Friday, December 17, 2010

எங்க வீட்டு கல்யாணம்

சில வருடங்களுக்கு முன் டுபுக்கு என்ற வலைப்பதிவாளர் ஒரு கல்யாணத்தில் தான் கேட்ட சில சுவையான சம்பாஷணைகளைப் பதிவு செய்திருந்தார். அதை நான் மிகவும் ரசித்துப் படித்தேன். ஏன் என்றால் இது போன்ற நிகழ்வுகள் நம் கல்யாணங்கள் எல்லாவற்றிலும் பொதுவான ஒன்று - நம் எல்லோர் வீட்டிலும் இது போல ஒரு மாமா , சித்தி, அல்லது அத்திம்பேர் இருப்பார். அவரை யாரானும் சிறிசுகள் கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். இல்லை விவரமான பெரிசுகள் என்றால் அவர்கள் சிறிசுகளை கலாய்த்துக் கொண்டிருப்பார்கள். கல்யாணத்துக்குக் களை கூட்டுவதே இது போன்ற விஷயங்கள்தான். மற்றபடி காசி யாத்திரை, ஊஞ்சல், பச்சைப்படி என்று அதெல்லாம் புரோஹிதர் இயக்கத்தில் அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும். இவை எல்லாம் வீடியோவில் பிடிக்கப்பட்டு பத்திரப்பட்டுவிடும்; ஆனால் இந்த உபகதைகள் சிலருக்கு மட்டுமே தெரிந்து நாளடைவில் தொலைந்து போய் விடும்.

இந்தக் கல்யாணத்தில் அப்படி நான் கவனித்த சில சுவையான விஷயங்கள்:
Scene1
பிள்ளையின் மாமா மனைவியிடம்: ஏண்டி பாத்ரூம் உள்ளே போயிருக்கேன். கதவை போட்டுண்டு வந்துட்டே? இத்தனை நாழி கதவை தட்டிண்டிருந்தேன்.
மாமி: ஐயையோ சாரின்னா நான் கவனிக்கலை.
மாமா: ஆமாம் நான் இல்லைன்னு நீ என்னிக்காவது கவனிச்சாதானே?
( வடக்கே கல்யாணத்திலே மாப்பிள்ளையோட செருப்பைதான் ஒளிச்சு வெப்பா. இங்கே மாப்பிள்ளைக்கு மாமாவையே ஒளிச்சு வைக்கறா போலிருக்கு!!)

Scene2
ஒரு அத்தை பெண் (ஒ அ பெ): பொண்ணுக்கு என்ன பண்றா? புள்ளை ஆத்துலே ஏதானும் demand உண்டா?
இன்னொருத்தி: ஒண்ணுமே வேண்டாமாம். சேவை நாழி மாத்ரம் கேட்டாளாம். பிள்ளைக்கு சேவை ரொம்ப பிடிக்குமாம்.
ஒ அ பெ : போச்சுடா. சேவை யார் பிழியறது. ஒரு 5 பவுன் கூட வேணா போட்டுடலாம்.

Scene3
தங்கை என்னிடம்: கார் சாவியை எங்கே வெச்சு தொலைச்சே?
நான்: உன் பைலேதான் போட்டிருப்பேன் சரியா பாரு.
தங்கை: காணுமே.
ஒரு சித்தப்பா பெண்: என்ன காணும்?
தங்கை: என் கார் சாவி. இவ எங்கயோ வெச்சுத் தொலைச்சுட்டா.
அடுத்த 10 நிமிடத்தில் நான் போன இடமெல்லாம்:
'சாவி கெடைச்சுதா?'
"எங்கே தொலைச்சே?'
"வேறே என்ன காணும்?'
'நீ கொஞ்சம் நிதானமா இருக்கணும். ஆனாலும் பரபரப்பு.'
நேரம்தான்.
போதாக்குறைக்கு செருப்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு 8-10 வயது நண்டு சொல்கிறது:
"பெரியம்மாவுக்கு இதே வேலையா போச்சு. எதையானும் தொலைக்கிறது. அப்புறம் அதை தேடறது."
தேவையா?

Scene4:
பெண்ணின் அம்மா: பச்சப்படி எல்லாம் சுத்தி ஆச்சு. வாத்யார் எங்கே? அவர்தான் எப்படி உள்ளே கூப்டுண்டு போகணும்னு வந்து சொல்லணும்.
தங்கை: அவர் என்கிட்டே சொல்லிட்டு போனார்: "நீங்க ஊஞ்சல் பச்சப்படி முடிச்சு மேடைக்கு பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிண்டு வந்துடுங்கோ. நான் கொஞ்சம் சாப்டுட்டு வரேன். எனக்கு low sugar ஆயிடும்" அப்படீன்னு சொல்லிட்டு போனார்.
(இது எப்படி இருக்கு!இந்த நாள்லே யாரையும் நம்ப முடியலை சார்!!)

Scene5:
வீட்டு பெரிசு ஒண்ணு: ஏண்டி உஷா, தாலி கட்டினதும் ஜூஸ் ஒண்ணு கொடுப்பாளே. ஒண்ணும் காணுமே.
நான்: அதோ பாருங்கோ அந்த மூலைலே நின்னுண்டு ஒருத்தன் குடுத்திண்டிருக்கான். வாங்கோ
அங்கே போனால் ஜூஸ் ஓவர்.
பெரிசு: நாக்கெல்லாம் வறண்டு போச்சு கொஞ்சம் தாராளமா கலக்கப்படாதோ. arrangements போறாது.
நான்: ஷூ வாய மூடுங்கோ, நாம்தான் பொண் ஆத்துக்காரா. யாரை போய் குத்தம் சொல்றது?
இந்த பெருசுங்க தொல்லை ஆனாலும் தாங்கலைபா.

Scene6:
காலையிலிருந்து பாண்டில் அலைந்து கொண்டிருந்த சித்தி பையனிடம் நான்: ஏன் வேஷ்டி எடுத்துண்டு வரலியா?
சித்தி பிள்ளை: எனக்கு இவா வேஷ்டி வெச்சு குடுப்பானு நான் எடுத்துண்டு வரலை. இவா எனக்கு வேஷ்டியே குடுக்கலை.
போச்சுடா. வாயை மூடிண்டு இருந்திருக்கணும்.


நாங்கள் நான்கு பேர் உறவினர்களுக்கு பக்ஷணம் கொடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு தூரத்து மாமி என்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். நானும் பக்ஷணம் கொடுத்து அனுப்பினேன். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் என் மன்னியிடம் பக்ஷணம் வாங்கிக் கொண்டிருக்கிறாள். பின்னால் கேட்டால் எங்கள் நாலு பேரிடமும் ஒரொரு பாக்கெட் வங்கிக் கொண்டு போயிருக்கிறாள். சம்பந்திகளை விட அதிகமாய் சீர் பக்ஷணம் அவள் வீட்டிற்குதான் போயிருக்கும் போலிருக்கு. அதான் நல்ல பெரிய பையாக கொண்டு வந்திருந்தாள். இனிமேல் வாசலில் இதற்கெல்லாம் செக்யூரிட்டி செக் போடவேண்டும் போல் இருக்கிறது.

நான் கலந்துகொண்ட கல்யாணத்தில் சில விஷயங்கள் ஆச்சரியம் அளித்தன. பெண்ணுக்கு ஒரு கிலோ அளவு வெள்ளி சாமான் வாங்கி இருந்தாலும் கல்யாண கலாட்டாவில் தொலைந்து போய்விடும் என்ற பயத்தில் எதையும் லாக்கெரில் இருந்து எடுக்கவே இல்லையாம். விரதம் எல்லாம் சத்திரத்தில் கொடுத்த பித்தளை பாத்திரங்களிலேயே செய்தார்கள். சில நேரங்களில் பேப்பர் கப்பில் கூட எண்ணை, குங்குமம் சந்தனம் எல்லாம் வைத்திருந்தார்கள். எனக்குக் கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட வெள்ளிபாதிரங்கள் உபயோகப்பட்ட ஒரே நாள் என் கல்யாணம் அன்றுதான். இப்போதெல்லாம் அதற்கும் உபயோகப்படவில்லை.

விரதத்திலிருந்து கட்டுசாதம் வரை நான் சாப்பிட்ட விருந்துகளின் எண்ணிக்கை 7. நடுவே நலங்கின்போது வேறே ஏதோ சமோசா, ஸ்வீட் என்று கொடுத்தார்கள். நல்லவேளை அது ஒன்று மட்டும் நான் தொடவில்லை. இப்போது 4 நாட்களாய் 'எத்தை தின்றால் பித்தம் தீரும்' என்ற நிலைமையில் இருக்கிறேன்.

சாப்பாட்டு ஹாலில் ஒரு uncle ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டார் - "எனக்காக ஒரே ஒரு இட்லி. இன்னும் ஒரு தோசை. முறுகலாய்' எனறு. அவரை வேறே நாலைந்து பேர் புகழ்ந்து தள்ளி விட்டார்கள் - 'இப்போதெல்லாம் பாருங்கோ. கல்யாண வீட்டில் பந்தி விசாரிப்பே இருக்கறதில்லை. வந்தியா, சாப்டியா எனறு ஆகி விட்டது. உங்களை மாதிரி யார் இப்படி கேட்கிறார்கள்' எனறு. அவ்ளவுதான் மனுஷர் அடுத்த பந்தியில் இன்னும் ஒரு படி மேலே போய் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். அவரைக் கொண்டு சமையலறை மூலையில் cacophonix மாதிரி கட்டிப் போட்டு விடலாமா என்ற ஒரு யோசனை கூட எனக்கு வந்தது. மனுஷன் சோறு போட்டே கொன்று விடுவார். அடுத்த கல்யாணத்தில் அவரை பார்த்தால் பட்டினி கிடப்பது உத்தமம்.

பெண் வீட்டில் பூஜை அறையில் ஒரு அடுக்கில் இரண்டு தேங்காய்களை ஊற வைத்திருந்தார்கள். என்ன விஷயம் எனறு விசாரித்தால் அப்படி போட்டு வைத்தால் மழை வராது என்றார்கள். கல்யாணத்துக்கு 5 நாள் முன் வரையில் புயலும் பெருமழையும் அடித்ததில் அரண்டு போய் இது போல் செய்திருக்கிறார்கள்.
இப்போது தெரிகிறது சென்னையில் பாதி சமயம் ஏன் மழை வருவதில்லை எனறு.

மற்றபடி எல்லாம் சௌக்கியம். உங்கள் சௌக்யத்துக்கு கமெண்ட் போடவும்.