Sunday, July 25, 2010

இங்கு ஏமாறப்படும்

சில பேரைப் பற்றி சொல்வார்கள் :" அவள் சரியான ஏமாளி என்று அவள் முகத்திலேயே எழுதி ஒட்டி ஒருக்கிறது " என்று. அந்த மாதிரி ஏதோ ஒரு மெசேஜ் என் முகத்தில் இருக்கிறது போல் இருக்கிறது. நாங்கள் கூட்டமாய் நாலு பேர் போனாலும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் எல்லோரும் என்னிடம்தான் வருவார்கள். ஏதானும் ஒரு கதை சொல்லிஎன் மனத்தைக் கரைப்பார்கள்.
சில நாட்கள் முன்பு என் மருமகளை ஏதோ ஒரு கடையின் முன்னால்இறக்கிவிட்டு அவள் வரும்வரை காரில் காத்துக்கொண்டிருந்தேன். இரண்டு பெண்மணிகள் ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமியோடு என் அருகே வந்து ஹிந்தியில் பேசத்தொடங்கினார்கள். அவர்கள் மும்பையிலிருந்து திருப்பதி போவதற்காக ரயிலில் வரும்போது அவர்கள் பெட்டி 7000 ரூ பணம் எல்லாம் திருட்டு போய் விட்டதாம். இப்போது ஊருக்குப் போவதற்கு பணம் கொடுத்தால் மும்பை சென்றதும் அனுப்பி விடுவார்களாம். ஒரு வேளை என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றால் குழந்தைகள் பசியோடு இருக்கிறார்கள், அவர்களுக்காவது நீங்களே ஏதானும் வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்றார்கள்.
என்னுடைய மிகப் பெரிய weakness குழந்தைகள். அதுவும் அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் என்றால் எனக்குத் தாங்காது. இது எப்படித்தான் அவர்களுக்குத் தெரிந்ததோ. எனக்கு மண்டைக் குடைச்சல் ஆரம்பித்து விட்டது. கையில் 200 ரூ இருந்தது. கொடுத்து விடலாமா என்று யோசித்தேன். ஒரு வேளை ஏமாற்றுப் பேர்வழிகளாக இருந்தால் என்று தோன்றியது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து 100 ரூபாயை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். என்ன இன்றைய விலைவாசியில் ஏதானும் டிபன் வாங்கி சாப்பிட்டிருப்பார்கள் அவ்வளவுதானே.
ஏமாந்தால் பரவாயில்லை. வாய் வாழ்த்தா விட்டாலும் வயிறு வாழ்த்தும் என்று சமாதானமும் சொல்லிக் கொண்டேன். வீட்டில் வந்து சொன்னதும் எல்லோரும் ஒரு மொத்தமாக என்னை ஏமாளி என்று சொல்லி விட்டார்கள். "அவர்கள் திருப்பதி போக வேண்டும் என்றால் பெங்களூருக்கு என் வந்தார்கள்? ரயிலில் எல்லாம் தொலைத்து விட்டு இங்கே நம் வீட்டருகே என்ன செய்து கொண்டிருந்தார்கள்? போலீசில் புகார் செய்தார்களாமா? என்றெல்லாம் வேறே என்னை குறுக்கு விசாரணை செய்து என்னை குற்றவாளி போல் ஆக்கி விட்டார்கள்.
இதில் கஷ்டம் என்னவென்றால் கொடுக்காமல் வந்திருந்தால் என் மனசாட்சி என்னைக் குடைந்து எடுத்திருக்கும். பாவம் சாப்பாட்டுக்குத்தானே கேட்கிறார்கள். எத்தனை அனாவசிய செலவு செய்கிறோம். சில சமயம் கோவில் உண்டியலில் 100 ரூ போடுவதில்லையா. ஒருவரின் பசியை தீர்ப்பது ஆண்டவனுக்கு செய்யும் சேவை போல்தானே என்றெல்லாம் நினைத்து நொந்து நூலாகிப் போயிருப்பேன்.

சில வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒரு இளம்பெண் ரோட்டோரத்தில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள். கூட 10/ 12 வயதில் ஒரு சிறுவன். அந்தத் தெருவில் அவ்வளவாக நடமாட்டம் இருக்கவில்லை. நான் எங்கோ போய் விட்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தேன். அந்தப் பையன் ஓடி வந்து தன தாய்க்கு அடிக்கடி இது போல் நெஞ்சில் வலி வரும் என்றும் ஆஸ்பத்ரிக்கு அழைத்துப் போக வேண்டும் ஏதானும் உதவி செய்ய முடியுமா என்று கேட்டான். நான் உடனே 200 ரூ எடுத்துக் கொடுத்து ஆட்டோ வைத்துக் கொண்டு போகுமாறு கூறிவிட்டு வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினேன். கொஞ்ச தூரம் போனதும்தான் எனக்குத் தோன்றியது "சே நம்மிடமே கார் இருக்கிறது. நாமே கொண்டு விட்டிருக்கலாமே. ஏன் இது கூடத் தோன்றவில்லை. பாவம் அந்த சின்னப் பையன் எப்படி அழைத்துப் போவான். வழியில் அவன் தாய்க்கு ஏதானும் ஆகி விட்டால் என்ன செய்வது?" இப்படி எல்லாம் யோசித்துக் கொண்டு காரைத் திருப்பிக்கொண்டு அதே இடத்துக்கு திரும்ப வந்தேன். இருவரையும் காணவில்லை. கொஞ்ச தூரத்தில் பார்த்தால் எதிர் சாரியில் இருவரும் ஒன்றுமே நடக்காதது போல நடந்து போய்க் கொண்டிருந்தனர். அவளிடம் உடல் நலவுக் குறைவிற்கான ஒரு அடையாளமும் தென்படவில்லை.
எங்கே போய் முட்டிக்கொள்வது?

இது போன்ற விஷயத்தில் ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. பரம்பரை நடிகர்களா அல்லது அவர்களது வறுமை அல்லது கட்டாயம் அவர்களை அப்படி நடிக்க வைக்கிறதா என்று தெரியவில்லை, ஆஸ்கார் லெவெலில் நடிப்பார்கள். கண்ணீர் அனாயாசமாக வரும், வசனம் நெஞ்சைத் தொடும். அந்த சமயத்தில் எனக்கு அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்க எனக்குத் தோன்றாது. என்ன மிஞ்சிப் போனால் சாப்பாட்டுக்காகத்தானே இவ்வளவு நடிக்கிறார்கள். போகட்டும் என்று என் மன ஆறுதலுக்கு விலையாக கையில் இருப்பதில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டுஎன் வழியில் வந்து விடுவேன்.

என்னுடைய நண்பர்கள் பலரும் இதற்காக என்னைக் கிண்டல் செய்வதுண்டு. ஒருவர் சொல்வார்: "உஷாவுக்கு யாரானும் கையில் மிளகாயை வைத்துக் கொண்டு இருந்தாலே பிடிக்காது. உடனே சொல்வாள் ஐயோ, ஏன் மிளகாயை கையில் வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறீர்கள். இதோ என் தலை இருக்கிறதே. அதில் அரைத்துக் கொள்ளுங்கள் என்பாள். அதான் எல்லோரும் அவள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள்" என்பார்.
இன்னொருவர் சொல்வார் "ஆமாம் அதே போல்தான் அவளுக்கு செக் புஸ்தகம் வெறுமே இருந்தாலும் பிடிக்காது. கை எழுத்துப் போட்டு யாருக்கானும் கொடுக்க வேண்டும் என்று துறு துறுக்கும்" என்று. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனாலும் இந்த கிண்டல் எல்லாம் பொறுக்காமல் இப்போதெல்லாம் நான் ஏமாறும் கதைகளை யாருக்கும் சொல்வதில்லை.

ஆனாலும் என் முகத்தில் எழுதி ஒட்டி இருப்பதாக அவர்கள் சொல்வது சரிதானோ என்று எனக்கே சந்தேகம் வரும்படி நேற்று ஒரு சம்பவம் நடந்தது. பெங்களூர் சென்ட்ரலில் ஏதோ வாங்கிக் கொண்டு வண்டியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. 'வேண்டாம். வண்டி இருக்கிறது' என்றேன். உடனே அந்த டிரைவர் சிரித்துக் கொண்டே (கன்னடத்தில்தான்) 'என்ன மேடம் மறந்து விட்டீர்களா, என்னைத் தெரியவில்லையா?' என்றார். எனக்கோ வர வரக் காலையில் சாப்பிட்ட சிற்றுண்டியே மறந்து போய் விடுகிறது. பலரது பெயர் மறந்து விடுகிறது. அதனால் ஒரு அசட்டுச் சிரிப்போடு 'இல்லை நினைவு வரவில்லை. நீங்களே சொல்லி விடுங்கள்" என்றேன். "நன்றாக யோசித்துப் பாருங்கள்' என்றார். அப்புறம் மெதுவாக "பாங்குக்கு வருவீர்களே. மறந்து போய் விட்டதா?" என்றார். நான் 'ஓஹோ பாங்கில் வேலை பார்த்தீர்களா " என்றேன். தான் பாங்கில் காஷியர் ஆக இருந்ததாகவும், சக்கரை நோய் அதிகமாகி காலை வெட்டும் அளவுக்குப் போய் விட்டதாகவும், பின்னர் voluntary retirement எடுத்துக் கொண்டு இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். முட்டி வரைக்குமே இருந்த காலையும் காட்டினார். அவ்வளவுதான் நெகிழ்ந்து போய் விட்டேன். அழாத குறைதான். உடனே அவர் அடுத்த ஆயுதத்தை எடுத்தார். குழந்தை இல்லை என்று வெகு நாள் வேண்டி மனைவி கர்ப்பமானதாகவும், ஆனால் முழு கர்ப்பமாக இருக்கும்போது கார் விபத்தில் இறந்து போய் விட்டதாகவும் சொன்னார். பின்னர் தாய் தந்தையைப் பார்த்துக் கொண்டு இருந்தாராம். தந்தை போன வருடம் கான்சரில் இறந்து போய் விட்டாராம். அவருக்கு 6 லட்சம் வரை செலவு செய்து வைத்யம் பார்த்தாராம். அதிலிருந்து மீண்டு வரும்போது தாய்க்கு ஏதோ பெரிய ஆபரேஷன் செய்ய வேண்டி வேலூரில் சேர்த்திருக்கிறாராம். திங்கள்கிழமை ஆபரேஷன் அதற்கு ஏதானும் உதவி செய்யுங்கள் என்று முடித்தார்.
இந்த மாதிரி யாரானும் உங்களிடம் வந்து சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

நான் என்ன செய்தேன் என்கிறீர்களா? என்ன செய்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?

4 comments:

  1. Here's my guess: You would have gone your way after politely chatting with him some more

    (Making a mental note to get appropriate sob stories and associated tear-duct overdose ready in the off chance that I'll meet you sometime)

    ReplyDelete
  2. Forgot to mention - the new blog template looks nice. Its understated and classy - just the way I imagine the writer of this blog to be

    ReplyDelete
  3. அடடா, இப்படி கடைசில என்ன நடந்ததுனு சொல்லாம விட்டுட்டேளே! எதாவது பண "உதவி" செஞ்சேளா இல்ல எதுக்கு வம்புனு தப்பிச்சு பிழைச்சு வந்துட்டேளா, ஒன்னும் தெரியலையே. சொல்லிடுங்கோ! அப்பறம், இந்த மாதிரி, பணம் திருடு போய்டுத்து, கொஞ்சம் பணம் தந்தீங்கனா டிக்கெட் எடுத்து நாங்க எங்க ஊருக்கு போய் சேருவோம்னு சொல்லி காசு பறிக்க ட்ரை பண்றவங்களுக்கு நான் ஒரு trick வெச்சுருக்கேன். இங்கே பக்கத்துக்கு போலீஸ் ஸ்டேஷன்ல தான் எங்க அப்பாவோட friend வேலை பண்றார். அவர் கிட்ட, உங்க பணம் திருடு போனதுக்கு ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டா கண்டிப்பா அவரால முடிஞ்சா உதவி செய்வார். நானே அப்பறம் உங்களுக்கு சாப்பாட்டு செலவுக்கும், travel செலவுக்கும் பணம் தர்றேன்னு சொல்லுவேன். அதுக்கு அப்பறம் பாருங்க, அவங்க உங்க பக்கம் திரும்ப கூட மாட்டாங்க.

    ஒரு இன்சிடென்ட் நினைவுக்கு வர்றது. நானும் என் friend உம், பெரம்பூர் ஸ்டேஷன் ல train க்கு வெயிட் பண்ணிண்டு இருந்தோம். ஒரு சின்ன பையன். 4 வயசு இருந்திருக்கும். அக்கா காசு கொடுக்கா. சாப்டனும்கா ன்னு ஒரே படுத்தல். அவ அம்மா பிச்சை எடுக்கறா. ஆனா நல்லா வாட்ட சாட்டமா இருக்கா. நான் இத மாதிரி இருக்கறவங்களுக்கு எல்லாம் காசு போட மாட்டேன்னு முகத்த திருப்பிண்டேன். என்ன கெஞ்சினாலும் எங்க காசு கெடைக்காதுன்னு புரிஞ்சிண்ட அந்த பையன், என்னையும் என் friendaiyum பாத்து, போங்கடா க******ளான்னு அசிங்கமா திட்டிட்டு போய்ட்டான். எங்க நேரம்னு நாங்க பேசாம சிரிச்சிட்டு விட்டுட்டோம்.

    ஒரு தடவை, நானும், 500 ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்தில் 800 ரூபாய் கொடுத்துருக்கேன். அந்த சோகக் கதையை அப்பறம் சொல்றேன்.

    ReplyDelete
  4. PV: Fortunately I had just 50 rupees in my purse that day so it was easy for me to get out of the situation. But I did go through a guilt trip all the way home.
    Thank you for the sweet words - understated yes, classy? mmm, i'd like to believe.

    Kurumbs: Kaile panam irukkalai adhunale thappichu vandutten. vidhikke ennoda asttuthanam porukalai polirukku. inimel ticket tholainju pochu panam thirudu pochungaravargalukku nanum indha police station trick use pannap poren. thanks.
    apram andha asingamaana vasavu ennanu theriyaliye.
    andha sogakkadhaya konjam seekirama sollungalen. enakkum aarudhalaa irukkum.

    ReplyDelete