Monday, July 19, 2010

அழகின் நிறம்

சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் ஒரு தூரத்து உறவினர் தனது மகளை அறிமுகம் செய்து வைத்தார். அந்த பெண்ணைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துப் போயிற்று. எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் விதம், குழந்தை போன்ற அவளது முகம், புத்திசாலித்தனமான பேச்சு, இவை அனைத்துக்கும் மேலாக அவளது un-self-conscious behaviour (இதை தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை) சிலர் பழகும் விதத்தைப் பார்த்ததுமே தெரியும் - அவர்கள் பிறரைக் கவர்வதற்காக, அவர்கள் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று. இன்னும் சிலருக்கு தான் நன்றாக் இருக்கிறோம் என்பது தெரியும் அதை பிறரும் உணர்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களது ஒரொரு அசைவும் கணக்கு போட்ட மாதிரி இருக்கும். எதிலும் ஒரு spontaneity இருக்காது. இது பல பிரபலங்களுக்கும் முக்கியமாக மாடல் அழகிகளுக்கும் பொருந்தும். நான் பார்த்த அந்த பெண்ணிடம் இது போன்ற எந்த விதமான குண லக்ஷணங்களும் இருக்கவில்லை. அதுதான் என்னைக் கவர்ந்தது.
ஆனால் கூட இருந்த என் தங்கை உடனே சொன்னாள்: "யாரவது கொஞ்சம் வெளுப்பாய் இருந்தால் போதுமே உடனே அவர்களை அழகு என்றுவிடுவாய்."
இதற்கு ஒரு பின்னணி உண்டு. என் தங்கை பால் வெளுப்பு. நானோ 'மாநிறம்' என்று பூசி மெழுகப்படும் கருப்பு. சின்ன வயதில் பல முறை என் காது படவே
இந்த வேற்றுமை அடிக்கோடிட்டு பேசப்பட்டதுண்டு. உதாரணமாக இரண்டு பாவடைத் துணிகள் வாங்கி வந்து காண்பிக்கும்போது பாட்டி சொல்லுவாள்: "இந்த நீலம் சின்னவளுக்குப் பொருந்தும். பெரியவளின் நிறத்துக்கு கொஞ்சம் முகத்தில் அடிக்கிறார்போல இருக்கும். அவளுக்கு கொஞ்சம் லைட் கலர் ஆக எடுக்க வேண்டும்." அவர்கள் இதை யதார்த்தமாகவே சொல்லி இருக்கலாம். ஆனால் ஏழு எட்டு வயதில் என்னுடைய கலர் என்னமோ ஒரு வியாதி போல எனக்குத் தோன்றும். இல்லை என்றால் 'பெரியவள் கொஞ்சம் நேரம் கம்மி. சின்னவள் நல்ல கலர்' என்பார்கள்.
அந்த நாளில் குழந்தை மனோதத்துவம் , சரியான பேச்சு என்றெல்லாம் யாரும் மிகவும் கவலைப் பட்டதில்லை. பள்ளிக்கூடத்தில் ராஜகுமாரி வேடம் என்றால் சிவந்த தோலுடைய பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். நாங்களெல்லாம் சாமரம் வீசும் தோழி, அல்லது ஏதானும் நகைச்சுவை வேடத்துக்குதான் பொருந்துவோம். கதைப் புத்தகங்களிலும் தேவதைகள், பெண் கடவுள்கள், ராஜகுமாரிகள் எல்லாம் சிவப்பாகத்தான் இருப்பார்கள். ராட்சஷிகள், துர்தேவதைகள் , கெட்ட மந்திரவாதிகள் இவர்கள் எல்லாம்தான் கருப்பாகவும் பார்க்க அசிங்கமாகவும் இருப்பார்கள். வெளித்தோற்றம் உள்மனதை பிரதிபலிக்க வேண்டும் என்ற symbolism இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் கருப்பையும் அசிங்கத்தையும் கூட சேர்த்து வைத்ததுதான் தப்பு.

பெண் பார்த்து விட்டு வருவார்கள். 'பொண்ணு நல்ல செவப்பு' - இதை சொல்வதிலேயே ஒரு பிரமிப்பு இருக்கும். 'பொண்ணு மாநிறம்தான்" - இதை சொல்லும்போது குரல் தாழ்ந்து இருக்கும். இது ஒரு disqualification என்பது போல. "பொண்ணு கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாள்" என்பார்கள். இருந்தாலும் - அந்த வார்த்தையை தெளிவாக கவனிக்குமாறு கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய தோழி ஒருத்தி தந்தக் கலரில் இருப்பாள். அவளுடைய அக்கா மாநிறத்துக்கும் கீழே. இருவருக்கும் ஒரே வயதுதான் வித்யாசம். அக்காவைப் பெண் பார்க்க வரும்போதெல்லாம் அவளுடைய தாய் என் தோழியை யார் வீட்டுக்காவது அனுப்பிவிடுவாள். யாராவது இவளைப் பார்த்து விட்டு இவளை கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று விடப் போகிறார்களே என்று. இது அக்கா தங்கை இருவரது மனோ நிலையையும் எப்படி பாதித்திருக்கும் என்று நீங்களே புரிந்து கொள்ளலாம்.

பெண்களை வர்ணிக்கும் சினிமா பாடல்களும் ஒன்றும் குறைவில்லை:
கண் பார்வை தெரியாதவன் வர்ணிக்கும் பாடலில் கூட பெண்ணின் முகம் 'பொன்முகம்"என்றுதான் வர்ணிக்கப்படும். அல்லது நிலவுக்கு ஒப்பிடுவார்கள் - "முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி"
இல்லை என்றால் 'நிலவு ஒரு பெண்ணாகி நீந்துகின்ற அழகோ"!
இன்னும் ரொம்ப அழகு என்றால் ஓவர் ஆக போய்
"செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தில் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த பெண்
உடலை என்னவென்பேன்" என்பார்கள்.

இன்னொரு பாட்டில் கவிஞர் தெளிவாகவே சொல்வார் :
"அடி ஒம்போல செவப்பு இல்லை கணுக்கால் கூட கருப்பு இல்லை"

மொத்தத்தில் அழகான பெண் என்ற உடனேயே இந்தக் கவிஞர்களுக்கு நினைவு வருவதெல்லாம் நிலவு, சந்தனம், பொன், தாமரை, சிகப்பு, வெளுப்பு இவைதான். கருப்பான ஒரு பெண் எப்படி எல்லாம் வெறுக்கப்படுகிறாள் என்பது பற்றி ஒரு படமே எடுத்திருக்கிறார்கள். அதில் அந்தப் பெண் பாடுவாள்:
"மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா"
அறியாத புரியாத வயதிலிருந்தே இப்படி ஒரு கருத்து திணிக்கப்பட்டு விட்டால் நம்மை அறியாமல் சில அபிப்ராயங்கள் உருவாகிவிடுகின்றன. அவற்றை அழிப்பதோ அல்லது அவற்றால் பாதிக்கப் படாமல் இருப்பதோ அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. என்னுடைய மனத்திலும் எனக்கே தெரியாமல் இப்படி ஒரு காம்ப்ளெக்ஸ் வளர்ந்திருக்கலாம். ஆனால் ஓரளவு முதிர்ச்சி வந்த பிறகு என் கலரை பற்றி எல்லாம் நான் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.

"கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு" என்று ஏதோ ஒரு பாட்டில் எழுதினால் பலரும் கை தட்டினாலும் அவர்கள் திரையில் பார்க்க விரும்புவது வட இந்தியாவில் இருந்து இறக்குமதியான வெளுப்பான heroine களைத்தானே?
இதில் வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் தென்னிந்தியாவில் பொதுவான உடல் வண்ணம் மாநிறம்தான். இதனால்தானோ என்னமோ அபூர்வமான வெளுப்புத் தோலுக்கு இத்தனை மதிப்பு. சருமத்தை வெளுப்பாக்குவதாக சொல்லப்படும் கிரீம் தென்னிந்தியாவில்தான் அதிகமாக விற்பனை ஆகிறதாம். இதன் உற்பத்தியாளர்கள் இதைப் பற்றி விளம்பரம் செய்வதே - சிகப்பழகைப் பெறுவதற்குத் தேவையான அழகு சாதனம் என்று. அழகுக்கு சிகப்பாக இருந்தால் மட்டுமே போதும் என்பது மறைமுகமான குறிப்பு போலும்.
இப்போது இத்தோடு ஒரு புதுக் கொடுமை வேறே சேர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் சிறியவர்களாக இருந்த போது ஆண்கள் கலரைப் பற்றி அவ்வளவு கவலைப்பட மாட்டார்கள். இப்போது என்னவென்றால் அவர்களுக்கும் இந்த குழப்பம் வந்து விட்டது அல்லது உருவாக்கி விட்டார்கள். தன்னம்பிக்கை உருவாகவேண்டும் என்றால் இந்த சருமத்தை வெளுப்பாக்கும் கிரீம் உபயோகிக்க வேண்டுமாம்.
ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை நம்புகிறவள்தான் நான் - ஆனால் இந்த மாதிரி குழப்பங்களில் கூட இந்த சமத்துவம் தேவையா?

இதெல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த' கருப்புக்கென்ன குறைச்சல்" அணியினர் கலாட்டா வேறே - வெளுப்பாக இருக்கிற பெண் நிஜமாகவே அழகாக இருந்தாலும் அதை சொன்னால் போராட்டமே நடத்துவார்கள் போல. வர வர வாயையே தொறக்க முடியலை - எதைச் சொன்னாலும் யாராவது ஒருத்தர் சண்டைக்கு வருகிறார்கள்.

கவிதை, சினிமா, சமுதாயத்தின் எண்ண ஓட்டம் - இது போன்ற பல்வேறு விதமான தாக்கங்களினால் சருமத்தின் வண்ணம் குறித்த இந்தப் பாகுபாடு நம் சமுதாயத்தின் ஆழ்மனதில் பதிந்து போய் விட்டதா? கருப்பு, வெளுப்பு இரண்டையும் மீறி அழகைப் பார்பதற்கு பார்ப்பதற்கு இனிமேல் வழியே இல்லையா?

7 comments:

 1. Varumaiyin Niram Sivappu
  Azhagin Niramo Veluppu
  Idhai Kandu Edarku Mugasulippu
  Padhivu Pramadham, Pattayai Kilappu

  Nice post ! Skin pigmentation related discussions are usually no-win situations

  btw - I put up the Tanjai/Tiruchi phrases post last week.

  ReplyDelete
 2. aiyo kavidhai....kavidhai!
  kaommentai padichadum en vayile ore sirippu!

  I feel this skin tone complex has been ingrained deep in our psyche due to centuries of conditioning. Maatharadhu romba kashtam.

  ReplyDelete
 3. விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்னமோ வெள்ளை நிறம் pigmentation குறைவால் ஏற்படுவதாக சொல்கின்றன.எனகென்னமோ இந்த பாகுபாடுக்கு காரணம் நம்மை ஆண்ட வெள்ளையர்கள் விட்டு சென்ற legacy என்று தோன்றுகிறது. இந்தியர்கள் வெள்ளையனுக்கு அடி பணிந்து அவன் செய்வது சொல்வது எல்லாவற்றையும் பின் தொடர வேண்டிய விஷயங்களாக ஏற்றுக்கொண்டதன் விளைவு என்று தோன்றுகிறது.

  Whatever be the background the discrimination is very much there. But on the other hand, there is also this other discrimination where the woman has to be good looking and none of her other qualities bear any significance to the reckoning which I think is more appalling. And the irony is that the women are the major culprits in this.

  ReplyDelete
 4. எனக்கும் இது ஒரு colonial hangover என்றுதான் தோன்றுகிறது. அது நம்முடைய collective psyche யில் பதிந்து போய் விட்டது. மற்ற societal prejudices போலத்தான் இதுவும். அறியாத பருவத்திலிருந்தே நம்மையச் சுற்றிலும் இதை அனுபவித்து நாமும் அதில் ஒரு participant ஆகி விடுகிறோம். சமீப காலத்தில்தான் இது தவறு என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த விழிப்புணர்வு நம்முள் ஊறி நாம் இதில் இருந்து அறவே விடுபட இன்னும் பல தலைமுறைகள் ஆகுமோ என்னமோ.
  ஒருவரின் அழகை வைத்து அவரை மதிப்பிடுவது - அது சமீப காலத்தில் அதிகமாகிக் கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன். இதற்கு முக்கிய காரணம் விளம்பரத் தொழில். அழகின் மதிப்பை உயர்த்துவதர்காகத்தானே அவர்கள் லட்ச லட்சமாக பணத்தை இறைத்து அழகானவர்களை உபயோகிக்கிறார்கள்? இவர்களும் மறைமுகமாக வெள்ளை= அழகு என்ற விதமான எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 5. idha pathi konja naalave naan yosichundu irundhen. Ippo ellam, indha fairness cream ad jaasthiya ayidthu. Men kum fairness cream vandhacha... maari maari iva pandra alambal thaanga mudiyala. gender sterotypes tag nereya paakaren. I think ada madhiri, namma society la, neraya stereotyping irukku.. caste, skin colour, state and so on. One of my friends told me that when foreigners touched the shores of Cochin for the first time in history, the natives went and fell on their feet thinking they must be Gods - as no one else could have such a skin colour.. I don't know about the authenticity of the story though. Apparam Karuppu dhan Dravidaragalin unmai niram,appidi ippidinu ellam pesinalum, vellai thol vada Indhia nadigaigal pala varudangalaga Kollywoodukku irakkumathy seiyapaduvathu, height of hypocrisy.

  ReplyDelete
 6. http://news.yahoo.com/s/yblog_upshot/vaseline-ad-campaign-sparks-controversy-over-skin-whitening-creams

  This Indian Ad is causing great havoc in US. read the comments on this blog!!

  One African American lady had commented something like "I hate the culture which celebrates fair skin!!!!".

  ReplyDelete
 7. Krishan: Thanks for the link. Interesting arguments.

  ReplyDelete