் முடிந்து டிவி முன் வரு முன் இதெல்லாம் முடிந்து போய் ஏதோ ஒரு அஜித் படமோ அல்லது விஜய் படமோ உலகத்திலேயே முதல்முறையாக காண்பிப்பார்கள். அப்புறம் மதியம் முழுவதும் முன் பின் தெரியாத நடிகைகள் அவர்கள் வீட்டு தீவாளி பற்றி புரியாத தமிழில் பேசுவார்கள். தொலைக்காட்சிக்காரகள் இந்நிகழ்சிகளைக் கண்டு ரசியுங்கள் என்று வேறே அடிக்கடி சொல்வார்கள். என்னத்தை ரசிக்கிறது?
இந்த பெங்களூரில் வேறே தீபாவலி கார்த்திகை என்றால் போதும் மழையும் காற்றும் தவறாமல் வந்து விடும். அப்புறம் என்ன தீபம் ஏற்றுவது? குடத்துக்குள்ளேதான் ஏற்றணும்.
அதென்னமோ இந்தப் புடவைக் கடைக்காரர்கள் விளம்பரங்களில்தான் தீபாவளி பார்த்தாலே ஆசைப்படும்படி இருக்கிறது. பெரிய பெரிய கோலங்கள், பட்டுப்பாவடையில் குட்டிக் குழந்தைகள் பட்டாசு கொளுத்துகிறார்கள், இளம்பெண்கள் அழகான போத்தீஸ் புடைவைகளில் வலம் வருகிறார்கள், எல்லோரும் குடும்பமாய் உட்கார்ந்து சிரிக்கிறார்கள். யாரும் தொலைகாட்சி முன் உட்கார்ந்து த்ரிஷா வீட்டு தீபாவளி பார்ப்பதே இல்லை.

உங்கள் வீட்டு தீபாவளி பற்றி சொல்லுங்கள்.
அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பி கு: ஒரு கேள்வி, எனக்குத் தெரிந்த சிலர் இந்த பதிவுகளை ஆங்கில ஸ்க்ரிப்டில் எழுத சொல்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியும் ஆனால் படிக்க வராதாம். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Wednesday, October 20, 2010

எந்திரன்

எந்திரன் படம் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன்பாக ரஜினியை புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் போன்ற படங்களில் ரசித்திருக்கிறேன். இவை தவிர அவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை அவர்கள், நினைத்தாலே இனிக்கும், குரு சிஷ்யன், தில்லுமுல்லு , தளபதி. நல்ல நடிகர். ஆனால் அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கி அவருக்குள்ளே இருக்கும் ஒரு சிறந்த நடிகரை அழித்து விட்டார்களே என்ற வேதனை எனக்கு எப்பவும் உண்டு.
படத்தை ரஜனிகாந்தால் மட்டும்தான் இப்படி ஒரு வெற்றிப்படம் ஆக்கி இருக்க முடியும். வேறு யார் நடித்திருந்தாலும் 'காதுலே பூ' என்று ஒதுக்கி இருப்பார்கள். அனால் அவருள்ளே இருக்கும் அபாரமான நடிப்புத் திறமைக்கு சவாலான ஒரு திரைக்கதை யாரிடமும் இன்று இல்லையா என்ற ஆதங்கம் மேலிடுகிறது.

நூறு மனிதர்களின் ஆற்றல் சக்தி படைத்த இந்த ரோபோட் டால் எத்தனையோ செய்ய முடியும் ஆனால் அதுவும் ஐஸ்வர்யாவின் அழகில் மயங்கி அவளை அடைய வேண்டும் என்று அலைகிறது. வேறு எந்தப்பெண்ணையும் இந்த நெருக்கத்தில் பார்க்காததினால் இருக்கலாம். அவள்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிகிறது. இன்னும் இரண்டு அழகான இளம் பெண்களை அதற்கு முத்தம் கொடுக்கச் சொல்லி இத்தனை கஷ்டங்களைத் தவிர்த்திருக்கலாம். எந்தப் பெண்ணாலும் தன்னுடைய ஹார்மோன் ப்ரவாஹத்தை தணிக்க முடியும் என்று அதனுடைய அறிவுக்குத் தெரிந்து போயிருக்கும்.
(அபிஷேக் பச்சன் கவனிக்கவும்: எங்கேயாவது ரோபோட் சல்லிசா கிடைத்தால் கூட வாங்கிண்டு வந்துடாதீங்க. இந்த மாதிரி ஒரு மனைவியை வீட்டிலே வெச்சுகிட்டு ரொம்ப ஆபத்தான விஷயம்!)
அது சரி அந்த ரோபோட் சிட்டி காட்டுகிற அளவு உணர்சிகளைக் கூட இந்த ஐஸ்வர்யா முகத்தில் காணுமே. ஒருக்கால் அவர்தான் ரோபோட்டோ என்ற சந்தேஹம் வரும் அளவிற்கு உணர்ச்சி காட்டாமல் வந்து போகிறார். அருமையாக நடனம் ஆடுகிறார். ஆனால் கொஞ்சம் அசடான கேரக்டர் - படிக்காமல் பரிட்சையில் பிட் அடிக்கிறது, ஊர் பேர் தெரியாதவனைப் போய் ஒரு நாள் பாய் பிரெண்ட் ஆக இருக்கிறாயா என்று கேட்டு பிரச்சினையை விலை கொடுத்து வாங்குகிறது என்று அசட்டுத்தனமான பெண் . இத்தனை புத்திசாலியான வசீ இந்த அசடை பேசாமல் சிட்டிக்கு விட்டுக் கொடுத்து விட்டு கொஞ்சம் புத்தியுள்ள பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்திருக்கலாம். படம் இண்டர்வல்லில் முடிந்து போயிருக்கும்.
பிரம்மாண்டம் காட்டி இருக்க முடியாது. 150 கோடி செலவழித்து ரெகார்ட் பண்ணி இருக்க முடியாது. ஷங்கருக்கு வேலை இல்லாமல் போய் இருக்கும்.
என்னவோ கொடுத்த நூறு ரூபாய்க்கு என்னென்னமோ வித்தை காண்பித்தார்கள்- பெரியவர்களுக்கான கார்டூன் படம் மாதிரி. மாச்சு பிச்சு என்று அழகான இடங்கள் எல்லாம் காண்பித்தார்கள். ஐஸ்வர்யாவுக்குக் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்ததை வசூல் பண்ணவேன்டியோ என்னவோ தேவை இல்லாத இடங்களில் எல்லாம் பாட்டுக்கள் வேறே. சத்தம் கொஞ்சம் அதிகம். காதில் ஏதோ ரீங்காரம் இருந்துகொண்டே இருந்தது.

ரஜினி படங்களில் காமெடி என்று தனி track தேவையே இல்லை. அவரே அருமையாக காமெடி பண்ணுவார். இங்கே சந்தானம், கருணாஸ் என்று தேவையே இல்லாமல் மொக்கையான காமெடி track. சத்தே இல்லாமல் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் கதையை பல நேரங்களில் கெடுக்கும் வகையில் இருந்தது அவர்கள் காமெடி.

அதெல்லாம் சரி... இந்த grade 2 , 3 என்பதெல்லாம் அரசாங்க லேப் லே தானே இருக்கும்? வசீகரன் அரசாங்க லேப் லையா சிட்டியை உருவாக்கி இருக்கார்? அப்படின்னா எப்படி சிட்டியை அவ்ளோ சுலபமா சானாவோட அனுப்பினார்? 4 மேல் அதிகாரிகள் கிட்டே triplicate லே authorisation வாங்கினால்தானே முடியும்?

அவ்ளோ ரகசியமா அந்த போரா அத்தனை ரோபோக்களை பண்ணி வெச்சிருக்கார்?அதுவும் ரெடி யா பவர் சார்ஜ் பண்ணி. எனக்கு எங்கே வீட்டுலே இருக்கற 4 மெஷின்களுக்கு ரெகுலரா பவர் கட் இல்லாமே பவர் வாங்கவே உயிர் போகிறதே?
இல்லே அரசாங்க லேப் தானே என்ன வேணா நடக்கும் அப்டீங்கறீங்களா? அதுவும் சரிதான்.

எல்லாத்தையும் விட அந்த சனா வைக் கடத்தின உடனே FIR கூட file செய்யறதுக்குள்ளே அத்தனை போலிஸ்காரங்க அது பின்னாடி வந்தாங்க பாருங்க. எந்த சயன்டிஸ்ட் கல்யாணத்துக்கு இந்த போலிஸ் பாதுகாப்பு கெடைக்கும்? வேணா முதல் அமைச்சர் வீட்டுக் கல்யாணத்துக்கு கெடைக்கும்.
அப்புறம் முதல்நாள் சேகரிச்ச குப்பையை அப்டியே உடனே பெருங்குடியில் கொண்டு கொட்டிடுவாங்களாம். அதுவும் government லேப் வேஸ்ட் டை . ஏன்யா வயிற்றெரிச்சலைக் கெளப்பறீங்க....
இதெல்லாம்தான் கொஞ்சம் சயன்ஸ் பிக்ஷேன் மாதிரி இருந்தது.

ரஜினி சார், தளபதி மாதிரி இன்னொரு படம் எப்போ பண்ணுவீங்க?

Monday, September 27, 2010

நினைவில் நின்றதும் , நெஞ்சைத் தொட்டதும்

ஜெயா டிவி யில் ஹரியுடன் நான் என்று ஒரு நிகழ்ச்சி. நல்ல பாடகர் ஒருவரைத தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாடுவதை விட ஹரிஹரன் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் சரத் வாசுதேவன் அவர்கள் பாடியதை விமர்சிப்பது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. அதுவும் சரத் மிகவும் நகைச்சுவையோடு விமர்சிப்பார். கடந்த வாரம் பாலச்சந்தர், M.S.
விஸ்வநாதன் மற்று இயக்குனர் வசந்த் வந்திருந்தார்கள். K.B, M.S.V. கூட்டணிப் பாடல்கள் என்னுடைய இளமை காலத்துப் பாடல்கள். பல சமயங்களில் காலையில் என்ன சாப்பிட்டேன் என்பதே மறந்து போகும் எனக்கு அந்த வரிகள் இன்னும் நினைவு இருப்பது எனக்கே ஆச்சரியம். அத்துணை அருமையான பாடல் வரிகள், இனிமையான இசை - இன்றும் என்னுடைய sub conscious memory யில் அழியாமல் இருக்கின்றன. சில பாடல்களைப் பற்றி அவர்கள் சொன்ன பின்னணிச் செய்திகள் இன்னும் சுவாரசியமாக இருந்தன.
'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில்தான் முதல்முறையாக slow motion shots உபயோகப்படுத்தப்படனவாம். வசந்த் சொன்னார். அதே படத்தில் தான் முதன்முறையாக reverse technique க்கை கையாண்டிருப்பதாக K.B. சொன்னார். இது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சுபா சிவகுமாரை நம்பிக்கையோடு காதலிக்கும் பொது பால் பொங்கி வரும் ('ஆசை பொங்குது பால் போலே ') பிறகு அந்த காதல் கை கூடாது போகும்போது பொங்கிய பால் அப்படியே பாத்திரத்தினுள் அடங்கிப் போகும். இதே போல ஸ்ரீவித்யாவின் காதலுக்கு அடையாளமாய் புகையையும் இப்படியே பயன் படுத்தி இருப்பார். (காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே)

இன்னொரு போட்டியாளர் "அவர்கள்' படத்திலிருந்து 'இங்கும் அங்கும் பாதை உண்டு' பாடலைப் பாடினார். இந்தப் பாடலை கவிஞரின் பிறந்தநாள் விழாவில் வந்திருந்தவர்கள் முன்னிலையிலேயே on-the-spot எழுதி compose செய்தார்களாம். எப்படிப்பட்ட பாடல் - என்ன ஒரு genius? மெட்டுக்குப் பாட்டு எழுதுவதென்பது அந்த காலத்தில மிகவும் அபூர்வம். அதுவும் K.B. படங்களில் பாடல்கள் கதையை ஒட்டி அமைந்திருக்கும். பல சமயங்களில் முக்கியமான முடிவுகளுக்கான அடிப்படை காரணம் பாடல்களிலேயே சொல்லப்பட்டுவிடும், இது போல் plot progression னுக்கு உறுதுணையாக இருக்கும் வரிகள் மிகவும் முக்கியமானதால் அநேகமாக வரிகளும் இசையும் இணைந்து compose செய்ய வேண்டும். ஆனால் 'வான் நிலா நிலா அல்ல' என்ற பட்டினப் பிரவேசம்' படப் பாடல் மெட்டுக்கு எழுதப்பட்டதாம். M.S.V. யின் இந்த மெட்டு K.B. க்கு ரொம்ப பிடித்துப் போனதால் எப்படியாவது இந்த மெட்டுக்கு கவிஞரிடம் ஒரு பாடல் வாங்கி விடுங்கள் என்று K.B. கேட்டுக் கொண்டாராம். ' ந ந நா ந ந நா' என்று M.S.V மெட்டைப் பாடிக் காட்டியபோது கவிஞர் 'நா நா என்று என்னத்தை எழுதுவது' என்று அலுத்துக் கொண்டாராம். பிறகு M.S.V 'ல ல லா" என்று அதே மெட்டை போட்டதும் 'சரி இ ந இந்தா "லா லா என்றே பாட்டு எழுதி தருகிறேன் என்று சொல்லி இந்தப் பாட்டை எழுதித் தந்தாராம். இந்தப்பாடலில் அநேகமான வார்த்தைகளும் ஒவ்வொரு வரியும் லா என்றே முடியும்
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும நிலா என் தேவியின் நிலா
நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
இப்படி.

மூன்று முடிச்சு படத்தில் வந்த 'ஆடி வெள்ளி தேடி வந்து" என்ற பாடலில் அந்தாதி பாணியைக் கையாண்டிருப்பது பற்றியும் சொன்னார் K.B. அவர் பல புதுமைகளை செய்து முன்னோடியாக இருந்திருக்கிறார். அதில் எனக்கு மிகவும் பிடித்தது 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் "சிப்பி இருக்குது முது இருக்குது" பாடலில் ஸ்ரீதேவி மெட்டு சொல்ல கமல் பாடல் வார்த்தைகள் சொல்லுவது. இப்படித்தான் கவிஞரும் , M.S.V யும் வேலை செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
(ஒரு முறை கவிஞர் அரை மணிக்குள் பாடல் எழுதியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இது "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற படத்தில் வரும்
"ஆண்டவன் இல்லா உலகம் இது" என்ற பாட்டு.)

நிகழ்ச்சியில் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல, தெய்வம் தந்த வீடு , முத்துக் குளிக்க வாரீஹலா என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பாடப் பாட K.B.யும், M.S.V யும் கட்டிக்கொள்ளாத குறைதான். நானும் அப்படியே மலரும் நினைவுகளில் மூழ்கி விட்டேன். இன்றைய பாடல்களில் எத்தனை பாடல்கள் இது போல் காலம் கடந்து நிற்கும் என்பது கேள்விக்குறிதான். ஒருவேளை இந்த பாடல்களெல்லாம் என்னுடைய தலைமுறைக்குதான் நெஞ்சில் நிறைந்தவையா என்றும் எனக்குதெரியாது. மொத்தத்தில் மிக அருமையான ஒரு நிகழ்ச்சி.

நிகழ்ச்சியை அளிக்கும் விளம்பரதாரர்கள் Bru காபி:
விளம்பரமும் அருமையோ அருமை.
அந்த
பெண் கவலையே இல்லாமல் இரண்டாவது decoction இறக்குவதற்கு வெந்நீர் போடுவதாகட்டும், விருந்தினர்கள் இரண்டாவது decoction என்று கண்டு பிடித்து விடுவார்களோ என்ற மாமியாரின் கவலைக்கு கூல் ஆக "உங்களுக்கு எப்போவாவது தெரிஞ்சுதா?" என்று கேட்பதாகட்டும், அப்புறம் வந்தவர்கள் காபியை 'பிரமாதம்'என்று பாராட்டும் போது இருவரும் பார்வை பரிமாறுவதாகட்டும். இரண்டு நிமிடத்துக்குள் ஒரு சின்ன கதையே சொல்லி விடுகிறார்கள் அதுவும் முற்றிலும் யதார்த்தமாக. இந்த பெண் யாரோ. பாலச்சந்தர் பார்த்தால் அப்படியே அடுத்த படத்தில் போட்டு விடுவார். அவ்வளவு இயல்பான நடிப்பு. கால் சென்டிமீட்டர் மாத்திரம் கண்ணையும் உதட்டையும் அகட்டி குறும்பு, விஷமம், கிண்டல் எல்லாவற்றையும் வெளிபடுத்தும் திறமை அந்த பெண்ணிடம். முகமும் அவ்வளவு அழகாய் ஒத்துழைக்கிறது.
சில
சமயம் தோன்றுகிறது இன்றைக்கு வரும் விளம்பரப் படங்களில் இருக்கும் creativity மற்றும் technical excellence முழு நீளப் படங்களில் கூட இல்லையோ என்று.
இங்கே சில நாட்களாக பதிவு செய்யப் பல தடைகள். சில நாட்கள் இணையத் தொடர்பில் குளறுபடி. சில நாட்கள் தமிழில் transliteration செய்வதில் தடங்கல்கள். எல்லாவற்றையும் மீறி இன்றைக்குப் பதிவு செய்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்தும் விட்டேன்.
அப்புறம் என்ன செய்தி, நீங்கள் சொல்லுங்கள்...

Monday, September 13, 2010

பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு பண்டம்

சமீபத்தில் பாலக்காட்டில் ஒரு குடும்ப வைபவத்திற்கு போயிருந்தோம். காலை உணவுக்கு எங்களை அழைத்திருந்த வீட்டில் ராமசெரி இட்லி என்ற பெயர் பலமுறை சொல்லப்பட்டது. "வாருங்கள் ராமசெரி இட்லி வந்தாச்சு' என்றார் ஒருவர். சற்று நேரத்தில் இன்னொருவர் 'ராமசெரி இட்லி ஆறிப் போய் விடப்போகிறது. சாப்பிட வாருங்கள்' என்றார். பரமாறியவர் 'ம்ம், ராமசெரி இட்லி எப்படி, நன்றாக இருக்கிறதா?' என்றார். அப்படி அதில் என்னதான் விசேஷம் என்று பார்த்தால் ஆவியில் வைத்த தோசை போன்ற ஒரு பதார்த்தம். மிருதுவாக இருந்தது. ருசி நம் இட்லி போலத்தான். இலையில் வைத்த இரண்டை சாப்பிட்டு முடித்ததும் இன்னொருவர் வந்து "இன்னும் ரெண்டு போட்டுக் கொள்ளுங்கள். இது இங்கே விட்டால் வேறு எங்கும் கிடைக்காது.' என்றார். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்களே அந்த கதை போல எனக்கு இந்த பதார்த்தத்தில் அப்படி என்ன விசேஷம் என்றே புரியவில்லை. ராமசெரி இட்லி இல்லை என்றால் என்ன எங்கள் ஊரில் எங்கும் இட்லி கிடைக்குமே. ஒரே பதார்த்தம்தானே, வடிவம்தான் வேறு மாதிரி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

ஏறக்குறைய ஒரே மாதிரி ருசி உள்ள பதார்தங்களுக்காக மிகவும் மெனக்கிடுவது எனக்குப் புரியாத விஷயம். இப்படித்தான் சேவை என்னும் சிற்றுணவை செய்வதற்கு எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மிகவும் சிரமம் எடுத்துக் கொள்வார்கள். இதை இடியாப்பம் என்றும் சொல்வார்கள். இப்போதெல்லாம் அது instant வடிவத்தில் கிடைக்கிறது. பாக்கெட்டை பிரித்து வெந்நீரில் கொதிக்க வைத்தால் தயார். ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் இது ஒரு industrial process போல அவ்வளவு சிரமமான சமாசாரம். அரிசியை ஊறவைத்து, இடித்து மாவு கிளறி அப்புறம் இதற்காகவே உபயோகப்படும் ஒரு இயந்திரத்தில் இந்த மாவை அடைத்து அதை மிகவும் சிரமப்பட்டுப் பிழிந்து பின்னர் இதற்கு வித விதமான தாளிதம் செய்து தயாரிப்பார்கள். இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் இசகு பிசகானாலும் பண்டத்தின் ருசி குறைந்து போகும். இறுதியில் பார்த்தால்
ருசி என்னமோ ஏறக்குறைய எலுமிச்சம்பழ சாதம், தேங்காய் சாதம் போலத்தான்
இருக்கும்.(சேவைப் பிரியர்கள் அடிக்க வராதீர்கள். 'ஏறக்குறைய' என்றுதான் முதலிலேயே சொன்னேனே .)
இப்படித்தான் ஒரு மாமி வீட்டில் ஒருமுறை மிகவும் கஷ்டப்பட்டு சேவை தயாரித்துக் கொடுத்தாள். நானோ நன்றாக சாப்பிட்டு விட்டு 'ஏன் மாமி இந்தக்
கஷ்டம் , வெறும் தேங்காய் சாதம் , எலுமிச்சம்பழ சாதமே கொடுத்திருந்தாலும் போதுமே ' என்று சொல்லிவிட்டேன் . மாமிக்கு வந்ததே கோபம். உனக்காக பட்டு நூல் போல சேவை பண்ணி இருக்கிறேன் இப்படி சொல்லி விட்டாயே என்று நொந்து போனாள்.

பிடி கொழுக்கட்டை என்றொரு சிற்றுண்டி. அரிசி உப்புமாவை அருமையாகத் தயாரித்துபின் அதை உருட்டி இட்லி போல வேக வைத்துக் கொடுப்பார்கள். ஏன் அதை உப்புமாவாகவே சாப்பிடலாமே. எதற்கு இன்னொரு கூடுதல் கட்டம்?
உடம்பு சுகம் இல்லாதவர்கள், வயதானவர் அல்லது குழந்தைகள் போன்ற ஜீரண சக்தி குறைதவர்களுக்கு இந்த இரட்டை வேக்காடுதேவைப்படும். மற்றபடி நாக்கு ருசிக்காகவே சாபிடுவோருக்கு இந்த கூடுதல் வேக்காட்டின் மூலம் ஒரு வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உருவம் மட்டும்தான் வேறுபடும். இல்லை ஒருவேளை ருசியும் நுணுக்கமாக வேறுபடுமோ எனக்குத்தான் அவ்வளவு தெரியவில்லையோ. அதுவும் தெரியாது. ஆனால் இத்தனை நுணுக்கமான சுவை வித்யாசத்துக்காக நான் மெனக்கிட மாட்டேன்.

ஆனாலும் இந்த ராமசெரி இட்லியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று வலை வீசிப் பார்த்ததில் கிடைத்தது இங்கே:
From http://en.wikipedia.org/wiki/Idli

Ramasseri idli

Ramasseri, an offbeat village in Palakkad is known all over Kerala for the idlis it makes—the delicious Ramasseri Idli. Spongy and soft Ramasseri Idli is slightly different in shape from the conventional idlis. It is a little flat and round. Ramasseri Idli is eaten with Podi mixed in coconut oil. The beginning was from a Mudaliar family living near Mannath Bhagavathi Temple in Ramasseri near Elappully.[citation needed]

The recipe of Ramasseri idli dates back to about one century, which again is a trade secret. The Muthaliyar family had migrated to Palakkad from Kanchipuram in Tamil Nadu. The new generation in the profession says that the secret of the recipe and taste were handed down to them from the older women of the community. Now the idli business is confined to four families in Ramasseri. Selection of rice is very important in making Ramasseri idli. Usually the varieties used are Kazhama, Thavalakannan, Ponni etc.

The taste depends on the boiling of paddy itself. Drying and dehusking are also important and need to be done in a particular way. The combination of rice and black gram is also equally important. For 10 kg of rice, one kg of black gram is used. Idli is made only after four hours of fermentation. Steaming of the idli is done on a cloth covered on the mud pot using firewood. This allegedly provides a special taste to the preparation. Leftover Idli can be torn into crumbs and used for preparing dishes such as Idli fry and Idli Upma.

இதை சமைக்கும் முறையை விளக்கும் எழுத்தும் புகைப்படமும் இங்கே:
இப்போது புரிகிறது ஏன் அதனை முறை அந்தப பண்டத்தின் பெயரைத் திரும்ப திரும்ப சொன்னார்கள் என்று. அந்த சின்ன வட்டத்துக்குள் அவ்வளவு விஷயம் இருக்குது. இதை முதலிலேயே படித்து விட்டுப் போயிருந்தால் நானும் இதைப் பற்றி கொஞ்சம் சிலாஹித்துப் பேசி இருக்கலாம். அவர்களும் இவ்வளவு சிரமப்பட்டது வீண் போகவில்லை என்று சந்தோஷப் பட்டிருப்பார்கள். நீங்கள் அடுத்த முறை பாலக்காட்டுபக்கம் போனால் இதை கட்டாயம் ருசித்துப் பாருங்கள்.
ஸ்ஸ்ஸ்..அப்புறம் வந்து அதில் அப்படி என்ன ருசி இருக்கிறது என்று என்னிடம்சொல்லுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன் அந்த கற்பூர வாசத்தைபற்றி.

Monday, August 30, 2010

கதை அல்ல நிஜம்

வடிவுக்கரசி என்ற தமிழ் நடிகை ஒரு பேட்டியில் சொன்னார்கள் அவர்களுக்கு செடிகள் வளர்ப்பதில் விருப்பம் உண்டாம். அவர்களுடைய் பால்கனியிலேயே நாலைந்து தொட்டிகளில் பூச்செடிகள் வளர்க்கிறார்களாம். இதென்ன பெரிய செய்தி என்கிறீர்களா? இருங்கள். அவர்கள் அடுத்து சொன்ன விஷயம்தான் சுவாரசியமாக இருந்தது - அதாவது இந்த செடிகளுடன் பேசுவாராம். ''ஓஹோ அந்த மாதிரி கேசா' என்று நினைக்காதீர்கள். அந்த செடிகளும் இதற்கு respond செய்யுமாம். ஒரு முறை அவர்கள் இருக்கும் கட்டிடத்தில் செடிகள் வளர்ப்பதற்கு ஏதோ எதிர்ப்பு தெரிவித்தார்களாம். ( நாட்டிலே எதைத்தான் எதிர்ப்பது என்றுதான் வரைமுறையே இல்லாமல் இருக்கிறதே நிலைமை!) சரி என்று இவரும் அந்த செடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாராம்: 'இங்கே செடிகள் வைத்துக்கொள்ளக்கூடாதாம். உங்களை எல்லாம் கொண்டு கீழே எங்கேயாவது வைக்கலாமா என்று இருக்கிறேன்" என்று. அடுத்த சில நாட்களுக்கு ஒரு செடியிலும் பூவே பூக்கவில்லையாம். அப்புறம் இந்த எதிர்ப்பெல்லாம் கொஞ்சம் அடங்கியதும் செடிகளிடம் 'சரி இப்படி எதனை நாள்தான் பூக்காமலேயே இருப்பீங்க. என்னாலே வெளிலே போயெல்லாம் பூ வாங்க முடியாது. கொஞ்சம் பூக்கற வழியைப் பாருங்க" என்றாராம் . மறுபடியும் பூத்ததாம்.

செடிகளிடம் பேசுவது பாடுவது போன்ற வழிகளால் அவற்றை சிறப்பாக வளர்க்க முடியும் என்று பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இங்கே பெங்களூரில் லால்பாகில் இருக்கும் nursery யில் இதமான இசையை எப்போதும் போட்டு வைக்கிறார்கள். இதற்காகத்தான் என நினைக்கிறேன்.
நமது முன்னோர்களும் செடிகொடிகளுடன் இது போன்ற அன்பு, மரியாதையுடன் இருந்திருக்கிறார்கள் என்று என்னுடைய ஆசிரியை ஒருவர் சொல்வார். நாம் துளசிச் செடியிலிருந்து இலைகளைப் பறிக்கும் போதோ அல்லது பூஜைக்காக செடிகளிடம் பூக்கள் பறிக்கும்போதோ முதலில் அவற்றின் அனுமதி கேட்டுப் பின்னால்தான் பறிக்க வேண்டும். அப்படியே போய் பூவைக் கொய்வதோ கிளையை வெட்டுவதோ இயற்கையை அவமதிக்கும் செயல் என்பார்.
இவற்றை எல்லாம் பின்பற்றி இருந்தால் இன்று இப்படி ecological imbalance எல்லாம் வந்திருக்காது.

இன்றும் கிராமப்புறங்களில் இது போன்ற நம்பிக்கைகள், பழக்கங்கள் இருக்கின்றன. என்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சில நாட்களில் செடிகளை வெட்டக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பாள். ஒருமுறை புல்வெளியின் நடுவே மிளகாய்ச் செடி வளர்ந்திருக்கிறதே அதை வெட்டி அந்த பக்கம் வைக்கலாமே என்றேன். அதற்கு ' ஏன் வேண்டுமானால் அதை சுற்றிக் கொண்டு நீங்கள் நடக்கலாமே. அதுபாவம் இருந்து விட்டுப் போகிறது' என்று சொல்லிவிட்டு அதை அங்கேயே பாதுகாப்பாக வளர்த்தாள். கொஞ்சம் ஹிட்லர் மாதிரித் தோன்றினாலும் அவள் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது என்று நானும் விட்டு விட்டேன். அந்தச் செடியும் மிக நன்றி உணர்வோடு அளவுக்கு அதிகமாகவே மிளகாய் கொடுத்தது.
இதுபோல எங்கள் தோட்டத்தில் ஒரு பலாமரம் வளர்ந்திருந்தது. நானும் அது காய்க்கும் காய்க்கும் என்று ஆறு வருஷம் ஆசையாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது பெரிதாக வளர்ந்து கொண்டே போயிற்று ஆனால காய்ப்பதாக இல்லை. பக்கத்தில் இருந்த எலுமிச்சைச்செடி முருங்கை, கறிவேப்பிலை எல்லாம் வேறே இதன் நிழலில் காய்ந்து போய்க் கொண்டிருந்தன. சரி பலாமரத்தை வெட்டிவிடலாம் என்று தோட்டக்காரரிடம் சொன்னேன். அவர் 'பொறுங்கள் அம்மா காய்க்கும். ஒரு ஆணி கொடுங்கள்' என்று சொல்லி அதன் மேல் ஒரு ஆணியை அடித்தார். இனிமேல் காய்க்கும் பாருங்கள் என்று வேறே சொன்னார். வீட்டு வேலை செய்யும் அம்மா இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தவள் அந்த மரத்திடம் போய் பேச ஆரம்பித்தாள் : ' உன்னை அம்மா எதற்கு பாடுபட்டு வளர்கிறார்கள். உனக்கு கொஞ்சமும் நன்றியே இல்லையே. இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறாய். ஆனால் ஒரு பிஞ்சு கூட இல்லை. வெக்கமாக இல்லையா. இரு இப்படியே நீ இருந்தால் உன்னை வெட்டிதான் போட வேண்டும்" என்றெல்லாம் மரத்திடம்! எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. மூன்று மாதம் ஆன பின்னால் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டாள். போய் பார்த்தால் மரத்தில் 8 காய்கள். "பாத்தீங்களாம்மா, அன்னிக்கு என்னமோ சிரிச்சீங்களே. இப்போ பாருங்க. சுரணை வந்திருச்சு. எப்படி காய்ச்சு தொங்குது பாருங்க. நாம் பேசினா அதுக்கு புரியும்' என்றாள்.

எதை நம்புவது, நம்பாமல் இருப்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பலாப்பழங்கள் இனிப்பாக இருந்தன. அது மாத்திரம்தான் புரிந்தது. 'அம்மா தாயே அடுத்த வருஷமும் இது போல பழம் கொடு' என்று ஒரு application போட்டு வைத்திருக்கிறேன். அப்புறம் தோட்டப் பக்கம் போகும்போது ஏதும் எக்குத்தப்பாக பேசுவதில்லை. எதற்கு வம்பு?

Thursday, August 26, 2010

கல்யாணம் பண்ணிப் பார்

எனக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரப் பெண் ஒருத்திக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் என் மகனுக்குத் கல்யாணம் நடந்தது என்றாலும் இப்போதுதான் திருமணம் என்ற ஒரு நிகழ்வின் முழுப் பரிமாணமும் எனக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. சமீப காலத்தில் எங்கள் நெருங்கிய வட்டத்தில் நடந்த சில திருமணங்களின் செலவு 10 லட்சத்துக்கும் மேற்பட்டது என்று கேள்விப் பட்டபோது ஒரு வேளை திருமணப் பந்தலையே பண நோட்டுக்களை வைத்து கட்டினார்களோ என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் இன்றைய விலைவாசியில் தலைக்கு முன்னூற்று ஐம்பது ருபாய் என்ற கணக்கில் கல்யாண சாப்பாட்டுக்கே பல லட்சங்கள் செலவாகிறதாம். அது போக மேடை அலங்காரம், பூப் பந்தல்கள், மணப்பெண் அலங்காரம், தாம்பூலப்பை , சீர் பட்சணம், இரண்டு நாள் சத்திர வாடகை சேர்த்தால் பத்து லட்சம் ஒன்றுமே இல்லை என்று என் உறவுக்காரப் பெண்மணி (பெண்ணின் தாயார்) எனக்கு விளக்கினாள். இது தவிர புடவை, வேஷ்டி, தங்க நகைகள், வெள்ளிப் பத்திரம் என்று இன்னும் சில லட்சங்கள்.

வீட்டில் ஒரு திருமணம் என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சிதான்; அதைச் சிறப்பாகக் கொண்டாட நினைப்பது இயல்பே. ஆனால் கொண்டாடுவது என்றால் ஆடம்பரமாக செலவு செய்துதான் கொண்டாட வேண்டுமா என்ன? என்னதான் சொன்னாலும் பெண்ணுக்கு நகை புடவை போன்ற விஷயங்களை யாரும் குறைப்பதாக இல்லை. இதில் வேடிக்கை ஆன விஷயம் என்னவென்றால் இன்றைய இளம்பெண்கள் பலரும் தங்க நகை அணிவதை விரும்புவதும் இல்லை. ஆனாலும் பெற்றோர் விடுவதாக இல்லை. சம்பிரதாயம் என்று சொல்லி இருபது பவுனாவது போட்டு விடுகிறார்கள். இப்போதெல்லாம் ஒரு புதுக் கூத்து வேறே சேர்ந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளைப் பையனுக்கு செயின், மோதிரம் போக braceletடாம். எந்தப் பிள்ளை இதை எல்லாம் போட்டுக் கொண்டு இருக்கிறான் என்று புரியவில்லை. எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் மைனர்
வேடம் போடுபவர்கள்தான் இதெல்லாம் போட்டுக் கொண்டு அலைகிறார்கள். மற்றதெல்லாம் கழுத்தில் ஆபீஸ் id கார்டைத்தான் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

புடவை - பெண்ணுக்கு மட்டுமே ஐந்து ஆறு ஆடம்பரமான புடவைகள். புடவைக் கடைகளுக்கு இதுவே ஒரு பெரிய பிசினஸ். சாமுத்ரிக்கா, பரம்பரா என்று என்னென்னமோ பேர் சொல்லி புடைவைகள் - ஒன்றாவது 25 ஆயிரத்துக்குக் குறைவில்லை. இதில் விசேஷம் என்ன வென்றால் இந்தப் பெண்களில் முக்கால்வாசிக்கு மேல் புடவையே கட்டியது இல்லை இனியும் கட்டுவதாக இல்லை. திருமண விசேஷங்களுக்குப் புடவை கட்டி அலங்காரம் செய்வதற்கென்றே அலங்கார நிபுணர்கள் வருவார்கள். பெண்ணின் கூடவே இருந்து வேளாவேளைக்கு அலங்காரம் செய்வார்கள். சும்மா 25அல்லது 30 கொடுத்ததால் போதும் - ஆயிரங்கள்தான். அந்த வீடியோ விலும் போட்டோக்களிலும் அழகாக வரவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். அப்புறம் இந்தப் புடவைகள் அழகாக மடித்து கப்போர்ட் உள்ளே தூங்கும். அவ்வளவுதான். இதற்கு என் இதனை விலை கொடுத்து வாங்க வேண்டும். பேசாமல் convocation gown போல வாடகைக்கு எடுத்துவிடலாமே என்று தோன்றும். மேல் நாடுகளிலும் வெட்டிங் gown க்கு செலவழிக்கிறார்கள். ஆனால் அது ஒரு உடுப்புக்காக மட்டுமே. இங்கே சுமார் ஐந்தோ ஆறோ. இதெல்லாம் போக ஒரு ஒன்பது கஜம் புடவை வேறே - அந்தக் காலத்தில் பூஜை விரதம் போன்ற நாட்களில் 9 கஜம் உடுத்துவார்கள். இப்போதோ பலருக்கும் அதை உடுத்தவே தெரியாது. ஆனாலும் சம்பிரதாயமாய் அந்த தாலி கட்டும் வைபவத்துக்கு அதைக் கட்டாயம் அணிய வேண்டும். அப்புறம் அலமாரி உள்ளே அது தூங்க வேண்டும். சரி ஒரு மணி நேரத்துக்குத்தானே என்று சாதாரணமாக வாங்குவார்களா என்றால் அதுதான் இல்லை. இரண்டு பக்கமும் கெட்டி ஜரிகை போட்டு பெரிய புடவை வேண்டும். இல்லை என்றால் கல்யாணத்துக்கு வருபவர்கள் என்ன நினைப்பார்கள் என்பார்கள். ஒரு காலத்தில் ஆந்திரா மட்டும் கர்நாடகத்தில் முஹூர்த்ததின் போது மஞ்சளில் தோய்த்த காட்டன் புடவையைத்தான் மணப்பெண்ணுக்கு கட்டுவார்களாம். நான் பார்த்த கேரளா நாயர் திருமணத்திலும் பெண் அது போல லேசான ஜரிகை போட்ட வெளிர் சந்தன புடவைதான் கட்டி இருந்தாள். பெண்ணுக்கும் பிள்ளைக்கும் நெருங்கிய உறவினர்களும் அது போன்ற புடவை அல்லது முண்டு தாவணிதான் அணிந்திருந்தனர். இந்த ஆடம்பரப் பட்டுப் புடவைகள் எல்லாம் எப்போது சம்பிரதாயம் ஆயின என்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்க வேண்டும். எனகென்னமோ இவை புடவை உற்பத்தியாளர்களின் மார்க்கெட்டிங் திறமையால் உருவாக்கப்பட்ட சம்பிரதாயங்கள் என்றுதான் தோன்றுகிறது.

சானியா - ஷோயப் திருமணத்தின் போது கேள்விப்பட்டேன் பாகிஸ்தானில் விருந்துகளில் ஒரு சிறப்பு உணவு item மட்டுமே போட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது என்று. இந்தச் சட்டத்தை நம் நாட்டிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். நம் கல்யாண விருந்துகளில்தான் எத்தனை வீணடிக்கிறோம்! எத்தனை வகையான பொரியல், கூட்டு, எத்தனை வகை இனிப்புகள்! நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கு மேல் சர்க்கரை வியாதி கேஸ். இன்னும் பலருக்கு உடல் பருமன் தொல்லை. எத்தனையே ஆரோக்கியமாக இருந்தாலும் திரும்பத் திரும்ப விருந்து சாப்பாடு மூன்று வேளை சாப்பிட்டால் யாருக்கும் அஜீரணம்தான் வரும். ஒரே ஒரு வேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே கல்யாண விருந்து கொடுத்தால் போதுமே. அதிலும் எந்த மாதிரியான விருந்து என்று தீர்மானம் செய்து கொண்டு எல்லோருக்கும் அதே போடலாம். ஒரு பக்கம் தென்னிந்திய வகைகள், ஒரு பக்கம் வடை இந்திய உணவு, அப்புறம் chinese, ஒரு பக்கம் pasta, pizza, அது தவிர சாட், அப்புறம் தோசா கவுன்ட்டர், ஸ்வீட்ஸ் அது போக ஐஸ் கிரீம். இது போல் சாப்பிட வேண்டும் என்றால் ஹோடேலுக்குப் போகட்டுமே எதற்கு கல்யாணத்தில் இத்தனை வகைகள்? இப்படித்தான் செலவையும் wastage ஐயும் அதிகரிக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு திருமணத்தில் reception ; இப்படித்தான் எக்கச்சக்கமான சாய்ஸ். ஒரு ரவுண்டு பார்த்துக் கொண்டு வந்ததிலேயே வயிறு ரொம்பிப் போன உணர்வு. நேராக தயிர் சாதம் எங்கே என்று தேடித் பார்த்து அதை மட்டும் சாப்பிட்டு வந்து விட்டேன். அதற்கும் அந்த contractor 350 ரூபாய்தானே போடப்போகிறார்? என்னைப் போலப் பலரும் இருப்பார்கள். யாரால் அங்கே போடும் எல்லாவற்றையும் சாப்பிட முடியும்.?இல்லை சாபிட்டலும் யார் மறுநாள் அவதிப் படுவது?

இது எல்லாவற்றுக்கும் மேலான ஒரு வீண் செலவு என்னவென்றால் இந்தத் தாம்பூலத்தோடு ஏதோ பாத்திரங்கள் அல்லது fancy பொருட்கள் கொடுக்கிறார்களே அது எதற்கு? முக்கால்வாசி வீட்டில் அது வேலைக்காரிக்கு போகிறது. குழந்தைகளை பிறந்தநாள் கொண்டாட அழைக்கும்போது இது போல் பரிசு கொடுத்து அனுப்புவார்கள். வாழ்த்த வரும் குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைக்கு பரிசு கொண்டு வருவார்கள். அதனால் அவர்கள் போகும்போது வெறும் கையோடு அனுப்ப வேண்டாம் என்று ஏதானும் ஒரு பொம்மையோ விளையாட்டு பொருளோ கொடுத்து அனுப்புவார்கள். கல்யாணத்துக்கு வரும் விருந்தினர் அனைவருக்கும் தாம்பூலம் தனித்தனியே கொடுக்க இயலாது என்பதற்காக உருவாக்கப்பட்ட conveneince இந்தப்பை. அதற்கும் மேலே அதனுள்ளே எதற்கு ஒரு ஸ்டீல் பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பா? மொய்க்கு பதில் மரியாதையா? ஏற்கனவே இருக்கும் செலவு போதாதென்று இது போல் ஏதானும் புதுப் புது 'சம்பிரதாயங்கள்' வேறு எதற்கு உருவாக்க வேண்டும்?

இப்போது கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கிறது என்று சொன்னேனே அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தாயாருக்கும் இடையே நடந்த ஒரு சம்பாஷணையின் போது நானும் இருந்தேன். தாயார் பெண்ணுக்கு இன்னும் சில வெள்ளிப் பாத்திரங்கள் வாங்க வேண்டும் என்று சொன்னாள்அதற்கு கல்யாணம் ஆக இருக்கும் பெண் சொன்னாள்; "எதற்காக அம்மா, அவர்களோ கேட்கவில்லை. எனக்கோ இவை எல்லாம் உபயோகப் படவே போவதில்லை. இதை வீட்டில் பூட்டி வைத்து விட்டு நான் வேலைக்குப் போகும்போது கவலை வேறு பட வேண்டும். ஏன் வீணாக அலைகிறாய்?" என்று. அதற்கு அவள் தாயார் சொல்கிறாள்: "இதோ பார் சபையில் சில விஷயங்கள் வைத்தால்தான் கௌரவமாக இருக்கும். நீ உபயோகப் படுத்துவாயோ இல்லையோ அதை எல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் கொடுப்பதைக் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்" என்று.
இது என்ன லாஜிக்? கல்யாணத்தில் சீர் செய்வது பெண்ணுக்கும் பிள்ளைக்கும் உபயோகப்படுவதர்கா இல்லை ஊர் மக்களைத் திருப்திப்படுத்தவா?
ஆனால் பெரும்பான்மையான உயர் மத்தியத்தர மக்களின் மனோபாவம் இப்படித்தான் இருக்கிறது. "மாற்றம் தேவை ஆனால் நான் அதை செய்யத் தயாராக இல்லை. வேறு யாராவது முன்வந்து செய்தால் நான் அதை ஆதரிக்கத் தயார்."

என்னவோ போங்கள். இருக்கிறவர்கள் இது போலெல்லாம் செய்து ஒரு முன்னோடி உருவாக்கி விடுகிறார்கள். இது இல்லாதவர்களின் சுமையை அதிகரிக்கிறது. அப்புறம் பெண் குழந்தை என்றாலே செலவு என்ற ரீதியில் எண்ணங்கள். இதனால் கீழ்மட்டங்களில் பல வேண்டாத பின்விளைவுகள்.

இன்னொரு சட்டமும் வேண்டும்: இந்த தேர்தல் செலவுக்கு ஒரு உச்ச மட்டம் நிர்ணயித்திருப்பதைப் போல், திருமண செலவுக்கும் ஒரு உச்சமட்டம் கொண்டு வர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?

Wednesday, August 18, 2010

இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா

நேற்று எனது நண்பனின் சகோதரி இறந்துவிட்டார்கள். ஒரு வருடத்துக்கும் மேலாக மூளையில் கான்செர் நோயால் அவதிப் பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போயிற்று. ஆனால் அதற்கு முந்தைய நாட்களில் அந்தப் பெண்மணியின் வாழ்கை எல்லோரும் ஆசைப் படக்கூடிய வகையில் இருந்தது. பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் எல்லோராலும் கொண்டாடப்பட்டவர். பணத்துக்கு குறையே கிடையாது. கணவர் அவர் எது செய்தாலும் அதற்கு உடன்படக்கூடிய மனிதர். இந்த காய்ச்சல் வந்த பிறகுதான் அவருக்குத் துன்பம் என்றால் என்ன என்றே தெரியும். அது வரை கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தவர். இத்துணை முழுமையான வாழ்வு என்பது எத்தனை பேருக்கு வாய்க்கக் கூடிய ஒன்று? ஆனாலும் அவருடைய வீட்டில் யாருக்கும் மனம் சமாதானமாக இல்லை. எல்லோரும் இன்னும் சில காலம் அவர் வாழ்ந்திருக்கலாமே என்பது போலத்தான் பேசினார்கள்.

மரணத்தின் நிச்சயம் நம் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தாலும் நம்மைச் சுற்றியவர்களுக்கு முடிவு வரும்போது அது எவ்வளவு வயதானவர்கள் ஆனாலும் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எங்களுக்குத் தெரிந்தவர் ஒருவரது தாயார் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக கோமாவில் இருந்த போது அவருடைய மனைவி 'இது போல இருப்பதைவிட அவர் இறந்துவிடுவதே நலம்' என்று கூறியபோது அவரது கணவருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. 'கோமாவிலாவது என் அம்மாவை என்னால் பார்க்க முடிகிறதே என்று நான் ஆறுதல் அடைகிறேன் நீ எப்படி இது போல சொல்லலாம்' என்று கடுமையாக சண்டை போட்டார். அந்த அம்மாவுக்கு அப்படி ஒரு வாழ்வு தேவையா என்று அவர் யோசிக்கவே இல்லை. நமக்கு உகந்தவர்களின் மரணம் நம்மைக் கலங்க வைப்பது அவர்களுக்காகவா இல்லை நமக்காகவா என்று எனக்குத் தோன்றும்.

எனக்குத் தெரிந்த பலரும் இறப்பு என்ற யதார்த்தத்தைப் பற்றி யோசிக்கவே தயங்குபவர்களாகத்தான் இருக்கிறார்கள். இது போன்ற பேச்சை எடுத்தாலே 'சரி அபசகுனமாக எதாவது உளராதே' என்பார்கள். இல்லை என்றால் 'அது நடக்கும்போது அதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம். இப்போது சும்மா இரு' என்பார்கள். நாம் வாழ்கையின் மற்ற நிகழ்வுகளைப் பற்றி எல்லாம் நாம் யோசிக்கிறோம். அவற்றுக்காக திட்டமிட்டு செயல் படுகிறோம். ஆனால் இறப்பு என்பது மாத்திரம் பிறருக்கு மட்டுமே நடக்ககூடிய ஒன்று என்பது போல ஒதுக்கி வைத்து விடுகிறோம். சமீப காலத்தில் இன்சூரன்ஸ் கம்பனிகாரர்கள் மட்டுமே நமக்கு இறப்பின் நிச்சயத்தை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து எந்த வீட்டிலுமே குடும்பமாக உட்கார்ந்து ' எனக்கு ஏதானும் நேர்ந்து விட்டால் ' என்ற scenario பற்றி நிதானமாக உணர்ச்சி வசப்படாமல் பேசி நான் பார்த்ததில்லை. நானே சில சமயம் என் மகனிடமோ மருமகளிடமோ வீட்டில் எந்தெந்த file எங்கிருக்கிறது என்று சொல்ல முயலும் போதெல்லாம் அவர்கள் என்னை அடக்கி விடுவார்கள் .அதெல்லாம் நேரம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம் என்று.

இன்னொரு நண்பருக்கு கான்செர் மிகவும் முற்றிய நிலையில் இன்னும் சில நாட்களே என்று இருந்த சமயத்தில் கூட அவர் வீட்டில் எல்லோரும் மரணத்தைப் பற்றி நினைக்க விரும்பவில்லை. என்னமோ எல்லாம் இயல்பாக இருப்பது போலவும் ' இதோ அவர் எழுந்து முன் போல் நடமாடப் போகிறார்' என்பது போலவும் நடந்து கொண்டார்கள். ஒரு வேளை அவர்கள் உண்மையை எதிர்கொண்டிருந்தால் அந்த சில நாட்களை இன்னும் அர்த்தமுள்ளவை ஆக்கி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது அவருடன் வாய் விட்டுப் பேசி அவரது நிஜ உணர்வுகளையும், அவரது பயங்களையும் பற்றிப் பேச ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம். இவர்களுக்கு நிஜத்தை எதிர் நோக்கும் பலம் இல்லாததினால் கடைசி நாட்களில் அவர் தனது உள்மனதின் பாரங்களை மனதிலேயே சுமந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டுவிட்டரோ என்று தோன்றியது. இதில் வேடிக்கை என்னவென்றால் நோயாளி உட்பட அத்துணை பேருக்கும் அவரது மரணத்தின் அண்மையைப் பற்றி தெரியும். ஆனாலும் யாரும் அதைப் பற்றி இயல்பாகப் பேசத் தயாராக இல்லை. மரணத்தின் பிடியில் இருக்கும் அவர் எத்துணை தனிமைப் பட்டு போயிருப்பார் இல்லை ?

நமக்குப் பிரியமானவர்கள் நம்மைப் பிரியும்போது ஏற்படக்கூடிய துக்கத்தை நான் மறுக்கவில்லை. பாசத்தால் ஏற்படும் அந்த வலி மிகவும் இயற்கை ஆனது. நான் சொல்ல வருவது என்னவென்றால் மரணம் என்ற நிகழ்வு நமக்கு அளிக்கும் அதிர்ச்சியை குறைக்க ஒரே வழி அதைப் பற்றி தெளிவாக சிந்திப்பதும் அதைப் பற்றி இயல்பாகப் பேசுவதும்தான். மரணத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டோமானால் இருக்கும் நாட்களை இன்னமும் தரத்தோடு வாழ்வோமா என்கிற கேள்விதான். அது யாருக்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்ற உணர்வு வந்தால் நம் வாழ்க்கையில் வன்மைகள் குறையுமோ? யாரும் சாஸ்வதம் இல்லை என்று தெளிந்து இருக்கும்போது பொறாமை, காழ்ப்புணர்ச்சி, பேச்சிலும் செயலிலும் வன்மை எல்லாம் குறையுமோ? எனக்குத் தெரிந்த வீட்டில் ஒரு பெண் அவரது மாமியாரை அவர் இருக்கும் வரை நோக அடித்து விட்டு இப்போது அவரது மறைவுக்குப் பின்னால் அவருக்கு ஸ்ரத்தையாக வருடாவருடம் திவசம் செய்கிறாள் - 25 வருடங்களாய். பலரும் இப்படித்தான் சொல்கிறார்கள் : 'இப்படி திடீர் என்று போய் விடுவார் என்று முன்னமே தெரிந்திருந்தால் அதை செய்திருப்பேன் இதை சொல்லி இருப்பேனே என்று. என்னமோ மரணம் என்பது அரியதான நிகழ்வு என்பதைப் போல.
மரணத்துக்குப் பின்னால் ஒருவரை நினைத்து நினைத்து அழுவதை விட அவரோடு இருக்கும் நாட்களை அன்புடனும் புரிதலுடனும் வாழ்வது இன்னும் சிறப்பல்லவா. ஒரு வேளை expiry தேதி குறிக்கப்பட்டு பிறந்தோமானால் பூமியில் வாழ்கை இன்னும் அர்த்தமுள்ளதாக வாழ்வோமோ என்னவோ?

Monday, August 2, 2010

சும்மாதான் ஹீ ஹீ

சமீபத்தில் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த பெண் வல்லினம் மெல்லினம் எல்லாவற்றையும் கலந்து தமிழைக் கொலை செய்து கொண்டிருந்தது - bathma, meha ஹிட் , ராஜா சேஹரன் இப்படி எல்லாம் இஷ்டத்துக்கு உச்சரித்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
எனக்கு வைரமுத்துவின் அழகான வரிகள் நினைவுக்கு வந்தன:
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா

இந்த வரிகளைக் கூட அந்த பெண் இப்படித்தான் படிப்பாளோ என்னமோ:

வலிமிஹும் இடங்கல் வலிமிஹா இடங்கல் தமிழுக்கு தெரிகிந்ரதெ
வலிமிஹும் இடங்கல் வலிமிஹா இடங்கல் தங்கலுக்குத் தெரிகின்ரதா

இது மாதிரி உச்சரிக்கும் போது தமிழுக்கும், தமிழை நேசிப்பவர்களுக்கு எத்தனை வலிக்கும் என்று அந்த பெண்ணுக்கு எங்கே புரியப் போகிறது?

எப்படியும் பாடல வரிகளை யாரும் கவனிப்பதில்லை என்பதினால்தானோ 'ஆச்சா போச்சா' ' என்று எதையோ எழுதி பாடலைப் பதிவு செய்து விடுகிறார்கள். இசை நன்றாக அமைந்து விட்டால் அது வெற்றியும் ஆகிவிடுகிறது. தமிழ் படம் என்ற படத்தில் மிக அழகாக oh maha zeeya பாடலில் கிண்டல் செய்திருந்தார்கள். வார்த்தைகளுக்கு அர்த்தமே வேண்டாம். புரியாத மொழியில் இருந்தால் இன்னும் நலம். அப்படி இருக்கிறது நிலைமை. ரஹ்மான் க்கு இது போன்ற வார்த்தைகளின் மீது பயங்கர காதல் - 'கும்சும் கும்சும் குப்பச்சி, 'அஜூபா ஜுஜோபா' என்று எதாவது ஹம்மிங் வைத்து விடுவார். அதுவும் சூப்பர் ஹிட் ஆகிவிடும்.

ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு பாடல்களை வானொலியில் மட்டுமே கேட்க முடியும். அதனால் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் அதிகம். படங்களிலும் பாடல்கள் படத்தோடு ஒட்டி இருக்கும். இப்போது போல பொழுது போகவில்லை என்றால் சுவிட்சர்லாந்த்தில் ஒரு டூயட் இல்லை என்றால் கனவு சீன் என்பது போன்ற அமைப்புகள் இருக்காது. ஒரு படத்தின் பாடல வரிகளில் இருந்தே அந்த படத்தின் கதையை ஓரளவு யூகிக்க முடியும். படங்கள் மறந்து போய் விட்டாலும் பாடல்கள் நினைவில் நிற்கின்றன. வானம்பாடி என்றொரு படம். நிறைய பேருக்கு நினைவிருக்காது. ஆனால் அந்த படத்தில் வந்த 'கங்கைக் கரைத் தோட்டம்', 'ஏட்டில் எழுதி வைத்தேன்' , 'கடவுள் மனிதனாக வேண்டும்' போன்ற பாடல்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். அத்தனை அழகான, கருத்துள்ள பாடல்கள். இன்னும் சில பாடல்கள் ஏதோ நமக்காகவே நம் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டவை போலிருக்கும். இதனாலேயே அவை காலத்தை மீறி இன்றும் பசுமையாக இருகின்றன.

வானொலியில் கேட்கும்போது பாடல் வரிகளாலும், இசையாலும், பாடகர்களின் குரலாலும் அவ்வளவு பிடித்த அந்த பாடல்களை இன்று சில சமயம் தொலைக்காட்சியில் பார்க்கும்போது சற்று அதிர்ச்சி ஆகி விடுகிறது.
'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்' என்று ஒரு அருமையான பாடல். அந்தக் காட்சியை இப்போது சமீபத்தில்தான் ஒரு தொலைக்காட்சி சேனலில் பார்த்தேன். வெறுத்துப் போய் விட்டேன்: அசோகனுக்கு இப்படி ஒரு பாட்டு தேவையா என்று. அதே போல 'ரோஜா மலரே ராஜகுமாரி' என்று ஒரு அழகான melody. திரையில் பார்த்தால் சச்சுவும் ஆனந்தன் என்று ஒரு ஹீரோ(?யாரோ ?) வும். கோர்ட்டில் கேஸ் போடலாமா என்று கோபம் வந்தது எனக்கு. இப்போதும் சில படங்களில் இது போன்ற அநீதி நடக்கிறது. இந்த 'ஜீன்ஸ்' படத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். அந்த பிரஷாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய். இது முதல் அநியாயம் என்றால் பாடல்களுக்குக் குரல் ஹரி, உன்னி கிருஷ்ணன் . இதெல்லாம் கொஞ்சம் too much இல்லை? பாடல்களை கேட்டு விட்டு படத்துக்குப் போனவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இது போலத்தான் அந்த மைக் மோகனுக்கும் ஒரு ராசி. பாட்டெல்லாம் பிரமாதமாக அமைந்து விடும். ' ஏதடா இளையராஜா, SPB, வைரமுத்து என்று ஒரு கூட்டணியே நமக்காக கஷ்டப்படுகிரார்களே' என்று கொஞ்சமாவது கஷ்டப்பட்டு நடித்தாரா என்றால் அதுதான் இல்லை. போதாக்குறைக்கு இவருக்கு என்று குரல் கொடுக்க வேறு ஒரு ஆள் - சுரேந்தர். இந்த மாதிரி அநியாயத்தின் உச்சகட்டம் 'பூவே செம்பூவே' என்ற பாடல் 'சொல்ல துடிக்குது மனசு' என்ற படத்தில். படத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும் என் கோபம்.
இதுக்கெல்லாம் ஒரு சட்டம் போட வேண்டும் இனிமேல். என்ன சொல்கிறீர்கள்?

இப்போது FM ரேடியோ வாயிலாகத் திரும்பவும் வானொலி கலாச்சாரம் முன்னுக்கு வந்து கொண்டிருதாலும், முன்னைப் போல பாடல்களை அனுபவிக்க முடியவில்லை. முன்பெல்லாம் தொகுப்பாளர்கள் பாடலைப் பற்றிய சுவையான விஷயங்களைச் சொல்லுவார்கள். அளவாகப் பேசி பாடல்களை முழுமையாக ஒலிபரப்புவார்கள். இப்போது எங்கே? இந்த RJ க்கள் பேசிப் பேசியே கழுத்தறுக்கிறார்கள். அதென்ன எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியே பேசுகிறார்கள் என்றும் புரியவில்லை. பாடல்களையும் பாதி பாதிதான் ஒலிபரப்புகிறார்கள். இது நிம்மதியாய் பாடல்களை அனுபவிக்க ஏற்றமாதிரி இல்லை. fast food மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவது மாதிரிதான் இருக்கிறது. பாட்டை இந்த மாதிரி அனுபவிக்க முடியுமா சொல்லுங்கள். இது இன்றைய இளைய தலைமுறையின் வாழ்கை முறையை சார்ந்ததாக இருப்பதினால் அவர்களுக்கு வேண்டுமானால் பிடிக்குமோ என்னமோ? அப்துல் ஹமீது போல வல்லினம் மெல்லினம் எல்லாம் சரியாக உச்சரித்து தமிழ் சினிமாப் பாடல்களைப் பற்றிய அபாரமான ஞானத்தோடு தொகுப்பவர்கள் எல்லாம் இன்றைய வானொலிகளுக்குத் தேவையில்லை. சும்மா பொழுதுபோக்காகப் பேசத் தெரிந்தால் போதும்.

ஹிஹிஹி, இதைப் படிக்கும்போதே புரிந்திருக்குமே எனக்கும் பொழுது போகவில்லை என்று. அதேதான். serious ஆக போஸ்ட் எழுத கை ஓடவில்லை. சரி இப்படி ஏதானும் oh maha zeeya மாதிரி அர்த்தமில்லாமல் கொஞ்சம் சத்தம் போட்டால் ஏதானும் inspiration வருகிறதா பார்ப்போமே என்றுதான். கோபித்துக் கொள்ளாதீர்கள்.