Monday, September 27, 2010

நினைவில் நின்றதும் , நெஞ்சைத் தொட்டதும்

ஜெயா டிவி யில் ஹரியுடன் நான் என்று ஒரு நிகழ்ச்சி. நல்ல பாடகர் ஒருவரைத தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாடுவதை விட ஹரிஹரன் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் சரத் வாசுதேவன் அவர்கள் பாடியதை விமர்சிப்பது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. அதுவும் சரத் மிகவும் நகைச்சுவையோடு விமர்சிப்பார். கடந்த வாரம் பாலச்சந்தர், M.S.
விஸ்வநாதன் மற்று இயக்குனர் வசந்த் வந்திருந்தார்கள். K.B, M.S.V. கூட்டணிப் பாடல்கள் என்னுடைய இளமை காலத்துப் பாடல்கள். பல சமயங்களில் காலையில் என்ன சாப்பிட்டேன் என்பதே மறந்து போகும் எனக்கு அந்த வரிகள் இன்னும் நினைவு இருப்பது எனக்கே ஆச்சரியம். அத்துணை அருமையான பாடல் வரிகள், இனிமையான இசை - இன்றும் என்னுடைய sub conscious memory யில் அழியாமல் இருக்கின்றன. சில பாடல்களைப் பற்றி அவர்கள் சொன்ன பின்னணிச் செய்திகள் இன்னும் சுவாரசியமாக இருந்தன.
'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில்தான் முதல்முறையாக slow motion shots உபயோகப்படுத்தப்படனவாம். வசந்த் சொன்னார். அதே படத்தில் தான் முதன்முறையாக reverse technique க்கை கையாண்டிருப்பதாக K.B. சொன்னார். இது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சுபா சிவகுமாரை நம்பிக்கையோடு காதலிக்கும் பொது பால் பொங்கி வரும் ('ஆசை பொங்குது பால் போலே ') பிறகு அந்த காதல் கை கூடாது போகும்போது பொங்கிய பால் அப்படியே பாத்திரத்தினுள் அடங்கிப் போகும். இதே போல ஸ்ரீவித்யாவின் காதலுக்கு அடையாளமாய் புகையையும் இப்படியே பயன் படுத்தி இருப்பார். (காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே)

இன்னொரு போட்டியாளர் "அவர்கள்' படத்திலிருந்து 'இங்கும் அங்கும் பாதை உண்டு' பாடலைப் பாடினார். இந்தப் பாடலை கவிஞரின் பிறந்தநாள் விழாவில் வந்திருந்தவர்கள் முன்னிலையிலேயே on-the-spot எழுதி compose செய்தார்களாம். எப்படிப்பட்ட பாடல் - என்ன ஒரு genius? மெட்டுக்குப் பாட்டு எழுதுவதென்பது அந்த காலத்தில மிகவும் அபூர்வம். அதுவும் K.B. படங்களில் பாடல்கள் கதையை ஒட்டி அமைந்திருக்கும். பல சமயங்களில் முக்கியமான முடிவுகளுக்கான அடிப்படை காரணம் பாடல்களிலேயே சொல்லப்பட்டுவிடும், இது போல் plot progression னுக்கு உறுதுணையாக இருக்கும் வரிகள் மிகவும் முக்கியமானதால் அநேகமாக வரிகளும் இசையும் இணைந்து compose செய்ய வேண்டும். ஆனால் 'வான் நிலா நிலா அல்ல' என்ற பட்டினப் பிரவேசம்' படப் பாடல் மெட்டுக்கு எழுதப்பட்டதாம். M.S.V. யின் இந்த மெட்டு K.B. க்கு ரொம்ப பிடித்துப் போனதால் எப்படியாவது இந்த மெட்டுக்கு கவிஞரிடம் ஒரு பாடல் வாங்கி விடுங்கள் என்று K.B. கேட்டுக் கொண்டாராம். ' நா நா' என்று M.S.V மெட்டைப் பாடிக் காட்டியபோது கவிஞர் 'நா நா என்று என்னத்தை எழுதுவது' என்று அலுத்துக் கொண்டாராம். பிறகு M.S.V ' லா" என்று அதே மெட்டை போட்டதும் 'சரி இந்தா "லா லா என்றே பாட்டு எழுதி தருகிறேன் என்று சொல்லி இந்தப் பாட்டை எழுதித் தந்தாராம். இந்தப்பாடலில் அநேகமான வார்த்தைகளும் ஒவ்வொரு வரியும் லா என்றே முடியும்
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும நிலா என் தேவியின் நிலா
நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
இப்படி.

மூன்று முடிச்சு படத்தில் வந்த 'ஆடி வெள்ளி தேடி வந்து" என்ற பாடலில் அந்தாதி பாணியைக் கையாண்டிருப்பது பற்றியும் சொன்னார் K.B. அவர் பல புதுமைகளை செய்து முன்னோடியாக இருந்திருக்கிறார். அதில் எனக்கு மிகவும் பிடித்தது 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் "சிப்பி இருக்குது முது இருக்குது" பாடலில் ஸ்ரீதேவி மெட்டு சொல்ல கமல் பாடல் வார்த்தைகள் சொல்லுவது. இப்படித்தான் கவிஞரும் , M.S.V யும் வேலை செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
(ஒரு முறை கவிஞர் அரை மணிக்குள் பாடல் எழுதியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இது "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற படத்தில் வரும்
"ஆண்டவன் இல்லா உலகம் இது" என்ற பாட்டு.)

நிகழ்ச்சியில் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல, தெய்வம் தந்த வீடு , முத்துக் குளிக்க வாரீஹலா என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பாடப் பாட K.B.யும், M.S.V யும் கட்டிக்கொள்ளாத குறைதான். நானும் அப்படியே மலரும் நினைவுகளில் மூழ்கி விட்டேன். இன்றைய பாடல்களில் எத்தனை பாடல்கள் இது போல் காலம் கடந்து நிற்கும் என்பது கேள்விக்குறிதான். ஒருவேளை இந்த பாடல்களெல்லாம் என்னுடைய தலைமுறைக்குதான் நெஞ்சில் நிறைந்தவையா என்றும் எனக்குதெரியாது. மொத்தத்தில் மிக அருமையான ஒரு நிகழ்ச்சி.

நிகழ்ச்சியை அளிக்கும் விளம்பரதாரர்கள் Bru காபி:
விளம்பரமும் அருமையோ அருமை.
அந்த
பெண் கவலையே இல்லாமல் இரண்டாவது decoction இறக்குவதற்கு வெந்நீர் போடுவதாகட்டும், விருந்தினர்கள் இரண்டாவது decoction என்று கண்டு பிடித்து விடுவார்களோ என்ற மாமியாரின் கவலைக்கு கூல் ஆக "உங்களுக்கு எப்போவாவது தெரிஞ்சுதா?" என்று கேட்பதாகட்டும், அப்புறம் வந்தவர்கள் காபியை 'பிரமாதம்'என்று பாராட்டும் போது இருவரும் பார்வை பரிமாறுவதாகட்டும். இரண்டு நிமிடத்துக்குள் ஒரு சின்ன கதையே சொல்லி விடுகிறார்கள் அதுவும் முற்றிலும் யதார்த்தமாக. இந்த பெண் யாரோ. பாலச்சந்தர் பார்த்தால் அப்படியே அடுத்த படத்தில் போட்டு விடுவார். அவ்வளவு இயல்பான நடிப்பு. கால் சென்டிமீட்டர் மாத்திரம் கண்ணையும் உதட்டையும் அகட்டி குறும்பு, விஷமம், கிண்டல் எல்லாவற்றையும் வெளிபடுத்தும் திறமை அந்த பெண்ணிடம். முகமும் அவ்வளவு அழகாய் ஒத்துழைக்கிறது.
சில
சமயம் தோன்றுகிறது இன்றைக்கு வரும் விளம்பரப் படங்களில் இருக்கும் creativity மற்றும் technical excellence முழு நீளப் படங்களில் கூட இல்லையோ என்று.
இங்கே சில நாட்களாக பதிவு செய்யப் பல தடைகள். சில நாட்கள் இணையத் தொடர்பில் குளறுபடி. சில நாட்கள் தமிழில் transliteration செய்வதில் தடங்கல்கள். எல்லாவற்றையும் மீறி இன்றைக்குப் பதிவு செய்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்தும் விட்டேன்.
அப்புறம் என்ன செய்தி, நீங்கள் சொல்லுங்கள்...

Monday, September 13, 2010

பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு பண்டம்

சமீபத்தில் பாலக்காட்டில் ஒரு குடும்ப வைபவத்திற்கு போயிருந்தோம். காலை உணவுக்கு எங்களை அழைத்திருந்த வீட்டில் ராமசெரி இட்லி என்ற பெயர் பலமுறை சொல்லப்பட்டது. "வாருங்கள் ராமசெரி இட்லி வந்தாச்சு' என்றார் ஒருவர். சற்று நேரத்தில் இன்னொருவர் 'ராமசெரி இட்லி ஆறிப் போய் விடப்போகிறது. சாப்பிட வாருங்கள்' என்றார். பரமாறியவர் 'ம்ம், ராமசெரி இட்லி எப்படி, நன்றாக இருக்கிறதா?' என்றார். அப்படி அதில் என்னதான் விசேஷம் என்று பார்த்தால் ஆவியில் வைத்த தோசை போன்ற ஒரு பதார்த்தம். மிருதுவாக இருந்தது. ருசி நம் இட்லி போலத்தான். இலையில் வைத்த இரண்டை சாப்பிட்டு முடித்ததும் இன்னொருவர் வந்து "இன்னும் ரெண்டு போட்டுக் கொள்ளுங்கள். இது இங்கே விட்டால் வேறு எங்கும் கிடைக்காது.' என்றார். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்களே அந்த கதை போல எனக்கு இந்த பதார்த்தத்தில் அப்படி என்ன விசேஷம் என்றே புரியவில்லை. ராமசெரி இட்லி இல்லை என்றால் என்ன எங்கள் ஊரில் எங்கும் இட்லி கிடைக்குமே. ஒரே பதார்த்தம்தானே, வடிவம்தான் வேறு மாதிரி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

ஏறக்குறைய ஒரே மாதிரி ருசி உள்ள பதார்தங்களுக்காக மிகவும் மெனக்கிடுவது எனக்குப் புரியாத விஷயம். இப்படித்தான் சேவை என்னும் சிற்றுணவை செய்வதற்கு எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மிகவும் சிரமம் எடுத்துக் கொள்வார்கள். இதை இடியாப்பம் என்றும் சொல்வார்கள். இப்போதெல்லாம் அது instant வடிவத்தில் கிடைக்கிறது. பாக்கெட்டை பிரித்து வெந்நீரில் கொதிக்க வைத்தால் தயார். ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் இது ஒரு industrial process போல அவ்வளவு சிரமமான சமாசாரம். அரிசியை ஊறவைத்து, இடித்து மாவு கிளறி அப்புறம் இதற்காகவே உபயோகப்படும் ஒரு இயந்திரத்தில் இந்த மாவை அடைத்து அதை மிகவும் சிரமப்பட்டுப் பிழிந்து பின்னர் இதற்கு வித விதமான தாளிதம் செய்து தயாரிப்பார்கள். இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் இசகு பிசகானாலும் பண்டத்தின் ருசி குறைந்து போகும். இறுதியில் பார்த்தால்
ருசி என்னமோ ஏறக்குறைய எலுமிச்சம்பழ சாதம், தேங்காய் சாதம் போலத்தான்
இருக்கும்.(சேவைப் பிரியர்கள் அடிக்க வராதீர்கள். 'ஏறக்குறைய' என்றுதான் முதலிலேயே சொன்னேனே .)
இப்படித்தான் ஒரு மாமி வீட்டில் ஒருமுறை மிகவும் கஷ்டப்பட்டு சேவை தயாரித்துக் கொடுத்தாள். நானோ நன்றாக சாப்பிட்டு விட்டு 'ஏன் மாமி இந்தக்
கஷ்டம் , வெறும் தேங்காய் சாதம் , எலுமிச்சம்பழ சாதமே கொடுத்திருந்தாலும் போதுமே ' என்று சொல்லிவிட்டேன் . மாமிக்கு வந்ததே கோபம். உனக்காக பட்டு நூல் போல சேவை பண்ணி இருக்கிறேன் இப்படி சொல்லி விட்டாயே என்று நொந்து போனாள்.

பிடி கொழுக்கட்டை என்றொரு சிற்றுண்டி. அரிசி உப்புமாவை அருமையாகத் தயாரித்துபின் அதை உருட்டி இட்லி போல வேக வைத்துக் கொடுப்பார்கள். ஏன் அதை உப்புமாவாகவே சாப்பிடலாமே. எதற்கு இன்னொரு கூடுதல் கட்டம்?
உடம்பு சுகம் இல்லாதவர்கள், வயதானவர் அல்லது குழந்தைகள் போன்ற ஜீரண சக்தி குறைதவர்களுக்கு இந்த இரட்டை வேக்காடுதேவைப்படும். மற்றபடி நாக்கு ருசிக்காகவே சாபிடுவோருக்கு இந்த கூடுதல் வேக்காட்டின் மூலம் ஒரு வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உருவம் மட்டும்தான் வேறுபடும். இல்லை ஒருவேளை ருசியும் நுணுக்கமாக வேறுபடுமோ எனக்குத்தான் அவ்வளவு தெரியவில்லையோ. அதுவும் தெரியாது. ஆனால் இத்தனை நுணுக்கமான சுவை வித்யாசத்துக்காக நான் மெனக்கிட மாட்டேன்.

ஆனாலும் இந்த ராமசெரி இட்லியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று வலை வீசிப் பார்த்ததில் கிடைத்தது இங்கே:
From http://en.wikipedia.org/wiki/Idli

Ramasseri idli

Ramasseri, an offbeat village in Palakkad is known all over Kerala for the idlis it makes—the delicious Ramasseri Idli. Spongy and soft Ramasseri Idli is slightly different in shape from the conventional idlis. It is a little flat and round. Ramasseri Idli is eaten with Podi mixed in coconut oil. The beginning was from a Mudaliar family living near Mannath Bhagavathi Temple in Ramasseri near Elappully.[citation needed]

The recipe of Ramasseri idli dates back to about one century, which again is a trade secret. The Muthaliyar family had migrated to Palakkad from Kanchipuram in Tamil Nadu. The new generation in the profession says that the secret of the recipe and taste were handed down to them from the older women of the community. Now the idli business is confined to four families in Ramasseri. Selection of rice is very important in making Ramasseri idli. Usually the varieties used are Kazhama, Thavalakannan, Ponni etc.

The taste depends on the boiling of paddy itself. Drying and dehusking are also important and need to be done in a particular way. The combination of rice and black gram is also equally important. For 10 kg of rice, one kg of black gram is used. Idli is made only after four hours of fermentation. Steaming of the idli is done on a cloth covered on the mud pot using firewood. This allegedly provides a special taste to the preparation. Leftover Idli can be torn into crumbs and used for preparing dishes such as Idli fry and Idli Upma.

இதை சமைக்கும் முறையை விளக்கும் எழுத்தும் புகைப்படமும் இங்கே:
இப்போது புரிகிறது ஏன் அதனை முறை அந்தப பண்டத்தின் பெயரைத் திரும்ப திரும்ப சொன்னார்கள் என்று. அந்த சின்ன வட்டத்துக்குள் அவ்வளவு விஷயம் இருக்குது. இதை முதலிலேயே படித்து விட்டுப் போயிருந்தால் நானும் இதைப் பற்றி கொஞ்சம் சிலாஹித்துப் பேசி இருக்கலாம். அவர்களும் இவ்வளவு சிரமப்பட்டது வீண் போகவில்லை என்று சந்தோஷப் பட்டிருப்பார்கள். நீங்கள் அடுத்த முறை பாலக்காட்டுபக்கம் போனால் இதை கட்டாயம் ருசித்துப் பாருங்கள்.
ஸ்ஸ்ஸ்..அப்புறம் வந்து அதில் அப்படி என்ன ருசி இருக்கிறது என்று என்னிடம்சொல்லுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன் அந்த கற்பூர வாசத்தைபற்றி.