Sunday, November 21, 2010

தாங்க முடியலைங்க..

உங்கள் வீட்டுப் பெண்ணுக்கோ பிள்ளைக்கோ திருமணம் என்று வைத்துக்கொள்ளுங்கள். யாரையாவது அழைப்பதற்கு நேரில் போக வேண்டும் என்றால் எந்த நேரத்தில் போவீர்கள்? உங்களுக்கு சௌகர்யமான நேரத்திலா அல்லது அவர்களுக்கு சௌகர்யமான நேரத்திலா?
ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது - பத்து மணி இதற்கு உகந்த வேளையா?
எங்கள் வீட்டில் எல்லாம் ஞாயிறு காலையில் நான்கு தினசரிகள் வரும். ஒவ்வொன்றாய் கொஞ்சம் மேய்ந்து விட்டு , அடிகாஸ் ஹோடேலோ அல்லது s.l.v. யிலிருந்தோ இட்லி அ தோசை வரவழைத்து மெதுவாக சாப்பிட்டு விட்டு, இன்டர்நெட்டில் மெயில் எல்லாம் பார்த்து, உறவினர்/ நண்பர்கள் யாரானும் சாட்டில் இருந்தால் கொஞ்சம் வம்பளந்து விட்டு பத்து மணி வாக்கில்தான் குளியலைப் பற்றிய யோசனையே வரும். சரி என்று தலை முழுக்க எண்ணை தடவி பாக்கி இருப்பதை முகத்தில் தடவி குளிக்க போகலாம் என்று எழுந்தால் வாசலில் பெல். எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியும் ஞாயிறு அன்று பனிரெண்டு மணிக்கு மேல்தான் வருவாள். சரி வேறே வழி இல்லை என்று எண்ணையில் தோய்த்தெடுத்த பஜ்ஜி போல ஹவுஸ் கோட்டுடன் வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்தால் இரண்டு மூன்று பேர். யாரென்று கூட தெரியவில்லை. ஏதானும் தேர்தல் வருகிறதோ , ஓட்டு கேட்க வந்திருக்கிறார்களோ அல்லது சென்செஸ் பேர்வழிகளா என்று பார்த்தால் 'பிள்ளை கல்யாணம்' என்று ஆரம்பித்தார்கள். அந்த காலத்து நண்பர்கள், பார்த்து பதினைந்து வருடம் ஆகி இருக்கும். அடையாளம் கண்டு பிடிக்கவே முழுதாய் ஒரு நிமிடம் ஆயிற்று. இத்தனை நாள் கழித்து பார்க்கிறோம், நானோ இந்த கோலத்தில். மானமே போச்சு. சரி உட்கார வைத்து விட்டு கொஞ்சம் டீசென்ட் ஆக உடை உடுத்தி வரலாம் என்று பார்த்தால் 'இல்லை உட்கார நேரமில்லை. நிறைய வீடு போக வேண்டும்' என்கிறார்கள். அங்கெல்லாம் போய் விட்டு இங்கே வரக்கூடாதோ! குளிக்கப் போன கணவரோ நிதானமாய் நிம்மதியாய் ஷவரில் வெந்நீரை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். Ignoring the elephant in the room என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல ஒரு conversation. எண்ணை சட்டி போல நான் இருந்த கோலம் அவர்களுக்கும் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். எனக்கோ 'பூமி பிளக்காதா உள்ளே போய் விட மாட்டோமா' என்ற நிலை. ஆனால் மேலே என்னமோ சாதாரணமாய் ' பெண் என்ன செய்கிறாள்? பிள்ளை எங்கே இருக்கிறான்? ' என்பது போல ஒரு சம்பாஷணை.
ஒரு வழியாய் அரை மணி நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.

முன்பெல்லாம் குறிப்பிட்ட நாட்களில் அல்லது நேரங்களில் சில காரியங்களை செய்யலாம் என்ற நியதிகள் , கட்டுப்பாடுகள் உண்டு. சில சமயம் அவை புரியாமல் இருக்கும். செவ்வாய்கிழமை செய்தால் என்ன, அமாவாசை அன்று போனால் என்ன என்று தோன்றும். நானே பல சமயம் இவற்றை எல்லாம் அபத்தம் என்று ஒதுக்கி இருக்கிறேன். நேற்றுதான் புரிந்தது எதற்காக இவை எல்லாம் ஆரம்பித்திருக்கலாம் என்று. இது போல் சில நியதிகள் இருந்தால் நமக்கும் நிச்சயமாய்த் தெரியும் இன்னின்ன நாட்களில் அ நேரங்களில் யாரும் வர மாட்டார்கள் என்று. அப்போது நாம் பாட்டுக்கு நிதானமாய் நம் அலுவல்களை முடித்துக் கொள்ளலாம். இன்றைய தேதியில் எல்லோரிடமும் தொலைபேசி இருக்கிறது. வரும் முன்பாக ஒரு கால் அடிக்க முடியாதா? குறைந்த பக்ஷமாய் நமக்கு முன் சென்ற வீட்டிலிருந்து கிளம்பும் போதாவது கூப்பிட்டு சொல்லலாமே. நாலைந்து பேர் இருக்கும் வீடு என்றால் பிரச்சினை இல்லை. யாரானும் ஒருவர் இருப்பார்கள். அவர்களை பேசிக்கொண்டிருக்கச் சொல்லி விட்டு நாம் தயாராகி வரலாம். எங்கள் வீடு போன்ற இடங்களில்தான் பிரச்சினை.
நான் ஒன்றும் இந்த social etiquette பற்றி மிகவும் கவலைப் படுபவள் இல்லை என்றாலும் விருந்தினர் முன்பு இருக்கவேண்டிய கோலத்துக்கு ஒரு எல்லை உண்டல்லவா. நமக்கே கூச்சமாய் இருக்கும் நிலையில் எப்படி ? சொல்வார்களே திரௌபதி சபைக்கு வந்த நிலையை பற்றி - கிட்டத்தட்ட அப்படிதான் எனக்கும். கிருஷ்ணன் வந்து ஒரு கண்ணியமான ஆடையை போர்த்த மாட்டாரா என்பது போல.

ஏற்கனவே இத்தனை எரிச்சலில் இருந்தேனா. இது போதாதென்று அவர்கள் பத்திரிக்கையைக் கொடுத்து கூடவே ஒரு சின்ன டப்பாவையும் கொடுத்தார்கள். என்னவென்று பிரித்துப் பார்த்தால் ஒரு சின்ன குங்கும கிண்ணம். உள்ளே ஒரு பொடி குங்குமம் கூட இல்லை. இது என்ன கூத்து? கல்யாணத்தில் மணமக்களுக்கு நாம்தான் ஆசீர்வாதமாய் பணமோ பொருளோ கொடுப்போம். அழைக்கப்பட்டவர்களுக்கு என்ன பரிசுப்பொருள்? வருவதற்கு ஊக்கப் பரிசா? இதையே முஹூர்த்தம் ஆன பின் தாம்பூலப் பையில் கொடுத்திருந்தால் கூட இத்தனை விசித்திரமாக இருந்திருக்காது. அதென்ன அழைப்புடன் ஒரு gift? முன்பெல்லாம் கல்யாணத்துக்கு அழைத்து வண்டி சத்தம் என்று ரயில் டிக்கெட்டுக்கான பணத்தையும் கொடுப்பார்களாம். அது போலவா இது?

என்னமோ போங்கள் மொத்தத்தில் ஒண்ணும் புரியவில்லை. இனிமேல் வாசலில் விசிடிங் hours ஒரு போர்டு போட்டு விட்டு மற்ற நேரத்தில் வருபவர்களுக்கு போஸ்ட் பாக்ஸ் தவிர ஒரு பெட்டியும் வைக்கலாம் என்று இருக்கிறேன் - இது போல பரிசுப் பொருட்களைப் போட்டு விட்டு செல்வதற்கு. அப்புறம் இது போல் பத்திரிக்கையோட gift கொடுத்த கல்யாணத்துக்கு போக முடியாவிட்டால் அப்படியே அவர்கள் கிளம்பும்போது அவர்கள் கையிலேயே கொஞ்சம் அட்சதையோடு gift கொடுத்தால் கோபித்துக் கொள்வார்களா என்ன? ச்சே ச்சே அதெல்லாம் கோவிக்க மாட்டாங்க. அவங்க ஆரம்பிச்சு வெச்சதைதானே நாமளும் பண்ணபோறோம், என்ன சொல்றீங்க... அவங்களுக்கு சௌகர்யமாய் வழக்கங்களை மாற்றிக் கொண்டிருப்பதைப்போல நாமும் கொஞ்சம் மாற்றினால் புரிந்து கொள்ள மாட்டார்களா என்ன?

ரொம்ப மண்டை காஞ்சு இருந்தேன். நேத்து தலைக்குப் போட்ட எண்ணை கூட பிரயோஜனப் படலை. அதான் உங்களிடம் சொல்லி கொஞ்சம் ஆறுதல் தேடலாமேன்னு. மனசுக்கு ஆறுதலாய் ஏதானும் சொல்லிட்டுப் போங்க.

Tuesday, November 2, 2010

தீப ஒளித் திருநாள்

என்ன உங்கள் வீட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலா ? தமிழக முதலமைச்சரின் ஆசியோடு நடக்கும் ஒரு தொலைக்காட்சியில் இதை தீப ஒளித் திருநாள் என்று சொல்கிறார்கள். கேட்க அழகாக இருக்கிறது ஏனென்றால் பலரும் தீபாவலி என்று வலிக்கும்படி சொல்வதை தவிர்க்கலாமே. இப்போதெல்லாம் பண்டிகைக் கொண்டாட்டம் என்றாலே புத்தாடை , விசேஷமான தின்பண்டங்கள் அப்புறம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. ஒவ்வொரு தொலைக்காட்சி நிலையத்திலும் காலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் அதிலும் முக்கால்வாசி சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்சிகள்தான். இதில் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் , இல்லை இரண்டு பெரிய சந்தேகங்கள். இப்படி நாள் முழுதும் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டால் வீட்டில் எப்போது சமையல் எல்லாம் நடக்கும்? இல்லை சமையல் அறையிலேயே தொலைக்காட்சி வைத்திருப்பார்களோ? அப்புறம் இப்படி சிறப்பு நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டே இருந்தால் கோவிலுக்குப் போவது, அக்கம்பக்க நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வாழ்த்தி வருவது அல்லது குடும்பமாய் உட்கார்ந்து விருந்து சாப்பிடுவது இதெல்லாம் எப்படி நடக்கும்? இவற்றுக்க்காகத்தான் மிக நீண்ட விளம்பர இடைவேளைகள் கொடுக்கிறார்கள் போல இருக்கிறது.
இந்த விசேஷ தினங்களில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சி பட்டிமன்றம். இதை நிதானமாய் மத்தியானமாய் காண்பிக்கக் கூடாதா? காலையில் 10 30 மணிக்குள் அவசரமாய் முடித்து விடுவார்கள். நான் சமையல் வேலை எல்லாம் முடிந்து டிவி முன் வரு முன் இதெல்லாம் முடிந்து போய் ஏதோ ஒரு அஜித் படமோ அல்லது விஜய் படமோ உலகத்திலேயே முதல்முறையாக காண்பிப்பார்கள். அப்புறம் மதியம் முழுவதும் முன் பின் தெரியாத நடிகைகள் அவர்கள் வீட்டு தீவாளி பற்றி புரியாத தமிழில் பேசுவார்கள். தொலைக்காட்சிக்காரகள் இந்நிகழ்சிகளைக் கண்டு ரசியுங்கள் என்று வேறே அடிக்கடி சொல்வார்கள். என்னத்தை ரசிக்கிறது?
இந்த பெங்களூரில் வேறே தீபாவலி கார்த்திகை என்றால் போதும் மழையும் காற்றும் தவறாமல் வந்து விடும். அப்புறம் என்ன தீபம் ஏற்றுவது? குடத்துக்குள்ளேதான் ஏற்றணும்.
அதென்னமோ இந்தப் புடவைக் கடைக்காரர்கள் விளம்பரங்களில்தான் தீபாவளி பார்த்தாலே ஆசைப்படும்படி இருக்கிறது. பெரிய பெரிய கோலங்கள், பட்டுப்பாவடையில் குட்டிக் குழந்தைகள் பட்டாசு கொளுத்துகிறார்கள், இளம்பெண்கள் அழகான போத்தீஸ் புடைவைகளில் வலம் வருகிறார்கள், எல்லோரும் குடும்பமாய் உட்கார்ந்து சிரிக்கிறார்கள். யாரும் தொலைகாட்சி முன் உட்கார்ந்து த்ரிஷா வீட்டு தீபாவளி பார்ப்பதே இல்லை.

உங்கள் வீட்டு தீபாவளி பற்றி சொல்லுங்கள்.
அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பி கு: ஒரு கேள்வி, எனக்குத் தெரிந்த சிலர் இந்த பதிவுகளை ஆங்கில ஸ்க்ரிப்டில் எழுத சொல்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியும் ஆனால் படிக்க வராதாம். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?