Friday, December 17, 2010
எங்க வீட்டு கல்யாணம்
இந்தக் கல்யாணத்தில் அப்படி நான் கவனித்த சில சுவையான விஷயங்கள்:
Scene1
பிள்ளையின் மாமா மனைவியிடம்: ஏண்டி பாத்ரூம் உள்ளே போயிருக்கேன். கதவை போட்டுண்டு வந்துட்டே? இத்தனை நாழி கதவை தட்டிண்டிருந்தேன்.
மாமி: ஐயையோ சாரின்னா நான் கவனிக்கலை.
மாமா: ஆமாம் நான் இல்லைன்னு நீ என்னிக்காவது கவனிச்சாதானே?
( வடக்கே கல்யாணத்திலே மாப்பிள்ளையோட செருப்பைதான் ஒளிச்சு வெப்பா. இங்கே மாப்பிள்ளைக்கு மாமாவையே ஒளிச்சு வைக்கறா போலிருக்கு!!)
Scene2
ஒரு அத்தை பெண் (ஒ அ பெ): பொண்ணுக்கு என்ன பண்றா? புள்ளை ஆத்துலே ஏதானும் demand உண்டா?
இன்னொருத்தி: ஒண்ணுமே வேண்டாமாம். சேவை நாழி மாத்ரம் கேட்டாளாம். பிள்ளைக்கு சேவை ரொம்ப பிடிக்குமாம்.
ஒ அ பெ : போச்சுடா. சேவை யார் பிழியறது. ஒரு 5 பவுன் கூட வேணா போட்டுடலாம்.
Scene3
தங்கை என்னிடம்: கார் சாவியை எங்கே வெச்சு தொலைச்சே?
நான்: உன் பைலேதான் போட்டிருப்பேன் சரியா பாரு.
தங்கை: காணுமே.
ஒரு சித்தப்பா பெண்: என்ன காணும்?
தங்கை: என் கார் சாவி. இவ எங்கயோ வெச்சுத் தொலைச்சுட்டா.
அடுத்த 10 நிமிடத்தில் நான் போன இடமெல்லாம்:
'சாவி கெடைச்சுதா?'
"எங்கே தொலைச்சே?'
"வேறே என்ன காணும்?'
'நீ கொஞ்சம் நிதானமா இருக்கணும். ஆனாலும் பரபரப்பு.'
நேரம்தான்.
போதாக்குறைக்கு செருப்பைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு 8-10 வயது நண்டு சொல்கிறது:
"பெரியம்மாவுக்கு இதே வேலையா போச்சு. எதையானும் தொலைக்கிறது. அப்புறம் அதை தேடறது."
தேவையா?
Scene4:
பெண்ணின் அம்மா: பச்சப்படி எல்லாம் சுத்தி ஆச்சு. வாத்யார் எங்கே? அவர்தான் எப்படி உள்ளே கூப்டுண்டு போகணும்னு வந்து சொல்லணும்.
தங்கை: அவர் என்கிட்டே சொல்லிட்டு போனார்: "நீங்க ஊஞ்சல் பச்சப்படி முடிச்சு மேடைக்கு பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிண்டு வந்துடுங்கோ. நான் கொஞ்சம் சாப்டுட்டு வரேன். எனக்கு low sugar ஆயிடும்" அப்படீன்னு சொல்லிட்டு போனார்.
(இது எப்படி இருக்கு!இந்த நாள்லே யாரையும் நம்ப முடியலை சார்!!)
Scene5:
வீட்டு பெரிசு ஒண்ணு: ஏண்டி உஷா, தாலி கட்டினதும் ஜூஸ் ஒண்ணு கொடுப்பாளே. ஒண்ணும் காணுமே.
நான்: அதோ பாருங்கோ அந்த மூலைலே நின்னுண்டு ஒருத்தன் குடுத்திண்டிருக்கான். வாங்கோ
அங்கே போனால் ஜூஸ் ஓவர்.
பெரிசு: நாக்கெல்லாம் வறண்டு போச்சு கொஞ்சம் தாராளமா கலக்கப்படாதோ. arrangements போறாது.
நான்: ஷூ வாய மூடுங்கோ, நாம்தான் பொண் ஆத்துக்காரா. யாரை போய் குத்தம் சொல்றது?
இந்த பெருசுங்க தொல்லை ஆனாலும் தாங்கலைபா.
Scene6:
காலையிலிருந்து பாண்டில் அலைந்து கொண்டிருந்த சித்தி பையனிடம் நான்: ஏன் வேஷ்டி எடுத்துண்டு வரலியா?
சித்தி பிள்ளை: எனக்கு இவா வேஷ்டி வெச்சு குடுப்பானு நான் எடுத்துண்டு வரலை. இவா எனக்கு வேஷ்டியே குடுக்கலை.
போச்சுடா. வாயை மூடிண்டு இருந்திருக்கணும்.
நாங்கள் நான்கு பேர் உறவினர்களுக்கு பக்ஷணம் கொடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு தூரத்து மாமி என்னிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். நானும் பக்ஷணம் கொடுத்து அனுப்பினேன். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் என் மன்னியிடம் பக்ஷணம் வாங்கிக் கொண்டிருக்கிறாள். பின்னால் கேட்டால் எங்கள் நாலு பேரிடமும் ஒரொரு பாக்கெட் வங்கிக் கொண்டு போயிருக்கிறாள். சம்பந்திகளை விட அதிகமாய் சீர் பக்ஷணம் அவள் வீட்டிற்குதான் போயிருக்கும் போலிருக்கு. அதான் நல்ல பெரிய பையாக கொண்டு வந்திருந்தாள். இனிமேல் வாசலில் இதற்கெல்லாம் செக்யூரிட்டி செக் போடவேண்டும் போல் இருக்கிறது.
நான் கலந்துகொண்ட கல்யாணத்தில் சில விஷயங்கள் ஆச்சரியம் அளித்தன. பெண்ணுக்கு ஒரு கிலோ அளவு வெள்ளி சாமான் வாங்கி இருந்தாலும் கல்யாண கலாட்டாவில் தொலைந்து போய்விடும் என்ற பயத்தில் எதையும் லாக்கெரில் இருந்து எடுக்கவே இல்லையாம். விரதம் எல்லாம் சத்திரத்தில் கொடுத்த பித்தளை பாத்திரங்களிலேயே செய்தார்கள். சில நேரங்களில் பேப்பர் கப்பில் கூட எண்ணை, குங்குமம் சந்தனம் எல்லாம் வைத்திருந்தார்கள். எனக்குக் கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட வெள்ளிபாதிரங்கள் உபயோகப்பட்ட ஒரே நாள் என் கல்யாணம் அன்றுதான். இப்போதெல்லாம் அதற்கும் உபயோகப்படவில்லை.
விரதத்திலிருந்து கட்டுசாதம் வரை நான் சாப்பிட்ட விருந்துகளின் எண்ணிக்கை 7. நடுவே நலங்கின்போது வேறே ஏதோ சமோசா, ஸ்வீட் என்று கொடுத்தார்கள். நல்லவேளை அது ஒன்று மட்டும் நான் தொடவில்லை. இப்போது 4 நாட்களாய் 'எத்தை தின்றால் பித்தம் தீரும்' என்ற நிலைமையில் இருக்கிறேன்.
சாப்பாட்டு ஹாலில் ஒரு uncle ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டார் - "எனக்காக ஒரே ஒரு இட்லி. இன்னும் ஒரு தோசை. முறுகலாய்' எனறு. அவரை வேறே நாலைந்து பேர் புகழ்ந்து தள்ளி விட்டார்கள் - 'இப்போதெல்லாம் பாருங்கோ. கல்யாண வீட்டில் பந்தி விசாரிப்பே இருக்கறதில்லை. வந்தியா, சாப்டியா எனறு ஆகி விட்டது. உங்களை மாதிரி யார் இப்படி கேட்கிறார்கள்' எனறு. அவ்ளவுதான் மனுஷர் அடுத்த பந்தியில் இன்னும் ஒரு படி மேலே போய் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். அவரைக் கொண்டு சமையலறை மூலையில் cacophonix மாதிரி கட்டிப் போட்டு விடலாமா என்ற ஒரு யோசனை கூட எனக்கு வந்தது. மனுஷன் சோறு போட்டே கொன்று விடுவார். அடுத்த கல்யாணத்தில் அவரை பார்த்தால் பட்டினி கிடப்பது உத்தமம்.
பெண் வீட்டில் பூஜை அறையில் ஒரு அடுக்கில் இரண்டு தேங்காய்களை ஊற வைத்திருந்தார்கள். என்ன விஷயம் எனறு விசாரித்தால் அப்படி போட்டு வைத்தால் மழை வராது என்றார்கள். கல்யாணத்துக்கு 5 நாள் முன் வரையில் புயலும் பெருமழையும் அடித்ததில் அரண்டு போய் இது போல் செய்திருக்கிறார்கள்.
இப்போது தெரிகிறது சென்னையில் பாதி சமயம் ஏன் மழை வருவதில்லை எனறு.
மற்றபடி எல்லாம் சௌக்கியம். உங்கள் சௌக்யத்துக்கு கமெண்ட் போடவும்.
Sunday, November 21, 2010
தாங்க முடியலைங்க..
ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது - பத்து மணி இதற்கு உகந்த வேளையா?
எங்கள் வீட்டில் எல்லாம் ஞாயிறு காலையில் நான்கு தினசரிகள் வரும். ஒவ்வொன்றாய் கொஞ்சம் மேய்ந்து விட்டு , அடிகாஸ் ஹோடேலோ அல்லது s.l.v. யிலிருந்தோ இட்லி அ தோசை வரவழைத்து மெதுவாக சாப்பிட்டு விட்டு, இன்டர்நெட்டில் மெயில் எல்லாம் பார்த்து, உறவினர்/ நண்பர்கள் யாரானும் சாட்டில் இருந்தால் கொஞ்சம் வம்பளந்து விட்டு பத்து மணி வாக்கில்தான் குளியலைப் பற்றிய யோசனையே வரும். சரி என்று தலை முழுக்க எண்ணை தடவி பாக்கி இருப்பதை முகத்தில் தடவி குளிக்க போகலாம் என்று எழுந்தால் வாசலில் பெல். எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியும் ஞாயிறு அன்று பனிரெண்டு மணிக்கு மேல்தான் வருவாள். சரி வேறே வழி இல்லை என்று எண்ணையில் தோய்த்தெடுத்த பஜ்ஜி போல ஹவுஸ் கோட்டுடன் வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்தால் இரண்டு மூன்று பேர். யாரென்று கூட தெரியவில்லை. ஏதானும் தேர்தல் வருகிறதோ , ஓட்டு கேட்க வந்திருக்கிறார்களோ அல்லது சென்செஸ் பேர்வழிகளா என்று பார்த்தால் 'பிள்ளை கல்யாணம்' என்று ஆரம்பித்தார்கள். அந்த காலத்து நண்பர்கள், பார்த்து பதினைந்து வருடம் ஆகி இருக்கும். அடையாளம் கண்டு பிடிக்கவே முழுதாய் ஒரு நிமிடம் ஆயிற்று. இத்தனை நாள் கழித்து பார்க்கிறோம், நானோ இந்த கோலத்தில். மானமே போச்சு. சரி உட்கார வைத்து விட்டு கொஞ்சம் டீசென்ட் ஆக உடை உடுத்தி வரலாம் என்று பார்த்தால் 'இல்லை உட்கார நேரமில்லை. நிறைய வீடு போக வேண்டும்' என்கிறார்கள். அங்கெல்லாம் போய் விட்டு இங்கே வரக்கூடாதோ! குளிக்கப் போன கணவரோ நிதானமாய் நிம்மதியாய் ஷவரில் வெந்நீரை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். Ignoring the elephant in the room என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல ஒரு conversation. எண்ணை சட்டி போல நான் இருந்த கோலம் அவர்களுக்கும் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். எனக்கோ 'பூமி பிளக்காதா உள்ளே போய் விட மாட்டோமா' என்ற நிலை. ஆனால் மேலே என்னமோ சாதாரணமாய் ' பெண் என்ன செய்கிறாள்? பிள்ளை எங்கே இருக்கிறான்? ' என்பது போல ஒரு சம்பாஷணை.
ஒரு வழியாய் அரை மணி நேரத்தில் போய் சேர்ந்தார்கள்.
முன்பெல்லாம் குறிப்பிட்ட நாட்களில் அல்லது நேரங்களில் சில காரியங்களை செய்யலாம் என்ற நியதிகள் , கட்டுப்பாடுகள் உண்டு. சில சமயம் அவை புரியாமல் இருக்கும். செவ்வாய்கிழமை செய்தால் என்ன, அமாவாசை அன்று போனால் என்ன என்று தோன்றும். நானே பல சமயம் இவற்றை எல்லாம் அபத்தம் என்று ஒதுக்கி இருக்கிறேன். நேற்றுதான் புரிந்தது எதற்காக இவை எல்லாம் ஆரம்பித்திருக்கலாம் என்று. இது போல் சில நியதிகள் இருந்தால் நமக்கும் நிச்சயமாய்த் தெரியும் இன்னின்ன நாட்களில் அ நேரங்களில் யாரும் வர மாட்டார்கள் என்று. அப்போது நாம் பாட்டுக்கு நிதானமாய் நம் அலுவல்களை முடித்துக் கொள்ளலாம். இன்றைய தேதியில் எல்லோரிடமும் தொலைபேசி இருக்கிறது. வரும் முன்பாக ஒரு கால் அடிக்க முடியாதா? குறைந்த பக்ஷமாய் நமக்கு முன் சென்ற வீட்டிலிருந்து கிளம்பும் போதாவது கூப்பிட்டு சொல்லலாமே. நாலைந்து பேர் இருக்கும் வீடு என்றால் பிரச்சினை இல்லை. யாரானும் ஒருவர் இருப்பார்கள். அவர்களை பேசிக்கொண்டிருக்கச் சொல்லி விட்டு நாம் தயாராகி வரலாம். எங்கள் வீடு போன்ற இடங்களில்தான் பிரச்சினை.
நான் ஒன்றும் இந்த social etiquette பற்றி மிகவும் கவலைப் படுபவள் இல்லை என்றாலும் விருந்தினர் முன்பு இருக்கவேண்டிய கோலத்துக்கு ஒரு எல்லை உண்டல்லவா. நமக்கே கூச்சமாய் இருக்கும் நிலையில் எப்படி ? சொல்வார்களே திரௌபதி சபைக்கு வந்த நிலையை பற்றி - கிட்டத்தட்ட அப்படிதான் எனக்கும். கிருஷ்ணன் வந்து ஒரு கண்ணியமான ஆடையை போர்த்த மாட்டாரா என்பது போல.
ஏற்கனவே இத்தனை எரிச்சலில் இருந்தேனா. இது போதாதென்று அவர்கள் பத்திரிக்கையைக் கொடுத்து கூடவே ஒரு சின்ன டப்பாவையும் கொடுத்தார்கள். என்னவென்று பிரித்துப் பார்த்தால் ஒரு சின்ன குங்கும கிண்ணம். உள்ளே ஒரு பொடி குங்குமம் கூட இல்லை. இது என்ன கூத்து? கல்யாணத்தில் மணமக்களுக்கு நாம்தான் ஆசீர்வாதமாய் பணமோ பொருளோ கொடுப்போம். அழைக்கப்பட்டவர்களுக்கு என்ன பரிசுப்பொருள்? வருவதற்கு ஊக்கப் பரிசா? இதையே முஹூர்த்தம் ஆன பின் தாம்பூலப் பையில் கொடுத்திருந்தால் கூட இத்தனை விசித்திரமாக இருந்திருக்காது. அதென்ன அழைப்புடன் ஒரு gift? முன்பெல்லாம் கல்யாணத்துக்கு அழைத்து வண்டி சத்தம் என்று ரயில் டிக்கெட்டுக்கான பணத்தையும் கொடுப்பார்களாம். அது போலவா இது?
என்னமோ போங்கள் மொத்தத்தில் ஒண்ணும் புரியவில்லை. இனிமேல் வாசலில் விசிடிங் hours ஒரு போர்டு போட்டு விட்டு மற்ற நேரத்தில் வருபவர்களுக்கு போஸ்ட் பாக்ஸ் தவிர ஒரு பெட்டியும் வைக்கலாம் என்று இருக்கிறேன் - இது போல பரிசுப் பொருட்களைப் போட்டு விட்டு செல்வதற்கு. அப்புறம் இது போல் பத்திரிக்கையோட gift கொடுத்த கல்யாணத்துக்கு போக முடியாவிட்டால் அப்படியே அவர்கள் கிளம்பும்போது அவர்கள் கையிலேயே கொஞ்சம் அட்சதையோடு gift கொடுத்தால் கோபித்துக் கொள்வார்களா என்ன? ச்சே ச்சே அதெல்லாம் கோவிக்க மாட்டாங்க. அவங்க ஆரம்பிச்சு வெச்சதைதானே நாமளும் பண்ணபோறோம், என்ன சொல்றீங்க... அவங்களுக்கு சௌகர்யமாய் வழக்கங்களை மாற்றிக் கொண்டிருப்பதைப்போல நாமும் கொஞ்சம் மாற்றினால் புரிந்து கொள்ள மாட்டார்களா என்ன?
ரொம்ப மண்டை காஞ்சு இருந்தேன். நேத்து தலைக்குப் போட்ட எண்ணை கூட பிரயோஜனப் படலை. அதான் உங்களிடம் சொல்லி கொஞ்சம் ஆறுதல் தேடலாமேன்னு. மனசுக்கு ஆறுதலாய் ஏதானும் சொல்லிட்டுப் போங்க.
Tuesday, November 2, 2010
தீப ஒளித் திருநாள்
இந்த விசேஷ தினங்களில் எனக்குப் பிடித்த நிகழ்ச்சி பட்டிமன்றம். இதை நிதானமாய் மத்தியானமாய் காண்பிக்கக் கூடாதா? காலையில் 10 30 மணிக்குள் அவசரமாய் முடித்து விடுவார்கள். நான் சமையல் வேலை எல்லாம் முடிந்து டிவி முன் வரு முன் இதெல்லாம் முடிந்து போய் ஏதோ ஒரு அஜித் படமோ அல்லது விஜய் படமோ உலகத்திலேயே முதல்முறையாக காண்பிப்பார்கள். அப்புறம் மதியம் முழுவதும் முன் பின் தெரியாத நடிகைகள் அவர்கள் வீட்டு தீவாளி பற்றி புரியாத தமிழில் பேசுவார்கள். தொலைக்காட்சிக்காரகள் இந்நிகழ்சிகளைக் கண்டு ரசியுங்கள் என்று வேறே அடிக்கடி சொல்வார்கள். என்னத்தை ரசிக்கிறது?
இந்த பெங்களூரில் வேறே தீபாவலி கார்த்திகை என்றால் போதும் மழையும் காற்றும் தவறாமல் வந்து விடும். அப்புறம் என்ன தீபம் ஏற்றுவது? குடத்துக்குள்ளேதான் ஏற்றணும்.
அதென்னமோ இந்தப் புடவைக் கடைக்காரர்கள் விளம்பரங்களில்தான் தீபாவளி பார்த்தாலே ஆசைப்படும்படி இருக்கிறது. பெரிய பெரிய கோலங்கள், பட்டுப்பாவடையில் குட்டிக் குழந்தைகள் பட்டாசு கொளுத்துகிறார்கள், இளம்பெண்கள் அழகான போத்தீஸ் புடைவைகளில் வலம் வருகிறார்கள், எல்லோரும் குடும்பமாய் உட்கார்ந்து சிரிக்கிறார்கள். யாரும் தொலைகாட்சி முன் உட்கார்ந்து த்ரிஷா வீட்டு தீபாவளி பார்ப்பதே இல்லை.
உங்கள் வீட்டு தீபாவளி பற்றி சொல்லுங்கள்.
அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பி கு: ஒரு கேள்வி, எனக்குத் தெரிந்த சிலர் இந்த பதிவுகளை ஆங்கில ஸ்க்ரிப்டில் எழுத சொல்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியும் ஆனால் படிக்க வராதாம். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Wednesday, October 20, 2010
எந்திரன்
படத்தை ரஜனிகாந்தால் மட்டும்தான் இப்படி ஒரு வெற்றிப்படம் ஆக்கி இருக்க முடியும். வேறு யார் நடித்திருந்தாலும் 'காதுலே பூ' என்று ஒதுக்கி இருப்பார்கள். அனால் அவருள்ளே இருக்கும் அபாரமான நடிப்புத் திறமைக்கு சவாலான ஒரு திரைக்கதை யாரிடமும் இன்று இல்லையா என்ற ஆதங்கம் மேலிடுகிறது.
நூறு மனிதர்களின் ஆற்றல் சக்தி படைத்த இந்த ரோபோட் டால் எத்தனையோ செய்ய முடியும் ஆனால் அதுவும் ஐஸ்வர்யாவின் அழகில் மயங்கி அவளை அடைய வேண்டும் என்று அலைகிறது. வேறு எந்தப்பெண்ணையும் இந்த நெருக்கத்தில் பார்க்காததினால் இருக்கலாம். அவள்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிகிறது. இன்னும் இரண்டு அழகான இளம் பெண்களை அதற்கு முத்தம் கொடுக்கச் சொல்லி இத்தனை கஷ்டங்களைத் தவிர்த்திருக்கலாம். எந்தப் பெண்ணாலும் தன்னுடைய ஹார்மோன் ப்ரவாஹத்தை தணிக்க முடியும் என்று அதனுடைய அறிவுக்குத் தெரிந்து போயிருக்கும்.
(அபிஷேக் பச்சன் கவனிக்கவும்: எங்கேயாவது ரோபோட் சல்லிசா கிடைத்தால் கூட வாங்கிண்டு வந்துடாதீங்க. இந்த மாதிரி ஒரு மனைவியை வீட்டிலே வெச்சுகிட்டு ரொம்ப ஆபத்தான விஷயம்!)
அது சரி அந்த ரோபோட் சிட்டி காட்டுகிற அளவு உணர்சிகளைக் கூட இந்த ஐஸ்வர்யா முகத்தில் காணுமே. ஒருக்கால் அவர்தான் ரோபோட்டோ என்ற சந்தேஹம் வரும் அளவிற்கு உணர்ச்சி காட்டாமல் வந்து போகிறார். அருமையாக நடனம் ஆடுகிறார். ஆனால் கொஞ்சம் அசடான கேரக்டர் - படிக்காமல் பரிட்சையில் பிட் அடிக்கிறது, ஊர் பேர் தெரியாதவனைப் போய் ஒரு நாள் பாய் பிரெண்ட் ஆக இருக்கிறாயா என்று கேட்டு பிரச்சினையை விலை கொடுத்து வாங்குகிறது என்று அசட்டுத்தனமான பெண் . இத்தனை புத்திசாலியான வசீ இந்த அசடை பேசாமல் சிட்டிக்கு விட்டுக் கொடுத்து விட்டு கொஞ்சம் புத்தியுள்ள பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்திருக்கலாம். படம் இண்டர்வல்லில் முடிந்து போயிருக்கும்.
பிரம்மாண்டம் காட்டி இருக்க முடியாது. 150 கோடி செலவழித்து ரெகார்ட் பண்ணி இருக்க முடியாது. ஷங்கருக்கு வேலை இல்லாமல் போய் இருக்கும்.
என்னவோ கொடுத்த நூறு ரூபாய்க்கு என்னென்னமோ வித்தை காண்பித்தார்கள்- பெரியவர்களுக்கான கார்டூன் படம் மாதிரி. மாச்சு பிச்சு என்று அழகான இடங்கள் எல்லாம் காண்பித்தார்கள். ஐஸ்வர்யாவுக்குக் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்ததை வசூல் பண்ணவேன்டியோ என்னவோ தேவை இல்லாத இடங்களில் எல்லாம் பாட்டுக்கள் வேறே. சத்தம் கொஞ்சம் அதிகம். காதில் ஏதோ ரீங்காரம் இருந்துகொண்டே இருந்தது.
ரஜினி படங்களில் காமெடி என்று தனி track தேவையே இல்லை. அவரே அருமையாக காமெடி பண்ணுவார். இங்கே சந்தானம், கருணாஸ் என்று தேவையே இல்லாமல் மொக்கையான காமெடி track. சத்தே இல்லாமல் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் கதையை பல நேரங்களில் கெடுக்கும் வகையில் இருந்தது அவர்கள் காமெடி.
அதெல்லாம் சரி... இந்த grade 2 , 3 என்பதெல்லாம் அரசாங்க லேப் லே தானே இருக்கும்? வசீகரன் அரசாங்க லேப் லையா சிட்டியை உருவாக்கி இருக்கார்? அப்படின்னா எப்படி சிட்டியை அவ்ளோ சுலபமா சானாவோட அனுப்பினார்? 4 மேல் அதிகாரிகள் கிட்டே triplicate லே authorisation வாங்கினால்தானே முடியும்?
அவ்ளோ ரகசியமா அந்த போரா அத்தனை ரோபோக்களை பண்ணி வெச்சிருக்கார்?அதுவும் ரெடி யா பவர் சார்ஜ் பண்ணி. எனக்கு எங்கே வீட்டுலே இருக்கற 4 மெஷின்களுக்கு ரெகுலரா பவர் கட் இல்லாமே பவர் வாங்கவே உயிர் போகிறதே?
இல்லே அரசாங்க லேப் தானே என்ன வேணா நடக்கும் அப்டீங்கறீங்களா? அதுவும் சரிதான்.
எல்லாத்தையும் விட அந்த சனா வைக் கடத்தின உடனே FIR கூட file செய்யறதுக்குள்ளே அத்தனை போலிஸ்காரங்க அது பின்னாடி வந்தாங்க பாருங்க. எந்த சயன்டிஸ்ட் கல்யாணத்துக்கு இந்த போலிஸ் பாதுகாப்பு கெடைக்கும்? வேணா முதல் அமைச்சர் வீட்டுக் கல்யாணத்துக்கு கெடைக்கும்.
அப்புறம் முதல்நாள் சேகரிச்ச குப்பையை அப்டியே உடனே பெருங்குடியில் கொண்டு கொட்டிடுவாங்களாம். அதுவும் government லேப் வேஸ்ட் டை . ஏன்யா வயிற்றெரிச்சலைக் கெளப்பறீங்க....
இதெல்லாம்தான் கொஞ்சம் சயன்ஸ் பிக்ஷேன் மாதிரி இருந்தது.
ரஜினி சார், தளபதி மாதிரி இன்னொரு படம் எப்போ பண்ணுவீங்க?
Monday, September 27, 2010
நினைவில் நின்றதும் , நெஞ்சைத் தொட்டதும்
விஸ்வநாதன் மற்று இயக்குனர் வசந்த் வந்திருந்தார்கள். K.B, M.S.V. கூட்டணிப் பாடல்கள் என்னுடைய இளமை காலத்துப் பாடல்கள். பல சமயங்களில் காலையில் என்ன சாப்பிட்டேன் என்பதே மறந்து போகும் எனக்கு அந்த வரிகள் இன்னும் நினைவு இருப்பது எனக்கே ஆச்சரியம். அத்துணை அருமையான பாடல் வரிகள், இனிமையான இசை - இன்றும் என்னுடைய sub conscious memory யில் அழியாமல் இருக்கின்றன. சில பாடல்களைப் பற்றி அவர்கள் சொன்ன பின்னணிச் செய்திகள் இன்னும் சுவாரசியமாக இருந்தன.
'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில்தான் முதல்முறையாக slow motion shots உபயோகப்படுத்தப்படனவாம். வசந்த் சொன்னார். அதே படத்தில் தான் முதன்முறையாக reverse technique க்கை கையாண்டிருப்பதாக K.B. சொன்னார். இது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சுபா சிவகுமாரை நம்பிக்கையோடு காதலிக்கும் பொது பால் பொங்கி வரும் ('ஆசை பொங்குது பால் போலே ') பிறகு அந்த காதல் கை கூடாது போகும்போது பொங்கிய பால் அப்படியே பாத்திரத்தினுள் அடங்கிப் போகும். இதே போல ஸ்ரீவித்யாவின் காதலுக்கு அடையாளமாய் புகையையும் இப்படியே பயன் படுத்தி இருப்பார். (காற்றில் மிதக்கும் புகை போலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே)
இன்னொரு போட்டியாளர் "அவர்கள்' படத்திலிருந்து 'இங்கும் அங்கும் பாதை உண்டு' பாடலைப் பாடினார். இந்தப் பாடலை கவிஞரின் பிறந்தநாள் விழாவில் வந்திருந்தவர்கள் முன்னிலையிலேயே on-the-spot எழுதி compose செய்தார்களாம். எப்படிப்பட்ட பாடல் - என்ன ஒரு genius? மெட்டுக்குப் பாட்டு எழுதுவதென்பது அந்த காலத்தில மிகவும் அபூர்வம். அதுவும் K.B. படங்களில் பாடல்கள் கதையை ஒட்டி அமைந்திருக்கும். பல சமயங்களில் முக்கியமான முடிவுகளுக்கான அடிப்படை காரணம் பாடல்களிலேயே சொல்லப்பட்டுவிடும், இது போல் plot progression னுக்கு உறுதுணையாக இருக்கும் வரிகள் மிகவும் முக்கியமானதால் அநேகமாக வரிகளும் இசையும் இணைந்து compose செய்ய வேண்டும். ஆனால் 'வான் நிலா நிலா அல்ல' என்ற பட்டினப் பிரவேசம்' படப் பாடல் மெட்டுக்கு எழுதப்பட்டதாம். M.S.V. யின் இந்த மெட்டு K.B. க்கு ரொம்ப பிடித்துப் போனதால் எப்படியாவது இந்த மெட்டுக்கு கவிஞரிடம் ஒரு பாடல் வாங்கி விடுங்கள் என்று K.B. கேட்டுக் கொண்டாராம். ' ந ந நா ந ந நா' என்று M.S.V மெட்டைப் பாடிக் காட்டியபோது கவிஞர் 'நா நா என்று என்னத்தை எழுதுவது' என்று அலுத்துக் கொண்டாராம். பிறகு M.S.V 'ல ல லா" என்று அதே மெட்டை போட்டதும் 'சரி இ ந இந்தா "லா லா என்றே பாட்டு எழுதி தருகிறேன் என்று சொல்லி இந்தப் பாட்டை எழுதித் தந்தாராம். இந்தப்பாடலில் அநேகமான வார்த்தைகளும் ஒவ்வொரு வரியும் லா என்றே முடியும்
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும நிலா என் தேவியின் நிலா
நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
இப்படி.
மூன்று முடிச்சு படத்தில் வந்த 'ஆடி வெள்ளி தேடி வந்து" என்ற பாடலில் அந்தாதி பாணியைக் கையாண்டிருப்பது பற்றியும் சொன்னார் K.B. அவர் பல புதுமைகளை செய்து முன்னோடியாக இருந்திருக்கிறார். அதில் எனக்கு மிகவும் பிடித்தது 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் "சிப்பி இருக்குது முது இருக்குது" பாடலில் ஸ்ரீதேவி மெட்டு சொல்ல கமல் பாடல் வார்த்தைகள் சொல்லுவது. இப்படித்தான் கவிஞரும் , M.S.V யும் வேலை செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
(ஒரு முறை கவிஞர் அரை மணிக்குள் பாடல் எழுதியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இது "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற படத்தில் வரும்
"ஆண்டவன் இல்லா உலகம் இது" என்ற பாட்டு.)
நிகழ்ச்சியில் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கனாக் காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல, தெய்வம் தந்த வீடு , முத்துக் குளிக்க வாரீஹலா என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பாடப் பாட K.B.யும், M.S.V யும் கட்டிக்கொள்ளாத குறைதான். நானும் அப்படியே மலரும் நினைவுகளில் மூழ்கி விட்டேன். இன்றைய பாடல்களில் எத்தனை பாடல்கள் இது போல் காலம் கடந்து நிற்கும் என்பது கேள்விக்குறிதான். ஒருவேளை இந்த பாடல்களெல்லாம் என்னுடைய தலைமுறைக்குதான் நெஞ்சில் நிறைந்தவையா என்றும் எனக்குதெரியாது. மொத்தத்தில் மிக அருமையான ஒரு நிகழ்ச்சி.
நிகழ்ச்சியை அளிக்கும் விளம்பரதாரர்கள் Bru காபி:
விளம்பரமும் அருமையோ அருமை.
அந்த பெண் கவலையே இல்லாமல் இரண்டாவது decoction இறக்குவதற்கு வெந்நீர் போடுவதாகட்டும், விருந்தினர்கள் இரண்டாவது decoction என்று கண்டு பிடித்து விடுவார்களோ என்ற மாமியாரின் கவலைக்கு கூல் ஆக "உங்களுக்கு எப்போவாவது தெரிஞ்சுதா?" என்று கேட்பதாகட்டும், அப்புறம் வந்தவர்கள் காபியை 'பிரமாதம்'என்று பாராட்டும் போது இருவரும் பார்வை பரிமாறுவதாகட்டும். இரண்டு நிமிடத்துக்குள் ஒரு சின்ன கதையே சொல்லி விடுகிறார்கள் அதுவும் முற்றிலும் யதார்த்தமாக. இந்த பெண் யாரோ. பாலச்சந்தர் பார்த்தால் அப்படியே அடுத்த படத்தில் போட்டு விடுவார். அவ்வளவு இயல்பான நடிப்பு. கால் சென்டிமீட்டர் மாத்திரம் கண்ணையும் உதட்டையும் அகட்டி குறும்பு, விஷமம், கிண்டல் எல்லாவற்றையும் வெளிபடுத்தும் திறமை அந்த பெண்ணிடம். முகமும் அவ்வளவு அழகாய் ஒத்துழைக்கிறது.
சில சமயம் தோன்றுகிறது இன்றைக்கு வரும் விளம்பரப் படங்களில் இருக்கும் creativity மற்றும் technical excellence முழு நீளப் படங்களில் கூட இல்லையோ என்று.
இங்கே சில நாட்களாக பதிவு செய்யப் பல தடைகள். சில நாட்கள் இணையத் தொடர்பில் குளறுபடி. சில நாட்கள் தமிழில் transliteration செய்வதில் தடங்கல்கள். எல்லாவற்றையும் மீறி இன்றைக்குப் பதிவு செய்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்தும் விட்டேன்.
அப்புறம் என்ன செய்தி, நீங்கள் சொல்லுங்கள்...
Monday, September 13, 2010
பாலக்காட்டுப் பக்கத்திலே ஒரு பண்டம்
ஏறக்குறைய ஒரே மாதிரி ருசி உள்ள பதார்தங்களுக்காக மிகவும் மெனக்கிடுவது எனக்குப் புரியாத விஷயம். இப்படித்தான் சேவை என்னும் சிற்றுணவை செய்வதற்கு எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மிகவும் சிரமம் எடுத்துக் கொள்வார்கள். இதை இடியாப்பம் என்றும் சொல்வார்கள். இப்போதெல்லாம் அது instant வடிவத்தில் கிடைக்கிறது. பாக்கெட்டை பிரித்து வெந்நீரில் கொதிக்க வைத்தால் தயார். ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் இது ஒரு industrial process போல அவ்வளவு சிரமமான சமாசாரம். அரிசியை ஊறவைத்து, இடித்து மாவு கிளறி அப்புறம் இதற்காகவே உபயோகப்படும் ஒரு இயந்திரத்தில் இந்த மாவை அடைத்து அதை மிகவும் சிரமப்பட்டுப் பிழிந்து பின்னர் இதற்கு வித விதமான தாளிதம் செய்து தயாரிப்பார்கள். இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் இசகு பிசகானாலும் பண்டத்தின் ருசி குறைந்து போகும். இறுதியில் பார்த்தால்
ருசி என்னமோ ஏறக்குறைய எலுமிச்சம்பழ சாதம், தேங்காய் சாதம் போலத்தான்
இருக்கும்.(சேவைப் பிரியர்கள் அடிக்க வராதீர்கள். 'ஏறக்குறைய' என்றுதான் முதலிலேயே சொன்னேனே .)
இப்படித்தான் ஒரு மாமி வீட்டில் ஒருமுறை மிகவும் கஷ்டப்பட்டு சேவை தயாரித்துக் கொடுத்தாள். நானோ நன்றாக சாப்பிட்டு விட்டு 'ஏன் மாமி இந்தக்
கஷ்டம் , வெறும் தேங்காய் சாதம் , எலுமிச்சம்பழ சாதமே கொடுத்திருந்தாலும் போதுமே ' என்று சொல்லிவிட்டேன் . மாமிக்கு வந்ததே கோபம். உனக்காக பட்டு நூல் போல சேவை பண்ணி இருக்கிறேன் இப்படி சொல்லி விட்டாயே என்று நொந்து போனாள்.
பிடி கொழுக்கட்டை என்றொரு சிற்றுண்டி. அரிசி உப்புமாவை அருமையாகத் தயாரித்துபின் அதை உருட்டி இட்லி போல வேக வைத்துக் கொடுப்பார்கள். ஏன் அதை உப்புமாவாகவே சாப்பிடலாமே. எதற்கு இன்னொரு கூடுதல் கட்டம்?
உடம்பு சுகம் இல்லாதவர்கள், வயதானவர் அல்லது குழந்தைகள் போன்ற ஜீரண சக்தி குறைதவர்களுக்கு இந்த இரட்டை வேக்காடுதேவைப்படும். மற்றபடி நாக்கு ருசிக்காகவே சாபிடுவோருக்கு இந்த கூடுதல் வேக்காட்டின் மூலம் ஒரு வித்யாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உருவம் மட்டும்தான் வேறுபடும். இல்லை ஒருவேளை ருசியும் நுணுக்கமாக வேறுபடுமோ எனக்குத்தான் அவ்வளவு தெரியவில்லையோ. அதுவும் தெரியாது. ஆனால் இத்தனை நுணுக்கமான சுவை வித்யாசத்துக்காக நான் மெனக்கிட மாட்டேன்.
ஆனாலும் இந்த ராமசெரி இட்லியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று வலை வீசிப் பார்த்ததில் கிடைத்தது இங்கே:
From http://en.wikipedia.org/wiki/Idli
Ramasseri idli
Ramasseri, an offbeat village in Palakkad is known all over Kerala for the idlis it makes—the delicious Ramasseri Idli. Spongy and soft Ramasseri Idli is slightly different in shape from the conventional idlis. It is a little flat and round. Ramasseri Idli is eaten with Podi mixed in coconut oil. The beginning was from a Mudaliar family living near Mannath Bhagavathi Temple in Ramasseri near Elappully.[citation needed]
The recipe of Ramasseri idli dates back to about one century, which again is a trade secret. The Muthaliyar family had migrated to Palakkad from Kanchipuram in Tamil Nadu. The new generation in the profession says that the secret of the recipe and taste were handed down to them from the older women of the community. Now the idli business is confined to four families in Ramasseri. Selection of rice is very important in making Ramasseri idli. Usually the varieties used are Kazhama, Thavalakannan, Ponni etc.
The taste depends on the boiling of paddy itself. Drying and dehusking are also important and need to be done in a particular way. The combination of rice and black gram is also equally important. For 10 kg of rice, one kg of black gram is used. Idli is made only after four hours of fermentation. Steaming of the idli is done on a cloth covered on the mud pot using firewood. This allegedly provides a special taste to the preparation. Leftover Idli can be torn into crumbs and used for preparing dishes such as Idli fry and Idli Upma.
இதை சமைக்கும் முறையை விளக்கும் எழுத்தும் புகைப்படமும் இங்கே:இப்போது புரிகிறது ஏன் அதனை முறை அந்தப பண்டத்தின் பெயரைத் திரும்ப திரும்ப சொன்னார்கள் என்று. அந்த சின்ன வட்டத்துக்குள் அவ்வளவு விஷயம் இருக்குது. இதை முதலிலேயே படித்து விட்டுப் போயிருந்தால் நானும் இதைப் பற்றி கொஞ்சம் சிலாஹித்துப் பேசி இருக்கலாம். அவர்களும் இவ்வளவு சிரமப்பட்டது வீண் போகவில்லை என்று சந்தோஷப் பட்டிருப்பார்கள். நீங்கள் அடுத்த முறை பாலக்காட்டுபக்கம் போனால் இதை கட்டாயம் ருசித்துப் பாருங்கள்.
ஸ்ஸ்ஸ்..அப்புறம் வந்து அதில் அப்படி என்ன ருசி இருக்கிறது என்று என்னிடம்சொல்லுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன் அந்த கற்பூர வாசத்தைபற்றி.
Monday, August 30, 2010
கதை அல்ல நிஜம்
செடிகளிடம் பேசுவது பாடுவது போன்ற வழிகளால் அவற்றை சிறப்பாக வளர்க்க முடியும் என்று பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இங்கே பெங்களூரில் லால்பாகில் இருக்கும் nursery யில் இதமான இசையை எப்போதும் போட்டு வைக்கிறார்கள். இதற்காகத்தான் என நினைக்கிறேன்.
நமது முன்னோர்களும் செடிகொடிகளுடன் இது போன்ற அன்பு, மரியாதையுடன் இருந்திருக்கிறார்கள் என்று என்னுடைய ஆசிரியை ஒருவர் சொல்வார். நாம் துளசிச் செடியிலிருந்து இலைகளைப் பறிக்கும் போதோ அல்லது பூஜைக்காக செடிகளிடம் பூக்கள் பறிக்கும்போதோ முதலில் அவற்றின் அனுமதி கேட்டுப் பின்னால்தான் பறிக்க வேண்டும். அப்படியே போய் பூவைக் கொய்வதோ கிளையை வெட்டுவதோ இயற்கையை அவமதிக்கும் செயல் என்பார்.
இவற்றை எல்லாம் பின்பற்றி இருந்தால் இன்று இப்படி ecological imbalance எல்லாம் வந்திருக்காது.
இன்றும் கிராமப்புறங்களில் இது போன்ற நம்பிக்கைகள், பழக்கங்கள் இருக்கின்றன. என்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சில நாட்களில் செடிகளை வெட்டக்கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பாள். ஒருமுறை புல்வெளியின் நடுவே மிளகாய்ச் செடி வளர்ந்திருக்கிறதே அதை வெட்டி அந்த பக்கம் வைக்கலாமே என்றேன். அதற்கு ' ஏன் வேண்டுமானால் அதை சுற்றிக் கொண்டு நீங்கள் நடக்கலாமே. அதுபாவம் இருந்து விட்டுப் போகிறது' என்று சொல்லிவிட்டு அதை அங்கேயே பாதுகாப்பாக வளர்த்தாள். கொஞ்சம் ஹிட்லர் மாதிரித் தோன்றினாலும் அவள் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது என்று நானும் விட்டு விட்டேன். அந்தச் செடியும் மிக நன்றி உணர்வோடு அளவுக்கு அதிகமாகவே மிளகாய் கொடுத்தது.
இதுபோல எங்கள் தோட்டத்தில் ஒரு பலாமரம் வளர்ந்திருந்தது. நானும் அது காய்க்கும் காய்க்கும் என்று ஆறு வருஷம் ஆசையாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது பெரிதாக வளர்ந்து கொண்டே போயிற்று ஆனால காய்ப்பதாக இல்லை. பக்கத்தில் இருந்த எலுமிச்சைச்செடி முருங்கை, கறிவேப்பிலை எல்லாம் வேறே இதன் நிழலில் காய்ந்து போய்க் கொண்டிருந்தன. சரி பலாமரத்தை வெட்டிவிடலாம் என்று தோட்டக்காரரிடம் சொன்னேன். அவர் 'பொறுங்கள் அம்மா காய்க்கும். ஒரு ஆணி கொடுங்கள்' என்று சொல்லி அதன் மேல் ஒரு ஆணியை அடித்தார். இனிமேல் காய்க்கும் பாருங்கள் என்று வேறே சொன்னார். வீட்டு வேலை செய்யும் அம்மா இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தவள் அந்த மரத்திடம் போய் பேச ஆரம்பித்தாள் : ' உன்னை அம்மா எதற்கு பாடுபட்டு வளர்கிறார்கள். உனக்கு கொஞ்சமும் நன்றியே இல்லையே. இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறாய். ஆனால் ஒரு பிஞ்சு கூட இல்லை. வெக்கமாக இல்லையா. இரு இப்படியே நீ இருந்தால் உன்னை வெட்டிதான் போட வேண்டும்" என்றெல்லாம் மரத்திடம்! எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. மூன்று மாதம் ஆன பின்னால் ஒரு நாள் என்னைக் கூப்பிட்டாள். போய் பார்த்தால் மரத்தில் 8 காய்கள். "பாத்தீங்களாம்மா, அன்னிக்கு என்னமோ சிரிச்சீங்களே. இப்போ பாருங்க. சுரணை வந்திருச்சு. எப்படி காய்ச்சு தொங்குது பாருங்க. நாம் பேசினா அதுக்கு புரியும்' என்றாள்.
எதை நம்புவது, நம்பாமல் இருப்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பலாப்பழங்கள் இனிப்பாக இருந்தன. அது மாத்திரம்தான் புரிந்தது. 'அம்மா தாயே அடுத்த வருஷமும் இது போல பழம் கொடு' என்று ஒரு application போட்டு வைத்திருக்கிறேன். அப்புறம் தோட்டப் பக்கம் போகும்போது ஏதும் எக்குத்தப்பாக பேசுவதில்லை. எதற்கு வம்பு?
Thursday, August 26, 2010
கல்யாணம் பண்ணிப் பார்
வீட்டில் ஒரு திருமணம் என்பது மகிழ்ச்சியான நிகழ்ச்சிதான்; அதைச் சிறப்பாகக் கொண்டாட நினைப்பது இயல்பே. ஆனால் கொண்டாடுவது என்றால் ஆடம்பரமாக செலவு செய்துதான் கொண்டாட வேண்டுமா என்ன? என்னதான் சொன்னாலும் பெண்ணுக்கு நகை புடவை போன்ற விஷயங்களை யாரும் குறைப்பதாக இல்லை. இதில் வேடிக்கை ஆன விஷயம் என்னவென்றால் இன்றைய இளம்பெண்கள் பலரும் தங்க நகை அணிவதை விரும்புவதும் இல்லை. ஆனாலும் பெற்றோர் விடுவதாக இல்லை. சம்பிரதாயம் என்று சொல்லி இருபது பவுனாவது போட்டு விடுகிறார்கள். இப்போதெல்லாம் ஒரு புதுக் கூத்து வேறே சேர்ந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளைப் பையனுக்கு செயின், மோதிரம் போக braceletடாம். எந்தப் பிள்ளை இதை எல்லாம் போட்டுக் கொண்டு இருக்கிறான் என்று புரியவில்லை. எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் மைனர்
வேடம் போடுபவர்கள்தான் இதெல்லாம் போட்டுக் கொண்டு அலைகிறார்கள். மற்றதெல்லாம் கழுத்தில் ஆபீஸ் id கார்டைத்தான் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது.
புடவை - பெண்ணுக்கு மட்டுமே ஐந்து ஆறு ஆடம்பரமான புடவைகள். புடவைக் கடைகளுக்கு இதுவே ஒரு பெரிய பிசினஸ். சாமுத்ரிக்கா, பரம்பரா என்று என்னென்னமோ பேர் சொல்லி புடைவைகள் - ஒன்றாவது 25 ஆயிரத்துக்குக் குறைவில்லை. இதில் விசேஷம் என்ன வென்றால் இந்தப் பெண்களில் முக்கால்வாசிக்கு மேல் புடவையே கட்டியது இல்லை இனியும் கட்டுவதாக இல்லை. திருமண விசேஷங்களுக்குப் புடவை கட்டி அலங்காரம் செய்வதற்கென்றே அலங்கார நிபுணர்கள் வருவார்கள். பெண்ணின் கூடவே இருந்து வேளாவேளைக்கு அலங்காரம் செய்வார்கள். சும்மா 25அல்லது 30 கொடுத்ததால் போதும் - ஆயிரங்கள்தான். அந்த வீடியோ விலும் போட்டோக்களிலும் அழகாக வரவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். அப்புறம் இந்தப் புடவைகள் அழகாக மடித்து கப்போர்ட் உள்ளே தூங்கும். அவ்வளவுதான். இதற்கு என் இதனை விலை கொடுத்து வாங்க வேண்டும். பேசாமல் convocation gown போல வாடகைக்கு எடுத்துவிடலாமே என்று தோன்றும். மேல் நாடுகளிலும் வெட்டிங் gown க்கு செலவழிக்கிறார்கள். ஆனால் அது ஒரு உடுப்புக்காக மட்டுமே. இங்கே சுமார் ஐந்தோ ஆறோ. இதெல்லாம் போக ஒரு ஒன்பது கஜம் புடவை வேறே - அந்தக் காலத்தில் பூஜை விரதம் போன்ற நாட்களில் 9 கஜம் உடுத்துவார்கள். இப்போதோ பலருக்கும் அதை உடுத்தவே தெரியாது. ஆனாலும் சம்பிரதாயமாய் அந்த தாலி கட்டும் வைபவத்துக்கு அதைக் கட்டாயம் அணிய வேண்டும். அப்புறம் அலமாரி உள்ளே அது தூங்க வேண்டும். சரி ஒரு மணி நேரத்துக்குத்தானே என்று சாதாரணமாக வாங்குவார்களா என்றால் அதுதான் இல்லை. இரண்டு பக்கமும் கெட்டி ஜரிகை போட்டு பெரிய புடவை வேண்டும். இல்லை என்றால் கல்யாணத்துக்கு வருபவர்கள் என்ன நினைப்பார்கள் என்பார்கள். ஒரு காலத்தில் ஆந்திரா மட்டும் கர்நாடகத்தில் முஹூர்த்ததின் போது மஞ்சளில் தோய்த்த காட்டன் புடவையைத்தான் மணப்பெண்ணுக்கு கட்டுவார்களாம். நான் பார்த்த கேரளா நாயர் திருமணத்திலும் பெண் அது போல லேசான ஜரிகை போட்ட வெளிர் சந்தன புடவைதான் கட்டி இருந்தாள். பெண்ணுக்கும் பிள்ளைக்கும் நெருங்கிய உறவினர்களும் அது போன்ற புடவை அல்லது முண்டு தாவணிதான் அணிந்திருந்தனர். இந்த ஆடம்பரப் பட்டுப் புடவைகள் எல்லாம் எப்போது சம்பிரதாயம் ஆயின என்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்க வேண்டும். எனகென்னமோ இவை புடவை உற்பத்தியாளர்களின் மார்க்கெட்டிங் திறமையால் உருவாக்கப்பட்ட சம்பிரதாயங்கள் என்றுதான் தோன்றுகிறது.
சானியா - ஷோயப் திருமணத்தின் போது கேள்விப்பட்டேன் பாகிஸ்தானில் விருந்துகளில் ஒரு சிறப்பு உணவு item மட்டுமே போட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது என்று. இந்தச் சட்டத்தை நம் நாட்டிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். நம் கல்யாண விருந்துகளில்தான் எத்தனை வீணடிக்கிறோம்! எத்தனை வகையான பொரியல், கூட்டு, எத்தனை வகை இனிப்புகள்! நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கு மேல் சர்க்கரை வியாதி கேஸ். இன்னும் பலருக்கு உடல் பருமன் தொல்லை. எத்தனையே ஆரோக்கியமாக இருந்தாலும் திரும்பத் திரும்ப விருந்து சாப்பாடு மூன்று வேளை சாப்பிட்டால் யாருக்கும் அஜீரணம்தான் வரும். ஒரே ஒரு வேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே கல்யாண விருந்து கொடுத்தால் போதுமே. அதிலும் எந்த மாதிரியான விருந்து என்று தீர்மானம் செய்து கொண்டு எல்லோருக்கும் அதே போடலாம். ஒரு பக்கம் தென்னிந்திய வகைகள், ஒரு பக்கம் வடை இந்திய உணவு, அப்புறம் chinese, ஒரு பக்கம் pasta, pizza, அது தவிர சாட், அப்புறம் தோசா கவுன்ட்டர், ஸ்வீட்ஸ் அது போக ஐஸ் கிரீம். இது போல் சாப்பிட வேண்டும் என்றால் ஹோடேலுக்குப் போகட்டுமே எதற்கு கல்யாணத்தில் இத்தனை வகைகள்? இப்படித்தான் செலவையும் wastage ஐயும் அதிகரிக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு திருமணத்தில் reception ; இப்படித்தான் எக்கச்சக்கமான சாய்ஸ். ஒரு ரவுண்டு பார்த்துக் கொண்டு வந்ததிலேயே வயிறு ரொம்பிப் போன உணர்வு. நேராக தயிர் சாதம் எங்கே என்று தேடித் பார்த்து அதை மட்டும் சாப்பிட்டு வந்து விட்டேன். அதற்கும் அந்த contractor 350 ரூபாய்தானே போடப்போகிறார்? என்னைப் போலப் பலரும் இருப்பார்கள். யாரால் அங்கே போடும் எல்லாவற்றையும் சாப்பிட முடியும்.?இல்லை சாபிட்டலும் யார் மறுநாள் அவதிப் படுவது?
இது எல்லாவற்றுக்கும் மேலான ஒரு வீண் செலவு என்னவென்றால் இந்தத் தாம்பூலத்தோடு ஏதோ பாத்திரங்கள் அல்லது fancy பொருட்கள் கொடுக்கிறார்களே அது எதற்கு? முக்கால்வாசி வீட்டில் அது வேலைக்காரிக்கு போகிறது. குழந்தைகளை பிறந்தநாள் கொண்டாட அழைக்கும்போது இது போல் பரிசு கொடுத்து அனுப்புவார்கள். வாழ்த்த வரும் குழந்தைகள் பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைக்கு பரிசு கொண்டு வருவார்கள். அதனால் அவர்கள் போகும்போது வெறும் கையோடு அனுப்ப வேண்டாம் என்று ஏதானும் ஒரு பொம்மையோ விளையாட்டு பொருளோ கொடுத்து அனுப்புவார்கள். கல்யாணத்துக்கு வரும் விருந்தினர் அனைவருக்கும் தாம்பூலம் தனித்தனியே கொடுக்க இயலாது என்பதற்காக உருவாக்கப்பட்ட conveneince இந்தப்பை. அதற்கும் மேலே அதனுள்ளே எதற்கு ஒரு ஸ்டீல் பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பா? மொய்க்கு பதில் மரியாதையா? ஏற்கனவே இருக்கும் செலவு போதாதென்று இது போல் ஏதானும் புதுப் புது 'சம்பிரதாயங்கள்' வேறு எதற்கு உருவாக்க வேண்டும்?
இப்போது கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கிறது என்று சொன்னேனே அந்தப் பெண்ணுக்கும் அவளுடைய தாயாருக்கும் இடையே நடந்த ஒரு சம்பாஷணையின் போது நானும் இருந்தேன். தாயார் பெண்ணுக்கு இன்னும் சில வெள்ளிப் பாத்திரங்கள் வாங்க வேண்டும் என்று சொன்னாள்அதற்கு கல்யாணம் ஆக இருக்கும் பெண் சொன்னாள்; "எதற்காக அம்மா, அவர்களோ கேட்கவில்லை. எனக்கோ இவை எல்லாம் உபயோகப் படவே போவதில்லை. இதை வீட்டில் பூட்டி வைத்து விட்டு நான் வேலைக்குப் போகும்போது கவலை வேறு பட வேண்டும். ஏன் வீணாக அலைகிறாய்?" என்று. அதற்கு அவள் தாயார் சொல்கிறாள்: "இதோ பார் சபையில் சில விஷயங்கள் வைத்தால்தான் கௌரவமாக இருக்கும். நீ உபயோகப் படுத்துவாயோ இல்லையோ அதை எல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் கொடுப்பதைக் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்" என்று.
இது என்ன லாஜிக்? கல்யாணத்தில் சீர் செய்வது பெண்ணுக்கும் பிள்ளைக்கும் உபயோகப்படுவதர்கா இல்லை ஊர் மக்களைத் திருப்திப்படுத்தவா?
ஆனால் பெரும்பான்மையான உயர் மத்தியத்தர மக்களின் மனோபாவம் இப்படித்தான் இருக்கிறது. "மாற்றம் தேவை ஆனால் நான் அதை செய்யத் தயாராக இல்லை. வேறு யாராவது முன்வந்து செய்தால் நான் அதை ஆதரிக்கத் தயார்."
என்னவோ போங்கள். இருக்கிறவர்கள் இது போலெல்லாம் செய்து ஒரு முன்னோடி உருவாக்கி விடுகிறார்கள். இது இல்லாதவர்களின் சுமையை அதிகரிக்கிறது. அப்புறம் பெண் குழந்தை என்றாலே செலவு என்ற ரீதியில் எண்ணங்கள். இதனால் கீழ்மட்டங்களில் பல வேண்டாத பின்விளைவுகள்.
இன்னொரு சட்டமும் வேண்டும்: இந்த தேர்தல் செலவுக்கு ஒரு உச்ச மட்டம் நிர்ணயித்திருப்பதைப் போல், திருமண செலவுக்கும் ஒரு உச்சமட்டம் கொண்டு வர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?
Wednesday, August 18, 2010
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
மரணத்தின் நிச்சயம் நம் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தாலும் நம்மைச் சுற்றியவர்களுக்கு முடிவு வரும்போது அது எவ்வளவு வயதானவர்கள் ஆனாலும் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எங்களுக்குத் தெரிந்தவர் ஒருவரது தாயார் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக கோமாவில் இருந்த போது அவருடைய மனைவி 'இது போல இருப்பதைவிட அவர் இறந்துவிடுவதே நலம்' என்று கூறியபோது அவரது கணவருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. 'கோமாவிலாவது என் அம்மாவை என்னால் பார்க்க முடிகிறதே என்று நான் ஆறுதல் அடைகிறேன் நீ எப்படி இது போல சொல்லலாம்' என்று கடுமையாக சண்டை போட்டார். அந்த அம்மாவுக்கு அப்படி ஒரு வாழ்வு தேவையா என்று அவர் யோசிக்கவே இல்லை. நமக்கு உகந்தவர்களின் மரணம் நம்மைக் கலங்க வைப்பது அவர்களுக்காகவா இல்லை நமக்காகவா என்று எனக்குத் தோன்றும்.
எனக்குத் தெரிந்த பலரும் இறப்பு என்ற யதார்த்தத்தைப் பற்றி யோசிக்கவே தயங்குபவர்களாகத்தான் இருக்கிறார்கள். இது போன்ற பேச்சை எடுத்தாலே 'சரி அபசகுனமாக எதாவது உளராதே' என்பார்கள். இல்லை என்றால் 'அது நடக்கும்போது அதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம். இப்போது சும்மா இரு' என்பார்கள். நாம் வாழ்கையின் மற்ற நிகழ்வுகளைப் பற்றி எல்லாம் நாம் யோசிக்கிறோம். அவற்றுக்காக திட்டமிட்டு செயல் படுகிறோம். ஆனால் இறப்பு என்பது மாத்திரம் பிறருக்கு மட்டுமே நடக்ககூடிய ஒன்று என்பது போல ஒதுக்கி வைத்து விடுகிறோம். சமீப காலத்தில் இன்சூரன்ஸ் கம்பனிகாரர்கள் மட்டுமே நமக்கு இறப்பின் நிச்சயத்தை நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து எந்த வீட்டிலுமே குடும்பமாக உட்கார்ந்து ' எனக்கு ஏதானும் நேர்ந்து விட்டால் ' என்ற scenario பற்றி நிதானமாக உணர்ச்சி வசப்படாமல் பேசி நான் பார்த்ததில்லை. நானே சில சமயம் என் மகனிடமோ மருமகளிடமோ வீட்டில் எந்தெந்த file எங்கிருக்கிறது என்று சொல்ல முயலும் போதெல்லாம் அவர்கள் என்னை அடக்கி விடுவார்கள் .அதெல்லாம் நேரம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம் என்று.
இன்னொரு நண்பருக்கு கான்செர் மிகவும் முற்றிய நிலையில் இன்னும் சில நாட்களே என்று இருந்த சமயத்தில் கூட அவர் வீட்டில் எல்லோரும் மரணத்தைப் பற்றி நினைக்க விரும்பவில்லை. என்னமோ எல்லாம் இயல்பாக இருப்பது போலவும் ' இதோ அவர் எழுந்து முன் போல் நடமாடப் போகிறார்' என்பது போலவும் நடந்து கொண்டார்கள். ஒரு வேளை அவர்கள் உண்மையை எதிர்கொண்டிருந்தால் அந்த சில நாட்களை இன்னும் அர்த்தமுள்ளவை ஆக்கி இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது அவருடன் வாய் விட்டுப் பேசி அவரது நிஜ உணர்வுகளையும், அவரது பயங்களையும் பற்றிப் பேச ஒரு வாய்ப்பு இருந்திருக்கலாம். இவர்களுக்கு நிஜத்தை எதிர் நோக்கும் பலம் இல்லாததினால் கடைசி நாட்களில் அவர் தனது உள்மனதின் பாரங்களை மனதிலேயே சுமந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டுவிட்டரோ என்று தோன்றியது. இதில் வேடிக்கை என்னவென்றால் நோயாளி உட்பட அத்துணை பேருக்கும் அவரது மரணத்தின் அண்மையைப் பற்றி தெரியும். ஆனாலும் யாரும் அதைப் பற்றி இயல்பாகப் பேசத் தயாராக இல்லை. மரணத்தின் பிடியில் இருக்கும் அவர் எத்துணை தனிமைப் பட்டு போயிருப்பார் இல்லை ?
நமக்குப் பிரியமானவர்கள் நம்மைப் பிரியும்போது ஏற்படக்கூடிய துக்கத்தை நான் மறுக்கவில்லை. பாசத்தால் ஏற்படும் அந்த வலி மிகவும் இயற்கை ஆனது. நான் சொல்ல வருவது என்னவென்றால் மரணம் என்ற நிகழ்வு நமக்கு அளிக்கும் அதிர்ச்சியை குறைக்க ஒரே வழி அதைப் பற்றி தெளிவாக சிந்திப்பதும் அதைப் பற்றி இயல்பாகப் பேசுவதும்தான். மரணத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டோமானால் இருக்கும் நாட்களை இன்னமும் தரத்தோடு வாழ்வோமா என்கிற கேள்விதான். அது யாருக்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்ற உணர்வு வந்தால் நம் வாழ்க்கையில் வன்மைகள் குறையுமோ? யாரும் சாஸ்வதம் இல்லை என்று தெளிந்து இருக்கும்போது பொறாமை, காழ்ப்புணர்ச்சி, பேச்சிலும் செயலிலும் வன்மை எல்லாம் குறையுமோ? எனக்குத் தெரிந்த வீட்டில் ஒரு பெண் அவரது மாமியாரை அவர் இருக்கும் வரை நோக அடித்து விட்டு இப்போது அவரது மறைவுக்குப் பின்னால் அவருக்கு ஸ்ரத்தையாக வருடாவருடம் திவசம் செய்கிறாள் - 25 வருடங்களாய். பலரும் இப்படித்தான் சொல்கிறார்கள் : 'இப்படி திடீர் என்று போய் விடுவார் என்று முன்னமே தெரிந்திருந்தால் அதை செய்திருப்பேன் இதை சொல்லி இருப்பேனே என்று. என்னமோ மரணம் என்பது அரியதான நிகழ்வு என்பதைப் போல.
மரணத்துக்குப் பின்னால் ஒருவரை நினைத்து நினைத்து அழுவதை விட அவரோடு இருக்கும் நாட்களை அன்புடனும் புரிதலுடனும் வாழ்வது இன்னும் சிறப்பல்லவா. ஒரு வேளை expiry தேதி குறிக்கப்பட்டு பிறந்தோமானால் பூமியில் வாழ்கை இன்னும் அர்த்தமுள்ளதாக வாழ்வோமோ என்னவோ?
Monday, August 2, 2010
சும்மாதான் ஹீ ஹீ
எனக்கு வைரமுத்துவின் அழகான வரிகள் நினைவுக்கு வந்தன:
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா
இந்த வரிகளைக் கூட அந்த பெண் இப்படித்தான் படிப்பாளோ என்னமோ:
வலிமிஹும் இடங்கல் வலிமிஹா இடங்கல் தமிழுக்கு தெரிகிந்ரதெ
வலிமிஹும் இடங்கல் வலிமிஹா இடங்கல் தங்கலுக்குத் தெரிகின்ரதா
இது மாதிரி உச்சரிக்கும் போது தமிழுக்கும், தமிழை நேசிப்பவர்களுக்கு எத்தனை வலிக்கும் என்று அந்த பெண்ணுக்கு எங்கே புரியப் போகிறது?
எப்படியும் பாடல வரிகளை யாரும் கவனிப்பதில்லை என்பதினால்தானோ 'ஆச்சா போச்சா' ' என்று எதையோ எழுதி பாடலைப் பதிவு செய்து விடுகிறார்கள். இசை நன்றாக அமைந்து விட்டால் அது வெற்றியும் ஆகிவிடுகிறது. தமிழ் படம் என்ற படத்தில் மிக அழகாக oh maha zeeya பாடலில் கிண்டல் செய்திருந்தார்கள். வார்த்தைகளுக்கு அர்த்தமே வேண்டாம். புரியாத மொழியில் இருந்தால் இன்னும் நலம். அப்படி இருக்கிறது நிலைமை. ரஹ்மான் க்கு இது போன்ற வார்த்தைகளின் மீது பயங்கர காதல் - 'கும்சும் கும்சும் குப்பச்சி, 'அஜூபா ஜுஜோபா' என்று எதாவது ஹம்மிங் வைத்து விடுவார். அதுவும் சூப்பர் ஹிட் ஆகிவிடும்.
ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு பாடல்களை வானொலியில் மட்டுமே கேட்க முடியும். அதனால் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் அதிகம். படங்களிலும் பாடல்கள் படத்தோடு ஒட்டி இருக்கும். இப்போது போல பொழுது போகவில்லை என்றால் சுவிட்சர்லாந்த்தில் ஒரு டூயட் இல்லை என்றால் கனவு சீன் என்பது போன்ற அமைப்புகள் இருக்காது. ஒரு படத்தின் பாடல வரிகளில் இருந்தே அந்த படத்தின் கதையை ஓரளவு யூகிக்க முடியும். படங்கள் மறந்து போய் விட்டாலும் பாடல்கள் நினைவில் நிற்கின்றன. வானம்பாடி என்றொரு படம். நிறைய பேருக்கு நினைவிருக்காது. ஆனால் அந்த படத்தில் வந்த 'கங்கைக் கரைத் தோட்டம்', 'ஏட்டில் எழுதி வைத்தேன்' , 'கடவுள் மனிதனாக வேண்டும்' போன்ற பாடல்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். அத்தனை அழகான, கருத்துள்ள பாடல்கள். இன்னும் சில பாடல்கள் ஏதோ நமக்காகவே நம் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டவை போலிருக்கும். இதனாலேயே அவை காலத்தை மீறி இன்றும் பசுமையாக இருகின்றன.
வானொலியில் கேட்கும்போது பாடல் வரிகளாலும், இசையாலும், பாடகர்களின் குரலாலும் அவ்வளவு பிடித்த அந்த பாடல்களை இன்று சில சமயம் தொலைக்காட்சியில் பார்க்கும்போது சற்று அதிர்ச்சி ஆகி விடுகிறது.
'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்' என்று ஒரு அருமையான பாடல். அந்தக் காட்சியை இப்போது சமீபத்தில்தான் ஒரு தொலைக்காட்சி சேனலில் பார்த்தேன். வெறுத்துப் போய் விட்டேன்: அசோகனுக்கு இப்படி ஒரு பாட்டு தேவையா என்று. அதே போல 'ரோஜா மலரே ராஜகுமாரி' என்று ஒரு அழகான melody. திரையில் பார்த்தால் சச்சுவும் ஆனந்தன் என்று ஒரு ஹீரோ(?யாரோ ?) வும். கோர்ட்டில் கேஸ் போடலாமா என்று கோபம் வந்தது எனக்கு. இப்போதும் சில படங்களில் இது போன்ற அநீதி நடக்கிறது. இந்த 'ஜீன்ஸ்' படத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். அந்த பிரஷாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய். இது முதல் அநியாயம் என்றால் பாடல்களுக்குக் குரல் ஹரி, உன்னி கிருஷ்ணன் . இதெல்லாம் கொஞ்சம் too much இல்லை? பாடல்களை கேட்டு விட்டு படத்துக்குப் போனவர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இது போலத்தான் அந்த மைக் மோகனுக்கும் ஒரு ராசி. பாட்டெல்லாம் பிரமாதமாக அமைந்து விடும். ' ஏதடா இளையராஜா, SPB, வைரமுத்து என்று ஒரு கூட்டணியே நமக்காக கஷ்டப்படுகிரார்களே' என்று கொஞ்சமாவது கஷ்டப்பட்டு நடித்தாரா என்றால் அதுதான் இல்லை. போதாக்குறைக்கு இவருக்கு என்று குரல் கொடுக்க வேறு ஒரு ஆள் - சுரேந்தர். இந்த மாதிரி அநியாயத்தின் உச்சகட்டம் 'பூவே செம்பூவே' என்ற பாடல் 'சொல்ல துடிக்குது மனசு' என்ற படத்தில். படத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும் என் கோபம்.
இதுக்கெல்லாம் ஒரு சட்டம் போட வேண்டும் இனிமேல். என்ன சொல்கிறீர்கள்?
இப்போது FM ரேடியோ வாயிலாகத் திரும்பவும் வானொலி கலாச்சாரம் முன்னுக்கு வந்து கொண்டிருதாலும், முன்னைப் போல பாடல்களை அனுபவிக்க முடியவில்லை. முன்பெல்லாம் தொகுப்பாளர்கள் பாடலைப் பற்றிய சுவையான விஷயங்களைச் சொல்லுவார்கள். அளவாகப் பேசி பாடல்களை முழுமையாக ஒலிபரப்புவார்கள். இப்போது எங்கே? இந்த RJ க்கள் பேசிப் பேசியே கழுத்தறுக்கிறார்கள். அதென்ன எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியே பேசுகிறார்கள் என்றும் புரியவில்லை. பாடல்களையும் பாதி பாதிதான் ஒலிபரப்புகிறார்கள். இது நிம்மதியாய் பாடல்களை அனுபவிக்க ஏற்றமாதிரி இல்லை. fast food மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவது மாதிரிதான் இருக்கிறது. பாட்டை இந்த மாதிரி அனுபவிக்க முடியுமா சொல்லுங்கள். இது இன்றைய இளைய தலைமுறையின் வாழ்கை முறையை சார்ந்ததாக இருப்பதினால் அவர்களுக்கு வேண்டுமானால் பிடிக்குமோ என்னமோ? அப்துல் ஹமீது போல வல்லினம் மெல்லினம் எல்லாம் சரியாக உச்சரித்து தமிழ் சினிமாப் பாடல்களைப் பற்றிய அபாரமான ஞானத்தோடு தொகுப்பவர்கள் எல்லாம் இன்றைய வானொலிகளுக்குத் தேவையில்லை. சும்மா பொழுதுபோக்காகப் பேசத் தெரிந்தால் போதும்.
ஹிஹிஹி, இதைப் படிக்கும்போதே புரிந்திருக்குமே எனக்கும் பொழுது போகவில்லை என்று. அதேதான். serious ஆக போஸ்ட் எழுத கை ஓடவில்லை. சரி இப்படி ஏதானும் oh maha zeeya மாதிரி அர்த்தமில்லாமல் கொஞ்சம் சத்தம் போட்டால் ஏதானும் inspiration வருகிறதா பார்ப்போமே என்றுதான். கோபித்துக் கொள்ளாதீர்கள்.
Thursday, July 29, 2010
மொழிப் பிரச்சினை
ஒரு நாள் நான் என் தோழிகளுடன் படம் பார்ப்பதற்கு ஒரு mall க்கு சென்றிருந்தேன். அங்கே வந்திருந்த காலேஜ் கூட்டம் எல்லாம் ஆங்கிலத்தில்தான் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது என் தோழி சொன்னாள் 'இன்றைய நகர்புற இளைஞர்களுக்கு அவரவர் தாய் மொழியே தெரிவதில்லை. தெரிந்தாலும் அவர்கள் அதை பேசுவதை இழிவாக நினைக்கிறார்கள்", இன்னொரு தோழி சொன்னாள் " ஐயே இதெல்லாம் சும்மா வெளிவேஷம். எதிர்பாராமல் கன்னத்தில் ஒரு அறை விட்டுப் பார் "ஐயோ அப்பா என்றுதான் கத்தும்"
அப்போது பார்த்து ஒரு பெண் ஏதோ தடுக்கி கீழே விழப்போனது. ஆனால் அதன் வாயிலிருந்து "ஐயோ, அம்மா' என்றெல்லாம் வரவில்லை. 'ouch' என்றுதான் சொல்லிற்று. உடனே நான் என் தோழியைக் கேட்டேன் "இப்போது என்ன சொல்கிறாய்?" என்று. அதற்கு அவள் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது. அவள் சொன்னாள்: " பார். இவர்களெல்லாம் மேலை நாகரீகத்தில் மூழ்கிப் போய் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் திறனைக் கூட இழந்து விட்டார்கள். எல்லாவற்றிலும் ஒரு செயற்கைப் பூச்சு இருக்கிறது. இதனால்தான்
இவர்கள் நிஜமான உணர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வரும் கணங்களில் உடைந்து போய் விடுகிறார்கள். அப்புறம் மனவியல் மருத்துவர்களைத் தேடிப் போகிறார்கள்" என்று.
இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு இன்னும் புரியவில்லை. ஆனால் கலாச்சார பூர்வமாக நம்முடைய உணர்வுகளை முழுமையாக ஒரு அந்நிய மொழியில் வெளிப்படுத்த முடியுமா என்பது எனக்கு ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. நாம் சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படுபவர்கள். எல்லாவற்றிலும் ஒரு தீவிரம் - தீக்குளிக்கும் அளவிற்கும் போகத் தயங்காதவர்கள். ஆங்கிலேயர்கள் உணர்சிகளை மிகவும் மிதமாக வெளிப்படுத்தும் தங்களது 'stiff upper lip' பற்றி பெருமை கொள்பவர்கள். அப்படிப்பட்டவர்களின் மொழியில் நமது ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியுமா என்பதுதான் எனது சந்தேகம். இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால் 'எந்த நாடானால் என்ன. கடைசியில் எல்லோரும் மனிதர்கள். எந்த ஊரானாலும், எந்தக் கலாசாரம் ஆனாலும் உணர்வுகள் என்பவை மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவானவைதானே. ஆழ்ந்த உணர்சிகளை வெளிப்படுத்த எந்த மொழியிலும் வகை இருக்கத்தானே செய்யும்" என்று.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Sunday, July 25, 2010
இங்கு ஏமாறப்படும்
சில நாட்கள் முன்பு என் மருமகளை ஏதோ ஒரு கடையின் முன்னால்இறக்கிவிட்டு அவள் வரும்வரை காரில் காத்துக்கொண்டிருந்தேன். இரண்டு பெண்மணிகள் ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமியோடு என் அருகே வந்து ஹிந்தியில் பேசத்தொடங்கினார்கள். அவர்கள் மும்பையிலிருந்து திருப்பதி போவதற்காக ரயிலில் வரும்போது அவர்கள் பெட்டி 7000 ரூ பணம் எல்லாம் திருட்டு போய் விட்டதாம். இப்போது ஊருக்குப் போவதற்கு பணம் கொடுத்தால் மும்பை சென்றதும் அனுப்பி விடுவார்களாம். ஒரு வேளை என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றால் குழந்தைகள் பசியோடு இருக்கிறார்கள், அவர்களுக்காவது நீங்களே ஏதானும் வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்றார்கள்.
என்னுடைய மிகப் பெரிய weakness குழந்தைகள். அதுவும் அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் என்றால் எனக்குத் தாங்காது. இது எப்படித்தான் அவர்களுக்குத் தெரிந்ததோ. எனக்கு மண்டைக் குடைச்சல் ஆரம்பித்து விட்டது. கையில் 200 ரூ இருந்தது. கொடுத்து விடலாமா என்று யோசித்தேன். ஒரு வேளை ஏமாற்றுப் பேர்வழிகளாக இருந்தால் என்று தோன்றியது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து 100 ரூபாயை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். என்ன இன்றைய விலைவாசியில் ஏதானும் டிபன் வாங்கி சாப்பிட்டிருப்பார்கள் அவ்வளவுதானே.
ஏமாந்தால் பரவாயில்லை. வாய் வாழ்த்தா விட்டாலும் வயிறு வாழ்த்தும் என்று சமாதானமும் சொல்லிக் கொண்டேன். வீட்டில் வந்து சொன்னதும் எல்லோரும் ஒரு மொத்தமாக என்னை ஏமாளி என்று சொல்லி விட்டார்கள். "அவர்கள் திருப்பதி போக வேண்டும் என்றால் பெங்களூருக்கு என் வந்தார்கள்? ரயிலில் எல்லாம் தொலைத்து விட்டு இங்கே நம் வீட்டருகே என்ன செய்து கொண்டிருந்தார்கள்? போலீசில் புகார் செய்தார்களாமா? என்றெல்லாம் வேறே என்னை குறுக்கு விசாரணை செய்து என்னை குற்றவாளி போல் ஆக்கி விட்டார்கள்.
இதில் கஷ்டம் என்னவென்றால் கொடுக்காமல் வந்திருந்தால் என் மனசாட்சி என்னைக் குடைந்து எடுத்திருக்கும். பாவம் சாப்பாட்டுக்குத்தானே கேட்கிறார்கள். எத்தனை அனாவசிய செலவு செய்கிறோம். சில சமயம் கோவில் உண்டியலில் 100 ரூ போடுவதில்லையா. ஒருவரின் பசியை தீர்ப்பது ஆண்டவனுக்கு செய்யும் சேவை போல்தானே என்றெல்லாம் நினைத்து நொந்து நூலாகிப் போயிருப்பேன்.
சில வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு இளம்பெண் ரோட்டோரத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள். கூட 10/ 12 வயதில் ஒரு சிறுவன். அந்தத் தெருவில் அவ்வளவாக நடமாட்டம் இருக்கவில்லை. நான் எங்கோ போய் விட்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தேன். அந்தப் பையன் ஓடி வந்து தன தாய்க்கு அடிக்கடி இது போல் நெஞ்சில் வலி வரும் என்றும் ஆஸ்பத்ரிக்கு அழைத்துப் போக வேண்டும் ஏதானும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டான். நான் உடனே 200 ரூ எடுத்துக் கொடுத்து ஆட்டோ வைத்துக் கொண்டு போகுமாறு கூறிவிட்டு வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினேன். கொஞ்ச தூரம் போனதும்தான் எனக்குத் தோன்றியது "சே நம்மிடமே கார் இருக்கிறது. நாமே கொண்டு விட்டிருக்கலாமே. ஏன் இது கூடத் தோன்றவில்லை. பாவம் அந்த சின்னப் பையன் எப்படி அழைத்துப் போவான். வழியில் அவன் தாய்க்கு ஏதானும் ஆகி விட்டால் என்ன செய்வது?" இப்படி எல்லாம் யோசித்துக் கொண்டு காரைத் திருப்பிக்கொண்டு அதே இடத்துக்கு திரும்ப வந்தேன். இருவரையும் காணவில்லை. கொஞ்ச தூரத்தில் பார்த்தால் எதிர் சாரியில் இருவரும் ஒன்றுமே நடக்காதது போல நடந்து போய்க் கொண்டிருந்தனர். அவளிடம் உடல் நலவுக் குறைவிற்கான ஒரு அடையாளமும் தென்படவில்லை.
எங்கே போய் முட்டிக்கொள்வது?
இது போன்ற விஷயத்தில் ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. பரம்பரை நடிகர்களா அல்லது அவர்களது வறுமை அல்லது கட்டாயம் அவர்களை அப்படி நடிக்க வைக்கிறதா என்று தெரியவில்லை, ஆஸ்கார் லெவெலில் நடிப்பார்கள். கண்ணீர் அனாயாசமாக வரும், வசனம் நெஞ்சைத் தொடும். அந்த சமயத்தில் எனக்கு அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்க எனக்குத் தோன்றாது. என்ன மிஞ்சிப் போனால் சாப்பாட்டுக்காகத்தானே இவ்வளவு நடிக்கிறார்கள். போகட்டும் என்று என் மன ஆறுதலுக்கு விலையாக கையில் இருப்பதில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டுஎன் வழியில் வந்து விடுவேன்.
என்னுடைய நண்பர்கள் பலரும் இதற்காக என்னைக் கிண்டல் செய்வதுண்டு. ஒருவர் சொல்வார்: "உஷாவுக்கு யாரானும் கையில் மிளகாயை வைத்துக் கொண்டு இருந்தாலே பிடிக்காது. உடனே சொல்வாள் ஐயோ, ஏன் மிளகாயை கையில் வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறீர்கள். இதோ என் தலை இருக்கிறதே. அதில் அரைத்துக் கொள்ளுங்கள் என்பாள். அதான் எல்லோரும் அவள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்" என்பார்.
இன்னொருவர் சொல்வார் "ஆமாம் அதே போல்தான் அவளுக்கு செக் புஸ்தகம் வெறுமே இருந்தாலும் பிடிக்காது. கை எழுத்துப் போட்டு யாருக்கானும் கொடுக்க வேண்டும் என்று துறு துறுக்கும்" என்று. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனாலும் இந்த கிண்டல் எல்லாம் பொறுக்காமல் இப்போதெல்லாம் நான் ஏமாறும் கதைகளை யாருக்கும் சொல்வதில்லை.
ஆனாலும் என் முகத்தில் எழுதி ஒட்டி இருப்பதாக அவர்கள் சொல்வது சரிதானோ என்று எனக்கே சந்தேகம் வரும்படி நேற்று ஒரு சம்பவம் நடந்தது. பெங்களூர் சென்ட்ரலில் ஏதோ வாங்கிக் கொண்டு வண்டியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. 'வேண்டாம். வண்டி இருக்கிறது' என்றேன். உடனே அந்த டிரைவர் சிரித்துக் கொண்டே (கன்னடத்தில்தான்) 'என்ன மேடம் மறந்து விட்டீர்களா, என்னைத் தெரியவில்லையா?' என்றார். எனக்கோ வர வரக் காலையில் சாப்பிட்ட சிற்றுண்டியே மறந்து போய் விடுகிறது. பலரது பெயர் மறந்து விடுகிறது. அதனால் ஒரு அசட்டுச் சிரிப்போடு 'இல்லை நினைவு வரவில்லை. நீங்களே சொல்லி விடுங்கள்" என்றேன். "நன்றாக யோசித்துப் பாருங்கள்' என்றார். அப்புறம் மெதுவாக "பாங்குக்கு வருவீர்களே. மறந்து போய் விட்டதா?" என்றார். நான் 'ஓஹோ பாங்கில் வேலை பார்த்தீர்களா " என்றேன். தான் பாங்கில் காஷியர் ஆக இருந்ததாகவும், சக்கரை நோய் அதிகமாகி காலை வெட்டும் அளவுக்குப் போய் விட்டதாகவும், பின்னர் voluntary retirement எடுத்துக் கொண்டு இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். முட்டி வரைக்குமே இருந்த காலையும் காட்டினார். அவ்வளவுதான் நெகிழ்ந்து போய் விட்டேன். அழாத குறைதான். உடனே அவர் அடுத்த ஆயுதத்தை எடுத்தார். குழந்தை இல்லை என்று வெகு நாள் வேண்டி மனைவி கர்ப்பமானதாகவும், ஆனால் முழு கர்ப்பமாக இருக்கும்போது கார் விபத்தில் இறந்து போய் விட்டதாகவும் சொன்னார். பின்னர் தாய் தந்தையைப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். தந்தை போன வருடம் கான்சரில் இறந்து போய் விட்டாராம். அவருக்கு 6 லட்சம் வரை செலவு செய்து வைத்யம் பார்த்தாராம். அதிலிருந்து மீண்டு வரும்போது தாய்க்கு ஏதோ பெரிய ஆபரேஷன் செய்ய வேண்டி வேலூரில் சேர்த்திருக்கிறாராம். திங்கள்கிழமை ஆபரேஷன் அதற்கு ஏதானும் உதவி செய்யுங்கள் என்று முடித்தார்.
இந்த மாதிரி யாரானும் உங்களிடம் வந்து சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
நான் என்ன செய்தேன் என்கிறீர்களா? என்ன செய்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?
Monday, July 19, 2010
அழகின் நிறம்
ஆனால் கூட இருந்த என் தங்கை உடனே சொன்னாள்: "யாரவது கொஞ்சம் வெளுப்பாய் இருந்தால் போதுமே உடனே அவர்களை அழகு என்றுவிடுவாய்."
இதற்கு ஒரு பின்னணி உண்டு. என் தங்கை பால் வெளுப்பு. நானோ 'மாநிறம்' என்று பூசி மெழுகப்படும் கருப்பு. சின்ன வயதில் பல முறை என் காது படவே
இந்த வேற்றுமை அடிக்கோடிட்டு பேசப்பட்டதுண்டு. உதாரணமாக இரண்டு பாவடைத் துணிகள் வாங்கி வந்து காண்பிக்கும்போது பாட்டி சொல்லுவாள்: "இந்த நீலம் சின்னவளுக்குப் பொருந்தும். பெரியவளின் நிறத்துக்கு கொஞ்சம் முகத்தில் அடிக்கிறார்போல இருக்கும். அவளுக்கு கொஞ்சம் லைட் கலர் ஆக எடுக்க வேண்டும்." அவர்கள் இதை யதார்த்தமாகவே சொல்லி இருக்கலாம். ஆனால் ஏழு எட்டு வயதில் என்னுடைய கலர் என்னமோ ஒரு வியாதி போல எனக்குத் தோன்றும். இல்லை என்றால் 'பெரியவள் கொஞ்சம் நேரம் கம்மி. சின்னவள் நல்ல கலர்' என்பார்கள்.
அந்த நாளில் குழந்தை மனோதத்துவம் , சரியான பேச்சு என்றெல்லாம் யாரும் மிகவும் கவலைப் பட்டதில்லை. பள்ளிக்கூடத்தில் ராஜகுமாரி வேடம் என்றால் சிவந்த தோலுடைய பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். நாங்களெல்லாம் சாமரம் வீசும் தோழி, அல்லது ஏதானும் நகைச்சுவை வேடத்துக்குதான் பொருந்துவோம். கதைப் புத்தகங்களிலும் தேவதைகள், பெண் கடவுள்கள், ராஜகுமாரிகள் எல்லாம் சிவப்பாகத்தான் இருப்பார்கள். ராட்சஷிகள், துர்தேவதைகள் , கெட்ட மந்திரவாதிகள் இவர்கள் எல்லாம்தான் கருப்பாகவும் பார்க்க அசிங்கமாகவும் இருப்பார்கள். வெளித்தோற்றம் உள்மனதை பிரதிபலிக்க வேண்டும் என்ற symbolism இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் கருப்பையும் அசிங்கத்தையும் கூட சேர்த்து வைத்ததுதான் தப்பு.
பெண் பார்த்து விட்டு வருவார்கள். 'பொண்ணு நல்ல செவப்பு' - இதை சொல்வதிலேயே ஒரு பிரமிப்பு இருக்கும். 'பொண்ணு மாநிறம்தான்" - இதை சொல்லும்போது குரல் தாழ்ந்து இருக்கும். இது ஒரு disqualification என்பது போல. "பொண்ணு கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாள்" என்பார்கள். இருந்தாலும் - அந்த வார்த்தையை தெளிவாக கவனிக்குமாறு கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய தோழி ஒருத்தி தந்தக் கலரில் இருப்பாள். அவளுடைய அக்கா மாநிறத்துக்கும் கீழே. இருவருக்கும் ஒரே வயதுதான் வித்யாசம். அக்காவைப் பெண் பார்க்க வரும்போதெல்லாம் அவளுடைய தாய் என் தோழியை யார் வீட்டுக்காவது அனுப்பிவிடுவாள். யாராவது இவளைப் பார்த்து விட்டு இவளை கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று விடப் போகிறார்களே என்று. இது அக்கா தங்கை இருவரது மனோ நிலையையும் எப்படி பாதித்திருக்கும் என்று நீங்களே புரிந்து கொள்ளலாம்.
பெண்களை வர்ணிக்கும் சினிமா பாடல்களும் ஒன்றும் குறைவில்லை:
கண் பார்வை தெரியாதவன் வர்ணிக்கும் பாடலில் கூட பெண்ணின் முகம் 'பொன்முகம்"என்றுதான் வர்ணிக்கப்படும். அல்லது நிலவுக்கு ஒப்பிடுவார்கள் - "முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி"
இல்லை என்றால் 'நிலவு ஒரு பெண்ணாகி நீந்துகின்ற அழகோ"!
இன்னும் ரொம்ப அழகு என்றால் ஓவர் ஆக போய்
"செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தில் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த பெண்
உடலை என்னவென்பேன்" என்பார்கள்.
இன்னொரு பாட்டில் கவிஞர் தெளிவாகவே சொல்வார் :
"அடி ஒம்போல செவப்பு இல்லை கணுக்கால் கூட கருப்பு இல்லை"
மொத்தத்தில் அழகான பெண் என்ற உடனேயே இந்தக் கவிஞர்களுக்கு நினைவு வருவதெல்லாம் நிலவு, சந்தனம், பொன், தாமரை, சிகப்பு, வெளுப்பு இவைதான். கருப்பான ஒரு பெண் எப்படி எல்லாம் வெறுக்கப்படுகிறாள் என்பது பற்றி ஒரு படமே எடுத்திருக்கிறார்கள். அதில் அந்தப் பெண் பாடுவாள்:
"மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா"
அறியாத புரியாத வயதிலிருந்தே இப்படி ஒரு கருத்து திணிக்கப்பட்டு விட்டால் நம்மை அறியாமல் சில அபிப்ராயங்கள் உருவாகிவிடுகின்றன. அவற்றை அழிப்பதோ அல்லது அவற்றால் பாதிக்கப் படாமல் இருப்பதோ அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. என்னுடைய மனத்திலும் எனக்கே தெரியாமல் இப்படி ஒரு காம்ப்ளெக்ஸ் வளர்ந்திருக்கலாம். ஆனால் ஓரளவு முதிர்ச்சி வந்த பிறகு என் கலரை பற்றி எல்லாம் நான் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.
"கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு" என்று ஏதோ ஒரு பாட்டில் எழுதினால் பலரும் கை தட்டினாலும் அவர்கள் திரையில் பார்க்க விரும்புவது வட இந்தியாவில் இருந்து இறக்குமதியான வெளுப்பான heroine களைத்தானே?
இதில் வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் தென்னிந்தியாவில் பொதுவான உடல் வண்ணம் மாநிறம்தான். இதனால்தானோ என்னமோ அபூர்வமான வெளுப்புத் தோலுக்கு இத்தனை மதிப்பு. சருமத்தை வெளுப்பாக்குவதாக சொல்லப்படும் கிரீம் தென்னிந்தியாவில்தான் அதிகமாக விற்பனை ஆகிறதாம். இதன் உற்பத்தியாளர்கள் இதைப் பற்றி விளம்பரம் செய்வதே - சிகப்பழகைப் பெறுவதற்குத் தேவையான அழகு சாதனம் என்று. அழகுக்கு சிகப்பாக இருந்தால் மட்டுமே போதும் என்பது மறைமுகமான குறிப்பு போலும்.
இப்போது இத்தோடு ஒரு புதுக் கொடுமை வேறே சேர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் சிறியவர்களாக இருந்த போது ஆண்கள் கலரைப் பற்றி அவ்வளவு கவலைப்பட மாட்டார்கள். இப்போது என்னவென்றால் அவர்களுக்கும் இந்த குழப்பம் வந்து விட்டது அல்லது உருவாக்கி விட்டார்கள். தன்னம்பிக்கை உருவாகவேண்டும் என்றால் இந்த சருமத்தை வெளுப்பாக்கும் கிரீம் உபயோகிக்க வேண்டுமாம்.
ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை நம்புகிறவள்தான் நான் - ஆனால் இந்த மாதிரி குழப்பங்களில் கூட இந்த சமத்துவம் தேவையா?
இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த' கருப்புக்கென்ன குறைச்சல்" அணியினர் கலாட்டா வேறே - வெளுப்பாக இருக்கிற பெண் நிஜமாகவே அழகாக இருந்தாலும் அதை சொன்னால் போராட்டமே நடத்துவார்கள் போல. வர வர வாயையே தொறக்க முடியலை - எதைச் சொன்னாலும் யாராவது ஒருத்தர் சண்டைக்கு வருகிறார்கள்.
கவிதை, சினிமா, சமுதாயத்தின் எண்ண ஓட்டம் - இது போன்ற பல்வேறு விதமான தாக்கங்களினால் சருமத்தின் வண்ணம் குறித்த இந்தப் பாகுபாடு நம் சமுதாயத்தின் ஆழ்மனதில் பதிந்து போய் விட்டதா? கருப்பு, வெளுப்பு இரண்டையும் மீறி அழகைப் பார்பதற்கு பார்ப்பதற்கு இனிமேல் வழியே இல்லையா?
Friday, July 9, 2010
எங்க மண்ணுக்கே ஒரு வாசம்
பல்வேறு வட்டாரங்களின் வசவுச் சொற்கள், சொற்ப்பிரயோகங்கள், இச்சொற்களின் மூலம் வெளிப்படும் வாழ்க்கைமுறைகள் என்றெல்லாம் மிக சுவாரஸ்யமான முறையில் கோபிநாத் இந்த கருத்தரங்கை நடத்தினார். சில மொழி ஆராய்ச்சி நிபுணர்களும், எழுத்தாளர்களும் கூட நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துக்களை சொன்னார்கள். தஞ்சை மாவட்டத்தைப் பற்றி இவர்கள் எல்லோருமே ஒப்புக்கொண்டது என்னவென்றால் தஞ்சை மண்ணுக்கு வட்டார வழக்கு என்பது கிடையாது. அது பல்வேறு அரசர்களின் நேர்பார்வையில் இருந்த வட்டாரமானதால் அங்கு பெரும்பாலும் எழுதப்படும் தமிழே அதாவது வரி
வடிவமான தமிழே உபயோகப்படுத்தப்பட்டது அதனால் தஞ்சையில் வட்டாரச் சொற்கள் மிகவும் குறைவு என்று அவர்கள் கூறினர்.
இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் எங்கள் வீட்டில் பேசப்படும் தமிழைக் கேட்பவர் எவரும் சில நொடிகளில் கேட்டு விடுவார்கள்:
"நீங்க தஞ்சாவூரா?" என்று.
இத்தனைக்கும் நாங்கள் ஒன்றும் செந்தமிழில் பேசுவதில்லை. என்ன, மதுரை, கோயம்பத்தூர் தமிழ் போல எங்கள் பேச்சில் ஒரு ராகம் இருக்காது. நிதானமாக அவசரமே இல்லாமல் பேசுவோம். பிரபஞ்சன் சரியாக சொன்னார் அந்தக் கருத்தரங்கில்: " நிதானமாக வெத்திலையில் சுண்ணாம்பு தடவிக்கொண்டு பேசுவதுபோல் இருக்குமாமா தஞ்சாவூர் பேச்சு.
பிரத்தியேகமான சொற்ப்ரயோகங்கள் என்று பார்த்தால்
நொரநாட்டியம், திருவாழத்தான், சதிராடறது, காண்டுக்கோல், கட்டுவாய், சாணிச்சுருணை, ஓக்காளித்தல், ஈஷிக்கறது, தீர்த்தமாடறது, தம்பிடி, லங்கிணி, தாஜா பண்றது, திலாவறது, முடை,ஜாகை, சவுக்கம், இளப்பம், வெளக்குமாத்துக் கட்டை, மென்னி, பாஷாங்கராகம், பீத்தல், சுருக்க
இது போன்ற சில பிரயோகங்கள் எங்களூர்காரர்களிடம் மட்டுமே கேட்டிருக்கிறேன்.
(Ed: முதலில் ராங்கி, சோப்ளாங்கி, பொம்மனாட்டி, கிராதகன், அவ்வளூண்டு, இவ்வளூண்டு, கொல்லைப்பக்கம் போன்ற வார்த்தைகளையும் சேர்த்திருந்தேன். ஆனால் குறும்புக்காரி மற்றும் என்னுடைய தங்கையார் இந்த லிஸ்ட்டை மறுக்கிறார்கள். அவர்கள் கட்சி என்னவென்றால் இவை எல்லாம் தமிழ் பிராமணர்களிடையே சகஜமாக உபயோகமாகும் வார்த்தைகள். தஞ்சை மண்ணுக்கே சொந்தமானவை அல்ல என்பதாகும். இந்த லிஸ்டுக்கு ஆதாரமே கிடையாது. இது என்னுடைய அபிப்ராயம் மட்டும்தான்.)
இவற்றுக்கெல்லாம் மேலாக தஞ்சாவூர்காரர்கள் பேச்சில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அவர்கள் பேச்சினிடையே சர்வசாதாரணமாக
அடிபடும் பழமொழிகளும், வஜனங்களும். நேரிடையாக ஒரு விஷயத்தை சொல்வதை விட மறைமுகமாக இந்த வசனங்களின் மூலம் உணர்த்துவதில் மிகத் திறமைசாலிகள். சில சமயம் இவை நக்கல் செய்வதற்காகவும் உபயோகிக்கப்படும்.
உதாரணமாக இன்னொருவருடைய பொருளை தாராளமாக உபயோகிப்பவர்களைப் பற்றி கூறுவதற்கு:
ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே
என்பார்கள்.
ஒருத்தி வழக்கத்துக்கும் அதிகமாக கோபத்தைக் காட்டினால்
ஏற்கனவே துர்க்குணி அதிலும் கர்ப்பிணி
என்பார்கள்.
மற்ற வட்டாரத்தவர்களும் இதுபோலபேசுவார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் இப்படிப் பேசுவதை கேட்டு என் நண்பர்கள் எல்லாம் வியந்து போவார்கள்.
சம்பந்தமே இல்லாதவரிடம் உறவு கொண்டாடுவதைச் சொல்ல இது போல் சொல்வார்கள்:
வாச்சானுக்கு போச்சான் மதனிக்கு உடப்பிறந்தான்
என்பது போல உறவு என்று.
இதையே இன்னொரு விதமாக இன்னும் நீட்டி முழக்கி சொல்வார்கள்:
பூவாளூர் சந்தையிலே உங்கள் மாமா கூடையும் எங்கள் சித்தப்பா கூடையும் இடித்துக் கொண்டு இருந்தன
என்பது போல உறவு என்று. அவர்கள் இவ்வளவு விஸ்தாரமாக சொல்வதிலேயே தெரியும் எத்தனை தூரத்து உறவு என்று.
இன்னும் சில உபமானங்கள்:
விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினாப்ல
யானைக்கு கோமணம் கட்டின மாதிரி
ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி
நெருப்பைக் குளிப்பட்டினாப்போலே
கடைஞ்ச மோர்லே வெண்ணை எடுக்கற மனுஷன்
தாம்பும் அரதல் தோண்டியும் பொத்தல்
சீலை இல்லேன்னு சின்னாயி வீட்டுக்குப் போனாளாம் அவள் ஈச்சம்பாயைக்
கட்டிண்டு எதுத்தாப்போலே வந்தாளாம்
அடியே ங்கரத்துக்கு ஆம்படையானைக் காணுமாம்
புள்ளைக்கு பேர் வெச்சாச்சு
சந்தான கோபால கிருஷ்ணன்னு
இப்படிப் பல. இவைகளுக்கு என்ன அர்த்தம் என்று புரிகிறதல்லவா? பாருங்கள் எவ்வளவு நக்கல், கிண்டல், ஹாஸ்யம், அதே சமயத்தில் சொல்லவந்தது எவ்வளவு தெளிவாக சொல்லப்படுகிறது. எதையும் பூசி மெழுகும் வழக்கம் கிடையாது 'தேங்காயையும் கல்லையும் எதிர் எதிரே போட்டு உடைப்பது போல' ஒரு பேச்சு. 'Political incorrectness" என்றால் தஞ்சாவூர்தான்.
தி ஜானகிராமன் அவர்களது கதைகளைப் படிக்கும்போதே ஏதோ எங்கள் உறவினர்கள் உரையாடுவதைப் போலத் தோன்றும்.
சில வஜனகளுக்குப் பின்னே ஒரு கதையே இருக்கும்
உதாரணமாக ஒருவர் முதலில் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டுப் போன பொருளை பின்னால் வந்து கேட்டால்
சொவத்துக் கீரைய வழிச்சுப் போடடி சொரணை கேட்ட வெள்ளாட்டி
என்பது போல வந்தான் என்பார்கள்
இதன் பின்னே உள்ள கதை என்னவென்றால் வயலில் வேலை செய்து விட்டு வேளாளன் மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்தானாம். வாரம் முழுவதும் மனைவி கீரையும் சோறுமே வைத்துக்கொண்டிருந்தாளாம். மறுபடியும் அன்று கீரையும் சோறும் பார்த்துக்கோபமாகி அந்த கீரைச் சட்டியை சுவற்றில் விசிறி அடிக்கப் போக கீரை எல்லாம் சுவற்றில் அப்பி கொண்டதாம். பின்னர் இரவுச் சாப்பாட்டின் போது வெறும் சோறு மட்டும்தான் இருந்தது. அப்போது வேளாளன் சொன்னானாம்:
'சுவத்துக் கீரைய வழிச்சுப் போடடி ' என்று. அவள் ஏதானும் கிண்டலாக சொல்லி விட்டால் என்ன செய்வது? அதற்காக அவனே முந்திக் கொண்டு அவளை
'சொரணை கெட்ட வெள்ளாட்டி' என்றானாம். எப்படிக் கதை?
இது போல் பல கதைகள் சொல்வார்கள். சில கதைகள் மற்றவட்டாரங்களுக்கும் பொதுவானாலும் இவர்கள் சொல்லும் விதமே தனி. இதோ ஒரு உதாரணம்:
மருமகள் குளத்துக்குத் தண்ணி எடுக்க போய் தாமதமாகத் திரும்பினாளாம். மாமியார் கேட்டாளாம்:
"மேனா மினுக்கியரே என் மூத்த மகன் தேவியரே
தண்ணி எடுக்க போன இடத்தில் தாமசங்கள் ஏனடியோ"
என்று.
மருமகள் உடனே அழுது கொண்டே போய் கணவனிடம் சொன்னாளாம்:
"சொமமழகரே துப்பட்டிக்காரரே
உங்கம்மா என்னை உருக உருக சொன்னா "
என்று
அவன் போய் தாயாரைக் கேட்டானாம்:
"கடுகாய் சிறுத்தவரே காசாம்பு மேனியரே
என் இடை சிறுத்த செம்பகத்தை என்ன சொன்னீர் மாதாவே?" என்று
அம்மாவுக்கு வந்ததே பாக்கணும் கோவம்:
"பீத்த முறமே நான் பெருக்கி வெச்ச வாருகல்லே
நான் ஆத்தாங்கரையோட போறவரைக்கும்
என்னை அம்மான்னு கூப்புடாதேடா கட்டேல போறவனே" அப்படீன்னு
சொன்னாளாம்.
எப்படி? செம descriptive இல்லை டயலாக் எல்லாம்? கதை சொல்லச் சொன்னால் ஸ்கரிப்டோட டிராமாவே ரெடி. ஒவ்வொருவருடைய கேரக்டர் எவ்வளவு நயமாக வெளிப்படுகிறது பாருங்கள்.
பின்னால் ஒரு தரம் இன்னும் ஒரு கதை சொல்கிறேன். அதற்குள் உங்கள் வட்டாரத்தின் சுவாரஸ்யமான் வழக்குகளைப் பற்றி கமென்ட் எழுதலாமே?